இந்த நாளில் அன்று - (15.08.1955) - நாடு நம்மைப் பற்றி பெருமை கொள்ளும்படி நடப்போம் - மக்களுக்கு முதலமைச்சர் காமராஜ் வேண்டுகோள்
நாம் இந்நாட்டுக் குடிமக்கள் என்பதில் பெருமிதம் கொள்வோம். நாமும் நம்மை பற்றிப் பெருமை கொள்ளும்படி நடந்துகொள்வோம் என்று சுதந்தர தின உரையில் சென்னை ராஜ்ய முதன்மந்திரி காமராஜ் குறிப்பிட்டார்.
நாம் இந்நாட்டுக் குடிமக்கள் என்பதில் பெருமிதம் கொள்வோம். நாமும் நம்மை பற்றிப் பெருமை கொள்ளும்படி நடந்துகொள்வோம் என்று சுதந்தர தின உரையில் சென்னை ராஜ்ய முதன்மந்திரி காமராஜ் குறிப்பிட்டார்.
இனிய சுதந்தரம் பெற்று எட்டு ஆண்டுகள் சென்றுவிட்டன. அந்நியன் நம்மை ஆளக்கூடாது என்பது மட்டுமல்ல சுதந்தரத்தின் தத்துவம். நம்மை நாமே ஆள வேண்டும் என்பதுதான் அதன் அடிப்படை.
இந்திய ஜனநாயக சுதந்தரக் குடியரசை ஆக்குவதும், ஆள்வதும் நம் அனைவருக்கும் உற்ற உரிமையும், உயரிய கடமையும் ஆகும்.
Advertisement
சுதந்தர இந்தியாவின் சென்ற எட்டாண்டு வரலாற்றை எடுத்துப் பாருங்கள். சுதந்தரத்தின் பொறுப்புகளையும் நன்மைகளையும் தனி மனிதன் ஒவ்வொருவனும் உணரச் செய்துள்ளோம். மக்களாட்சியின் சிறந்த சாதனை இதுவே. அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் இடையே இருந்த மதில் இடிந்துவிட்டது. இன்று ஆள்பவரும் நாமே, ஆளப்படுவோரும் நாமே.
அறம் செழித்து, வளம் கொழித்த நாடு நம் நாடு. அந்த அறத்தைப் போற்றி வளர்த்து, நாம் மட்டுமல்ல உலக மக்களும் அதைப் பின்பற்றிப் பயனடையச் செய்யும் வகையில் நம் அயல் நாட்டுக் கொள்கை அமைந்துள்ளது.
வளத்தைப் போற்றி வளர்க்கும் முறையில் வகுக்கப்பட்டுள்ளது ஐந்தாண்டுத் திட்டம். மக்கள் உழைப்புக்கு உற்சாகம் காட்டி உணர்வை உறுத்திப்படுத்தி, அவர்களுடைய ஆக்கச் சக்தி அனைத்தையும் திரட்டி, நாட்டு நன்மைக்குப் பயன்படுத்த ஐந்தாண்டுத் திட்டம் வழிகாட்டியுள்ளது.
திட்டம் தீட்டிவிட்டால் பசி அடங்கிவிடுமா என்று கேட்பவர்கள், இன்று புத்துணர்வு பொங்கப் பொலிவுற்று விளங்கும் நம் கிராமங்களுக்குச் சென்று பார்க்கட்டும்.
மதுவிலக்கினால் மீண்டு மலர்ந்த வாழ்வு வாழும் மக்களை அங்கு காணலாம். அரசாங்கத்தின் ஆதரவுடன், கிராம முன்னேற்றத்துக்கு தாங்களே திட்டம் வகுத்துப் பள்ளிகள் கட்டி, பாதைகள் போட்டு, குளம் வெட்டி, வளம் பெருக்கித் திருப்பணியில் பொறுப்பேற்கும் காட்சியைக் காணலாம்.
சாதி வேற்றுமைகளுக்கு அப்பாற்பட்ட சமுதாயம் அங்கு உருவாகி வருகிறது. விவசாயி வாழ்வு ஆதிக்கம் பெற்றுள்ளது. வைத்திய சாலைகள், மூலை முடுக்கிலுள்ள கிராம மக்களையும் தேடி வருகின்றன.
ஏட்டுப் படிப்பு அல்லாமல் தனி மனிதன் நல்வாழ்வுக்கும் சமூகத்தின் பொது வாழ்வுக்கும் பலன் அளிக்கும் முறையில், சிறுவர்களைப் பக்குவப்படுத்தும் ஆதாரக் கல்விப் பள்ளிகளை அங்கு காணலாம்.
பல ஆண்டுகளாக சீரழிந்திருந்த குடிசைத் தொழிலுக்கு ஆதரவு பெருகி வருவதைக் காணலாம். நாடு ஒன்று, நாடு நமது என்ற உணர்வு, மக்களிடையே எங்கும் ஊடுருவி நிற்பதைக் காணலாம். அங்கு சர்வோதய சமுதாயம் நம் கண் முன்னே உருவாகியிருக்கிறது.
இவை அரிய சாதனைகள். இவை குறித்துப் பெருமை கொள்ள நமக்கு உரிமை உண்டு. சுதந்தர இந்தியாவின் மிகப்பெரிய மூலதனச் சொந்து, அதன் மக்கள் சக்தி. அச்செல்வம் என்றும் குறையாது, குலையாது காக்க வேண்டும்.
அணைகள் கட்டுவது யாருக்காக? தரிசை மீட்டு நிலத்தை திருத்தி தண்ணீர் பாய்ச்சுவது யாருக்காக? இவை பொதுப் பணிகள். சாதி சமய வேறுபாடுகள், அரசியல் கட்சிப் பூசல்கள் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டவை.
இந்த நன்னாளன்று நான் மக்கள் அனைவருக்கும் விடுக்கும் வேண்டுகோள் இதுதான். நாம் இந்நாட்டுக் குடிமக்கள் என்பதில் பெருமிதம் கொள்வோம். நாம் நம்மைப் பற்றிப் பெருமை கொள்ளும்படி நடந்துகொள்வோம் என்றார் காமராஜ்.