பகுதி - 757
ஞானம் அளிப்பவனுமாகிய
பதச் சேதம் | சொற் பொருள் |
கற்பக ஞான கடவுள்முன் Advertisement
| கற்பக: கற்பக விருட்சத்தைப் போல; ஞானக் கடவுள்: ஞானத்தைத் தரும் கடவுளே; முன்: முன்னர்; அண்டத்தில்: தேவலோகத்தில்; புதசேனைக்கு: தேவ சேனைக்கு (தேவானைக்கு அல்லது தேவர்களுடைய சைனியத்துக்கு); கள்: தேன்; கழை பாகு: கரும்புப் பாகு—வெல்லம்; |
கட்டிளநீர் முக்கனிபயறு அம்
| கட்டிளநீர்: கட்டியும் இளநீரும் (கட்டி: கற்கண்டு); தொப்பையின்: தொப்பையில்; தந்தி: யானை—வினாயகர்; கட்டிளையாய்: வலிமை நிறைந்த இளையவனே (கட்டிளம் காளை என்பது போல்); பரியாய: பரி ஆகிய, வாகனமாகிய; |
பொன் சிகியாய்கொத்து உருள்
| பொற்சிகியாய்: அழகிய மயிலை உடையவனே (பொன்: அழகிய); கொத்து உருள்: திரளாக உருளும்; சரி நாத: சரியாக (சீராக) உள்ளதும் ஒலிப்பதுமான; பரிபுரம்: சிலம்பு; |
பொன் புகழ் பாடி சிவபதமும்
| ஆகத்து அமுதை: உடலில் (உண்டாகக் கூடிய) அமுதத்தை; |
தெற்பம் உள ஆகதிரள் பரி
| தெற்பம்: போர்ச் செருக்கு; ஆக: உடலை உடைய; பரி: |
திக்கு கயம் ஆடசிலசில பம்பை
| திக்கயம்: திக்கு யானைகள்; பம்பை: பறை வகை; பேரி: பேரிகை, முரசு; |
உற்பனமாக தடி படுசம்பத்து
| உற்பனமாக: தோற்றம் கொடுக்க; தடி: மின்னல்; சம்பத்து: இடியின் (சம்பம்: இடி); கன மலர்: மிகுதியான மலர்; |
உள் பொருள் ஞானகுற
| உள்பொருள்: உண்மையான பொருள்; உம்பல் சித்திரை: (உம்பல்: யானை—ஐராவதம், சித்திரை: அழகை உடைய); யானை வளர்த்தவரான தேவானை; |
கற்பக ஞானக் கடவுள் முன் அண்டத்தில் புத சேனைக்கு அதிபதி... கற்பக விருட்சத்தைப் போன்றனும் ஞானம் அளிப்பவனுமாகிய கடவுளே! முற்காலத்தில் தேவர்களுடைய சேனைக்குத் தலைமையேற்றவனே!
இன்பக் கள் கழை பாகு அப்பம் அமுது வெண் சர்க்கரை பால் தேன்... இனிய தேன்சுவை கொண்ட வெல்லப் பாகு, அப்பம், சோறு, வெள்ளைச் சர்க்கரை, பால், தேன்,
கட்டிளநீர் முக்கனி பயறு அம் பொன் தொப்பையின் ஏறிட்டு அருளிய தந்திக் கட்டு இளையாய்... கற்கண்டு, இளநீர், முக்கனி, பயறு முதலானவற்றை அழகிய தொப்பையில் ஏற்றருளுகின்ற (யானையாகிய) வினாயகருடைய வலிமை நிறைந்த இளவலே!
பொன் பதம் அது இறைஞ்சிப் பரியாய பொன் சிகியாய்... உனது திருப்பாதத்தை வணங்கி உனக்கு வாகனமாக அமைந்த அழகிய மயிலை உடையவனே!
கொத்து உருண் மணித் தண்டைபொன் சரி நாதப் பரி புர என்றுப் பொற்பு உற ஓதிக் கசிவொடு சிந்தித்து இனிதே யான்... திரளாகவும் உருண்டையாகவும் உள்ள மணி பதித்த தண்டையையும்; இனிய ஓசையைக் கொண்ட சிலம்பையும் அணிந்தவனே என்றெல்லாம் மனம் கசிந்து போற்றி, சிந்தித்து நான் இனிதே,
பொன் புகழ் பாடிச் சிவ பதமும் பெற்றுப் பொருள் ஞானப் பெரு வெளியும் பெற்று புகல் ஆகத்து அமுதையும் உண்டிட்டு இடுவேனோ...உன்னுடைய பொன்னருள் வாய்ந்த திருப்புகழைப் பாடி; சிவபதத்தைப் பெற்று; ஞானப் பெருவெளியான சிதாகாசமாகிய கதியைப் பெற்று; அப்போது உடலில் ஊறுவதான ஞான அமுதை உண்பேனோ? (உண்ணுமாறு அருளவேண்டும்.)
