தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 939

கயல் விழித்தேன் எனை..

ஹரி கிருஷ்ணன்

பதச் சேதம்

சொற் பொருள்

கயல் விழித்தேன் எனை செயல் அழித்தாய் என கணவ கெட்டேன் என பெறு மாது

 

கயல் விழித்தேன்: கண்விழித்தேன்; பெறுமாது: பெற்ற தாய்;

கருது புத்ரா என புதல்வர் அப்பா என கதறிட பாடையில் தலை மீதே

 

 

பயில் குலத்தார் அழ பழைய நட்பார் அழ பறைகள் கொட்டா வர சமனாரும்

 

 

பரிய கை பாசம் விட்டு எறியும் அப்போது எனை பரிகரித்து ஆவியை தர வேணும்

 

பரிய: பருத்த; பரிகரித்து: நீக்கி, நிவர்த்தி செய்து;

அயில் அற சேவல் கைக்கு இனிது உர தோகையுள் அருணையில் கோபுரத்து உறைவோனே

 

அயில்: வேல்; அறச் சேவல்: அறத்தை நிலைநாட்டும் சேவல்;

அமரர் அத்தா சிறு குமரி முத்தா சிவத்து அரிய சொல் பாவலர்க்கு எளியோனே

 

அமரர் அத்தா: தேவர் தலைவா; சிறு குமரி: தேவானை; சிவத்து: சிவனை;

புயல் இளைப்பாறு பொன் சயிலம் மொய் சாரலில் புன மற பாவையை புணர்வோனே

 

புயல் இளைப்பாறு: மேகங்கள் தங்கம்; பொன் சயிலம்: வள்ளி மலை; புன மறப் பாவையை: வேடர் குலத்து வள்ளியை;

பொடிபட பூதரத்தொடு கடல் சூரனை பொரு முழு சேவக பெருமாளே.

 

பூதரம்: மலை—கிரெளஞ்சம்; சேவகப் பெருமாளே: பராக்கிரமம் நிறைந்த பெருமாளே;

கயல்விழித்தேன் எனைச் செயலழித் தாயென கணவகெட்டேனெனப் பெறுமாது... கண்விழித்து உனக்குப் பல சேவைகளைச் செய்த என்னைச் செயலற்றுப் போகச் செய்தாயே என்றும்; கணவனே உன்னை இழந்ததால் அழிந்தேன் என்றும் மனைவி அழவும்;

கருதுபுத்ராஎன புதல்வர் அப்பா எனக் கதறிட பாடையிற் றலைமீதே... ‘நினைவில் நிற்கும் மகனே’ என்று தாயார் அழவும்; மக்கள் ‘அப்பா’ என்று கதறவும்; பாடையின் தலைமாட்டில்,

பயில்குலத்தாரழப் பழையநட்பாரழ பறைகள்கொட்டாவர சமனாரும்... நெருங்கிய சுற்றத்தார்கள் அழவும்; பழைய நண்பர்கள் அழவும்; பறைகளை முழக்கியபடிப் பலர் வரவும்; யமனும்,

பரியகைப் பாசம்விட்டெறியுமப்போது எனைப் பரிகரித்து ஆவியைத் தரவேணும்... பருத்த கையில் உள்ள பாசக் கயிற்றை என்மீது எறிகின்ற சமயத்தில் என்னைக் காத்து, உன் உயிரை ரட்சித்தருள வேண்டும்.

அயில் அறச் சேவல்கைக்கு இனிதர தோகையுற்று அருணையிற் கோபுரத்துறைவோனே...வேலும், அறநெறியைக் காக்கின்ற சேவற்கொடியும் திருக்கரங்களிலே விளங்க, இனிதே மயில்மீது அமர்ந்து திருவண்ணாமலைக் கோபுரத்தில் வீற்றிருப்பவனே!  

அமரர் அத்தா சிறுக் குமரிமுத்தா சிவத்தரியசொற் பாவலர்க்கு எளியோனே... தேவர் தலைவனே! அருமையான சொற்களைக்கொண்டு சிவபெருமானைப் பாடும் புலவர்களுக்கு எளியவனே!

புயல் இளைப்பாறு பொற் சயில மொய்ச் சாரலில் புனமறப் பாவையைப் புணர்வோனே... மேகங்கள் தங்கி ஓய்வெடுக்கின்ற அழகிய வள்ளிமலையின் சாரலில், தினைப்புனம் காத்திருந்த வேடர்குலப் பெண்ணான வள்ளியை அணைத்தவனே!

பொடிபடப் பூதரத்தொடு கடற் சூரனை பொருமுழுச் சேவகப் பெருமாளே.... கிரெளஞ்ச மலையைத் தூளடித்து கடலில் மாமரமாக நின்ற சூரனைப் போரிட்டு அழித்த பராக்கிரமம் வாய்ந்த பெருமாளே!

சுருக்க உரை

வேலையும் சேவற்கொடியையும் ஏந்தி திருக்கரத்தோடு மயில் மீது அமர்ந்து திருவண்ணாமலைக் கோபுரத்தில் வீற்றிருப்பவனே!  தேவர் தலைவனே!  தேவசேனையை மகிழ்பவனே! அருமையான சொற்களைக் கொண்டு சிவபெருமானை பாடும் புலவர்களுக்கு எளியவனே! மேகங்கள் தங்குகின்ற அழகிய வள்ளிமலையின் சாரலிலே தினைப்புனத்தைக் காத்துநின்ற வள்ளியை அணைத்தவனே! கிரெளஞ்ச மலையைத் தூளடித்து, கடலுக்குள் மாமரமாக நின்ற சூரனைப் போரிட்டு அழித்த பராக்கிரம் மிகுந்த பெருமாளே!

‘பலகாலம் கண்விழித்து உனக்குப் பணிவிடைகள் செய்த என்னைக் கலங்கவிட்டுப் பிரிந்த கணவனே!’ என்று மனைவியும்; ‘என் மனத்திலேயே நிற்கின்ற மகனே’ என்று பெற்ற தாயும்; ‘அப்பா’ என்று மக்களும் கதறி அழ; நண்பர்களும் உறவினர்களும் சூழ்ந்திருக்க, பறைகள் முழங்க, யமன் தன் பாசக் கயிற்றை என் மீது வீசும்போது அதை விலக்கி என்னைக் காத்தருள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாா் நிறுவனத்தில் திருட்டு: ஊழியா் கைது

பேருந்து நிறுத்தங்களில் எண்ம அறிவிப்பு பலகை: ஆகஸ்ட் இறுதிக்குள் நிறுவ முடிவு

சுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்பு

விருதுநகா் மருத்துவக் கல்லூரியில் பரிசோதனை சேகரிப்பு மையம்

ஆள் கடத்தல் வழக்கு: விடுவிக்கக் கோரிய முன்னாள் எம்எல்ஏ-வின் மனு தள்ளுபடி

SCROLL FOR NEXT