முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 577

இருளைப் போக்குவதுமான நிலவுதானோ

Updated On : 7 ஜூன், 2017 at 12:00 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 8:11 PM

பதச் சேதம்

சொற் பொருள்

பரவு நெடுங்கதிர் உலகில் விரும்பிய பவனி வரும்படி அதனாலே

Advertisement

 

பரவு: பரவப்படும், போற்றப்படும்; நெடுங்கதிர்: நீண்ட (கிரணங்களையுடைய) சூரியன்; வரும்படி: வருகின்ற விதம்;

பகர வளங்களு(ம்) நிகர விளங்கிய இருளை விடிந்தது நிலவாலே 

 

பகர வளங்களும்: சொல்லத்தக்க வளங்களுக்கும்; நிகர விளங்கிய: நிகராக விளங்குகின்ற;

வரையினில் எங்கணும் உலவி நிறைந்தது வரிசை தரும் பதம் அது பாடி

 

வரையினில்: மலையினில்;  வரிசை தரும்பதம்: சீரான (காட்சியைத்) தருகின்ற பாதம்;

வளமொடு செந்தமிழ் உரைசெய அன்பரு(ம்) மகிழ வரங்களும் அருள்வாயே

 

வளமொடு: வளத்தோடு கூடிய; உரைசெய: உரைத்திட;

அரஹர சுந்தர அறுமுக என்று உ(ன்)னி அடியர் பணிந்திட மகிழ்வோனே

 

என்றுனி: என்று உன்னி (உன்னி: நினைத்து, தியானித்து);

அசல நெடுங்கொடி அ(ம்)மை உமை தன் சுத குறமகள் இங்கித மணவாளா

 

அசல(ம்): மலை; அசல நெடுங்கொடி: (இமய) மலையில் தோன்றிய கொடிபோன்ற; அமை உமை: அம்மையான உமாதேவியார்; சுத: சுதனே, மகனே; இங்கித: இனிய;

கருத அரு திண்புய சரவண குங்கும களபம் அணிந்திடு மணி மார்பா

 

கருதஅரு: நினைப்பதற்கும் அரிய; களபம்: கலவை; மணி மார்பா: அழகிய மார்பனே;

கனக மிகும்பதி மதுரை வளம்பதி அதனில் வளர்ந்து அருள் பெருமாளே

 

கனக(ம்) மிகும்பதி: பொன்வளம் நிறைந்ததான;

பரவு நெடுங்கதி ருலகில் விரும்பிய பவனி வரும்படி யதனாலே... (எல்லோரும்) போற்றுகின்ற நீண்ட கதிர்களை உடையதும்; உலகிலே விரும்பியபடி பவனி வருவதுதானோ இந்தத் திருவடி* (என்றும்);

(இப்பாடலின் இரண்டாமடியில் உள்ளதான ‘வரிசை தரும் பதம்’ என்பது இந்த வாக்கியத்தின் எழுவாய் என்பதாலே ‘இந்தத் திருவடி (பாதம்)’ என்பதனை ஒவ்வோரிடத்திலும் கூட்டிக் கொள்ள வேண்டும்.

பகர வளங்களு நிகர விளங்கிய இருளை விடிந்தது நிலவாலே... (போற்றிச்) சொல்லத் தகுந்த எல்லா வளங்களுக்கும் நிகரானதும்; இருளைப் போக்கியபடி உதிப்பதுமா நிலவுதானோ இந்தத் திருவடி (என்றும்);

வரையினி லெங்கணும் உலவி நிறைந்தது வரிசை தரும்பதம் அதுபாடி... மலைகளின் எல்லா இடங்களிலும் உலவியதும்; நிறைந்ததும்; சீராகக் காட்சிதருவதுமான உன்னுடைய திருப்பாதங்கள் என்றெல்லாம் நான் பாடி;

வளமொடு செந்தமிழுரைசெய அன்பரு மகிழ வரங்களும் அருள்வாயே .... வளமிக்கதான செந்தமிழ்ப் பாக்களால் உன்னைப் போற்றவும்; அதைக் கேட்கும் அன்பர்கள் மனம் மகிழவும் வரங்களைத் தந்தருள்வாயாக.

அரஹர சுந்தர அறுமுக என்றுனி அடியர் பணிந்திட மகிழ்வோனே... ‘ஹரஹர’ என்றும்; ‘சுந்தரனே’ என்றும்; ‘ஆறுமுகனே’ என்றும் அடியார்கள் உன்னை நினைத்து வணங்குகையில் மகிழ்பவனே!

அசலநெடுங்கொடி அமையுமை தன்சுத குறமகள் இங்கித மணவாளா... இமவான் மகளும்; சிறப்புமிக்க கொடியைப் போன்றவளுமான அம்மை உமாதேவியாரின் மகனே!  குறமகள் வள்ளியின் இனிய மணாளனே!

கருதரு திண்புய சரவண குங்கும களபம் அணிந்திடு மணிமார்பா... நினைக்கவும் முடியாத திண்மையான புயங்களைக் கொண்ட சரவணனே!  குங்கும, சந்தனக் கலவையை அணிந்துள்ள அழகிய திருமார்பனே!

கனக மிகும்பதி மதுரை வளம்பதி யதனில் வளர்ந்தருள் பெருமாளே... பொன்னின் வளம் நிறைந்தான மதுரை என்ற வளமான தலத்திலே வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

‘அரஹர’ என்றும்; ‘அழகனே’ என்றும்; ‘ஆறுமுகனே’ என்றும் அடியார்கள் உன்னை நினைத்து வணங்குவதில் மகிழ்ச்சி கொள்பவனே! இமவானின் மகளும் சிறப்புமிக்க கொடியைப் போன்றவருமான உமையம்மையின் மகனே!  குறமகளான வள்ளியின் மணாளனே!  நினைத்துப் பார்க்கவும் முடியாத திண்மையான புயங்களை உடைய சரவணனே!  திருமார்பில் குங்கும, சந்தனக் கலவைகளை அணிந்தவனே!  பொன்னின் வளம் நிறைந்த மதுரையான வளம் மிக்க தலத்திலே வீற்றிருக்கின்ற பெருமாளே!

மலைகளின் எல்லா இடங்களிலும் உலவுவதும்; நிறைந்ததும்; சீரான தரிசனத்தைத் தந்தருள்வதுமான உன் திருப்பாதம், ‘எல்லோராலும் போற்றப்படும் நீண்ட கதிர்களை உடைய கதிரவன்தானோ’; போற்றத் தகுந்த எல்லா வளங்களுக்கும் நிகரானதும், இருளைப் போக்குவதுமான நிலவுதானோ’ என்றெல்லாம் வளமிக்க செந்தமிழால் நான் உன்னைப் போற்றிப் பாடவும்; அதைக் கேட்கும் எல்லா அடியார்களும் மகிழ்ச்சி கொள்ளவும் வரங்களைத் தந்தருள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.