தெற்பம் உள ஆகத் திரள் பரி உம்பல் குப்பைகள் ஆகத்து அசுரர் பிணம் திக்குஎட்டையும் மூடிக் குருதிகள் மங்குல் செவை ஆகி... உடலில் போர்ச்செருக்குத் திமிறுகின்ற குதிரை, யானை ஆகியனவற்றின் உடல்களும் அசுரர்களுடைய பிணங்களும் எட்டுத் திக்குகளையும் மூடி வானத்தைச் சிவப்பாக்கி;
திக்(கு) கயம் ஆடச் சிலசில பம்பைத் தத்தன தானத் தடுடுடு என்கச் செப்பு அறை தாளம் தகு தொகு என்க சில பேரி தடி படு சம்பத்துஉற்பனமாக... எட்டுத் திசைகளிலும் உள்ள யானைகள் ஆட; சிலவகைப் பம்பைகள் தத்தன தான என்று ஒலிக்க; சில முரசங்கள் ஒலிப்பதால் மின்னல் மின்னி இடி இடிப்பது போன்ற தோற்றம் ஏற்பட;
அற்புத மாகத்து அமரர் புரம் பெற்று உள் செல்வம் மேவிக் கன மலர் சிந்தத் தொடு வேலா... அற்புதமான ஆகாயத்தில் தேவர்கள் தங்களுடைய பொன்னுலகத்தைத் திருப்பப் பெற்று; அங்குள்ள செல்வங்களை அடைந்து; கற்பக மலர்களை மிகுதியாகத் தூவும்படியாக வேலாயுதத்தை வீசியவனே!
உள் பொருள் ஞானக் குற மகள் உம்பல் சித்திரை நீடப் பரி மயில் முன் பெற்று உத்தர கோசத் தலம் உறை கந்தப் பெருமாளே.... உண்மைப் பொருளை உணர்ந்த ஞானக் குறமகளான வள்ளியும்; (ஐராவதமாகிய) யானையால் வளர்க்கப்பெற்ற தேவானையும்; சிறந்த வாகனமாகிய மயிலும் திருச்சந்நிதியில் விளங்கப் பெற்று உத்தர கோசமங்கைத் தலத்தில் வீற்றிருக்கின்ற கந்தப் பெருமாளே!
சுருக்க உரை:
போர்ச் செருக்கு நிறைந்த யானை குதிரைகளோடு அசுரர்களுடைய பிணங்களும் குப்பைமேட்டைப் போல எட்டுத் திக்குகளிலும் நிறைந்து அவற்றின் குருதிச் சேற்றால் வானமேல்லாம் சிவக்கவும்; திசையானகள் அசைந்தாடவும்; தத்தன தான தடுடுடு என்று பம்பகள் முழங்கவும்; பேரிகைகள் முழங்குவதால் இடி இடிப்பது போலவும் மின்னல் மின்னுவது போலவும் தோற்றம் ஏற்படவும்; தேவர்கள் தங்களுடைய பொன்னுலகத்தை மீண்டும் பெறுமாறும் அவர்கள் கற்பக மலர்களை மிகுதியாகத் தூவுமாறும் வேலை வீசியவனே! உண்மைப் பொருளுணர்ந்தவரான வள்ளியும் ஐராவதம் வளர்த்த தேவானையும் சிறந்த வாகனமாகிய மயிலும் திருச்சந்நிதியில் விளங்குமாறு உத்தர கோசமங்கைத் தலத்தில் வீற்றிருக்கின்ற கந்தப் பெருமாளே!
‘கற்பக விருட்சத்தைப் போல வேண்டுவன எல்லாவற்றையும் வழங்கும் ஞான மூர்த்தியே! தேவர்களுடைய சைனியத்துக்குத் தலைமை ஏற்றவனே! தேன் சுவை கொண்ட கரும்பு, வெல்லம், அப்பம், சோறு, வெள்ளைச் சர்க்கரை, பால், தேன், கற்கண்டு, இளநீர், மா, பலா, வாழை, பயறு முதலானவற்றைத் தம் திருவுதரத்தில் ஏற்றுக்கொள்ளும் கணபதியின் இளையவனே! உன்னுடைய திருவடியைப் போற்றி உனக்கு வாகனமான மயிலை உடையவனே! உருண்டு திரண்டிருக்கின்ற ரத்தினங்களைப் பதித்த தண்டையையும் இனிய ஒலியைக் கொண்ட சிலம்பையும் அணிந்தவனே!’ என்றெல்லாம் உன்னைப் போற்றித் துதித்து மனங்கசிந்து; உன்னுடைய திருப்புகழைப் பாடி; சிவநிலையைப் பெற்று; மெய்ஞானப் பெருவெளியான சிதாகாச நிலையை அடைந்து; அப்போது உடலிலே ஊறுவதாகச் சொல்லப்படும் ஞானாமுதத்தை உண்பேனோ? (உண்ணுமாறு அருள்புரிய வேண்டும்.)