இந்த நாளில் அன்று(05.06.1994)நான் நினைத்திருந்தால் வெகுநாள் பிரதமராக நீடித்திருக்க முடியும் - சந்திரசேகர்
அரசியலில் நான் ஒரு சந்தர்ப்பவாதி என்று கூறப்படும் புகாரை என்னால் ஏற்கமுடியாது. நான் அப்படி நடந்திருந்தால் வெகுநாள் பிரதமராக நீடித்திருக்க முடியும் என்று முன்னாள் பிரதமர் சந்திரசேகர் தெரிவித்தார். பல்வேறு விஷயங்கள் தொடர்பாக தாம் எடுத்த திட்டவட்டமான முடிவுகள் பின்னர் சரியானவை என்பதை நிரூபித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அரசியலில் நான் ஒரு சந்தர்ப்பவாதி என்று கூறப்படும் புகாரை என்னால் ஏற்கமுடியாது. நான் அப்படி நடந்திருந்தால் வெகுநாள் பிரதமராக நீடித்திருக்க முடியும் என்று முன்னாள் பிரதமர் சந்திரசேகர் தெரிவித்தார். பல்வேறு விஷயங்கள் தொடர்பாக தாம் எடுத்த திட்டவட்டமான முடிவுகள் பின்னர் சரியானவை என்பதை நிரூபித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
திருவனந்தபுரத்தில் பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டு பேசினார்.
அரசியலில் நீங்கள் ஒரு சந்தர்ப்பவாதி. அதன்மூலம் நீங்கள் அதிகம் பணம் பண்ணியவர் என்ற எண்ணம் மக்களிடையே நிலவி வருவது உங்களுக்குத் தெரியுமா என்று கேள்வி கேட்கப்பட்டது.
Advertisement
அதற்கு சந்திரசேகர் பதிலளிக்கையில், இது போன்ற கேள்விகள் வந்தால் பதிலளிக்க வேண்டும் என்று நான் நீண்ட நாள்களாக காத்திருந்தேன். ஆனால், இப்போதுதான் அந்தக் கேள்வி என்னிடம் கேட்கப்பட்டுள்ளது.
நான் ஒரு சந்தர்ப்பவாதி என்று கூறுவது சரியல்ல. பல விஷயங்களில் நான் திட்டவட்டமாக எடுத்த முடிவுகள் இன்று சரியாக உள்ளன.
பாஜக, வி.பி.சிங் அரசுக்கு ஆதரவை விலக்கிக்கொண்டதால் வி.பி.சிங் அரசு கவிழ்ந்தது. அப்போது புதிதாக தேர்தல் நடத்துவதா வேண்டாமா என்ற சூழ்நிலை உருவானது. இந்த நிலையில் நான் பிரதமராகப் பதவியேற்றேன். பின்னர் பதவி வேண்டாம் என நினைத்தபோது விலகிவிட்டேன். நான் நினைத்திருந்தால் வெகுநாள் பிரதமர் பதவியில் நீடித்திருக்க முடியும். 1967-ம் ஆண்டில் இருந்தே பதவி என்னைத் தேடி வந்ததே தவிர நான் பதவியைத் தேடி அலையவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
நான் பிரதமராக இருந்தபோது விசுவ ஹிந்து பரிஷத், பாபர் மசூதி செயல் கமிட்டி இரண்டு தரப்பினரையும் அழைத்து பிரச்னைக்கு தீர்வு காண முயன்றேன். நான் இன்னும் சில நாள் பதவியில் நீடித்திருந்தால் பிரச்னைக்கு தீர்வு கண்டிருக்க முடியும். இதை பிற கட்சித் தலைவர்கள் இன்றும்கூட ஏற்றுக்கொள்வார்கள்.
வி.பி.சிங் ஆட்சி செய்தபோது புதிய தொழில் கொள்கையை கொண்டுவந்தார். நான் அப்போதே எதிர்த்தேன். அதேபோன்ற கொள்கையை இப்போது மன்மோகன் சிங் கொண்டு வந்துள்ளார்.
காஷ்மீர் மாநில முதல்வர் பதவியை பாரூக் அப்துல்லா ராஜிநாமா செய்தபோது அதை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று வி.பி.சிங்குக்கு நான் அறிவுரை கூறினேன். நான் கூறிய அறிவுரைதான் சரியானது என்பது நிரூபணமானது என்று சந்திரசேகர் குறிப்பிட்டார்.