இந்த நாளில் அன்று(04.06.1993)ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மீதான தடை ரத்து; விசுவ ஹிந்து பரிஷத் மீது தடை நீடிப்பு - நடுவர் மன்றம் ஆணை
ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங் தள் ஆகிய இயக்கங்கள் மீது மத்திய அரசு விதித்துள்ள தடையை பாஹ்ரி கமிஷன் நடுவர் மன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. எனினும் விசுவ ஹிந்து பரிஷத் மீது மத்திய அரசு விதித்துள்ள தடை செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தடை 2 ஆண்டுகள் நீடிக்கும்.
ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங் தள் ஆகிய இயக்கங்கள் மீது மத்திய அரசு விதித்துள்ள தடையை பாஹ்ரி கமிஷன் நடுவர் மன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. எனினும் விசுவ ஹிந்து பரிஷத் மீது மத்திய அரசு விதித்துள்ள தடை செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தடை 2 ஆண்டுகள் நீடிக்கும்.
பாஹ்ரி கமிஷனின் தீர்ப்பை ஆராய்ந்தபின் அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அப்பீல் செய்யும் என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தமது தீர்ப்பு தொடர்பான 350 பக்க அறிக்கையை நீதிபதி பாஹ்ரி வெளியிட்டார்.
Advertisement
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இந்த இயக்கங்களுக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. விசுவ ஹிந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங் தளம் ஆகியவற்றின் மீது மத்திய அரசு விதித்திருந்த தடை குறித்து பரிசீலிக்க இந்த நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. நீதிபதி பி.கே.பாஹ்ரி தலைமையிலான ஒரு நபர் நடுவர் மன்றத்தின் தீர்ப்பு வெளியிடப்பட்டது.
விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பைத் தடை செய்ததற்குப் போதுமான காரணங்கள் உள்ளன. எனவே, அந்த அமைப்பின் மீதான தடையை நீடிக்க வேண்டும். ஆனால், ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங் தளம் ஆகியவற்றின் மீது தடை விதிப்பதற்கு போதுமான அடிப்படைக் காரணங்கள் இல்லை. மத்திய அரசின் சார்பில் இந்த வழக்கில் ஆஜராகிய வழக்கறிஞர் ஆர்.கே.ஆனந்த், இவ்விரு அமைப்புகள் மீது தடை விதிக்கப்பட்டதற்கான போதுமான ஆதாரங்களையும் சான்றுகளையும் சமர்ப்பிக்கவில்லை. ஆகவே, இவ்விரு அமைப்புகளின் மீதான தடையை ரத்து செய்வதாக நீதிபதி பாஹ்ரி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசின் சார்பில் 25 சாட்சியங்களும், விசுவ ஹிந்து பரிஷத்தின் சார்பில் 10 சாட்சிகளும், ஆர்.எஸ்.எஸ். சார்பில் இருவரும், பஜ்ரங் தளத்தின் சார்பில் ஒருவரும் இந்த நடுவர் மன்றத்தில் ஆஜராகி தங்களது தரப்பு வாதங்களை எடுத்துரைத்தனர்.
*
ஆர்.எஸ்.எஸ். மீதான தடையை ரத்து செய்து பாஹ்ரி நடுவர் மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை பாரதிய ஜனதா கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி வரவேற்றுள்ளார். இந்தத் தீர்ப்பு நீதிமன்ற வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
விசுவ ஹிந்து பரிஷத் மீதான தடையை நீடிக்க வேண்டும் என்று நடுவர் மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய அந்த இயக்கம் முடிவு செய்துள்ளது. இதை, அந்த அமைப்பின் துணைத் தலைவர் பி.பி.தோஷ்னிவால் தெரிவித்தார்.