‘உன்னுடைய திருவடியைப் பெறுவதும் ஒருநாளே’ என்றோதும் இந்தப் பாடல் திருத்தணிகைக்கு உரியது.
அடிக்கு ஒற்றொழித்து 46 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய சீர்களிலும்; இரண்டு, ஆறு, பத்து ஆகிய சீர்களிலும் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் என மூன்றெழுத்துகளும்; மூன்று, ஏழு, பதினொன்று ஆகிய சீர்களிலும்; நான்கு, எட்டு, பன்னிரண்டு ஆகிய சீர்களிலும் நான்கு நான்கு குற்றெழுத்துகளுமாக அமைந்துள்ளன.
தனத்த தத்தன தனதன தனதன
தனத்த தத்தன தனதன தனதன
தனத்த தத்தன தனதன தனதன தனதான
தொடத்து ளக்கிகள் அபகட நினைவிகள்
குருட்டு மட்டைகள் குமரிகள் கமரிகள்
சுதைச்சி றுக்கிகள் குசலிக ளிசலிகள் முழுமோசந்
துறுத்த மட்டைகள் அசடிகள் கசடிகள்
முழுப்பு ரட்டிகள் நழுவிகள் மழுவிகள்
துமித்த மித்திரர் விலைமுலை யினவலை புகுதாமல்
அடைத்த வர்க்கியல் சரசிகள் விரசிகள்
தரித்த வித்ரும நிறமென வரவுட
னழைத்து சக்கிர கிரிவளை படிகொடு விளையாடி
அவத்தை தத்துவ மழிபட இருளறை
விலக்கு வித்தொரு சுடரொளி பரவந
லருட்பு கட்டியு னடியிணை யருளுவ தொருநாளே
படைத்த னைத்தையும் வினையுற நடனொடு
துடைத்த பத்தினி மரகத சொருபியொர்
பரத்தி னுச்சியி னடநவி லுமையரு ளிளையோனே
பகைத்த ரக்கர்கள் யமனுல குறஅமர்
தொடுத்த சக்கிர வளைகர மழகியர்
படிக்க டத்தையும் வயிறடை நெடியவர் மருகோனே
திடுக்கி டக்கட லசுரர்கள் முறிபட
கொளுத்தி சைக்கிரி பொடிபட சுடரயில்
திருத்தி விட்டொரு நொடியினில் வலம்வரு மயில்வீரா
தினைப்பு னத்திரு தனகிரி குமரிநல்
குறத்தி முத்தொடு சசிமக ளொடுபுகழ்
திருத்த ணிப்பதி மலைமிசை நிலைபெறு பெருமாளே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.