முகப்பு
இந்த நாளில்...

இந்த நாளில் அன்று - (19.08.1960) - மாணவர்கள் உங்கள் சொந்த நலன்களுக்காகப் பயன்படுத்தாதீர் - சில அரசியல் கட்சிகளின் போக்குக்கு முதலமைச்சர் காமராஜ் கண்டனம்

சில அரசியல் கட்சிகள் தங்கள் சொந்த நலன்களுக்காக மாணவர்களை பயன்படுத்தி வருவதை சென்னை ராஜ்ய முதன் மந்திரி கே.காமராஜ் வன்மையாகக் கண்டித்தார்.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:07 PM
பகிர்:

சில அரசியல் கட்சிகள் தங்கள் சொந்த நலன்களுக்காக மாணவர்களை பயன்படுத்தி வருவதை சென்னை ராஜ்ய முதன் மந்திரி கே.காமராஜ் வன்மையாகக் கண்டித்தார். சென்னையில் சர்.தியாகராஜா கல்லூரியில் மாணவர் சங்கத்தை அவர் தொடங்கி வைத்துப் பேசினார்.

இளைஞர்களின் உணர்ச்சிகளைத் தூண்டி அவர்களை ஆர்ப்பாட்டம் போன்ற குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும்படி செய்வது தவறு என்றும் அதன்மூலம் நாட்டுக்கு தீங்கே விளையும் என்றும் கூறினார்.

மாணவர்கள் தங்கள் படிப்புகளை தொடர்ந்து படித்து நாட்டின் பயனுள்ள பிரஜைகளாக ஆக வேண்டுமெனில், அரசியல் கட்சிகள் அவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருக்க வேண்டும். இது விஷயமாக அரசியல் கட்சிகளிடையே ஒரு உடன்பாடு ஏற்படும் என்றே நான் கருதுகிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.

Advertisement

நாட்டின் நலன்களுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய எந்தவிதமான இயக்கத்திலும் மாணவர்கள் சேரக்கூடாது என்றும் நாட்டில் சமாதானம் நிலவினால்தான் பொருளாதார அபிவிருத்தி ஏற்படும் என்றும் காமராஜ் கூறினார்.

நாட்டின் போராட்டத்தில் சேரும்படி மாணவர்களை காந்திஜியும் காங்கிரஸும் ஊக்குவித்தனர் என்றால் அதற்குக் காரணம் உள்ளது. ஏனெனில் நம் நாட்டுக்கு சுதந்தரம் கிடைக்குமோ கிடைக்காதோ என்ன சந்தேகமான நிலை அப்போது இருந்தது. ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. மக்கள் விரும்பினால், நினைத்தபோது சர்க்காரை அடிக்கடி மாற்றலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் உள்ள மக்கள் பல மொழிகளைப் பேசி வருகின்றனர் என்றும் ஒரு ராஜ்யத்தில்கூட ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகள் புழங்கி வருகின்றன என்றும், அதனால் மொழி, ஜாதி, மதம் ஆகிய காரணங்களைக் கொண்டு மக்களின் உணர்ச்சிகளை கிளர்ச்சியுறச் செய்வது எளிது என்றும் காமராஜ் கூறினார்.

சென்னை ராஜ்யத்தில் தமிழ் மொழிக்குப் பதில் அதன் ஸ்தானத்தில் ஹிந்தி வரும்படியாக எப்பொழுதுமே அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் சென்னையின் ஆட்சி மொழியாகவும் போதனா மொழியாகவும் தமிழே நிரந்தரமாக இருக்குமென்றும் அவர் வலியுறுத்தினார். ஹிந்திக்கும் ஆங்கிலத்துக்கும் இருக்கும் சர்ச்சையைக் கண்டு பயப்பிராந்தி அடையத் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.

மாணவர்கள் இந்த மாதிரியான விஷயங்களை அரசியல்வாதிகளுக்கு விட்டுவிட்டு தங்கள் படிப்பில் நாட்டம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments