இந்த நாளில் அன்று(15.03.1967)சென்னை அசெம்பிளியின் புது மெம்பர்கள் பிரமாணம் ஏற்றனர் - காங்கிரஸ் கட்சித் தலைவர் என்று யாரும் பிரமாணம் ஏற்கவில்லை.
சென்னை அசெம்பிளிக்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மெம்பர்கள் இன்று விசுவாசப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர். முக்கிய எதிர்க்கட்சியாக இருந்த திமுக இன்று ஆளும் கட்சியாக அமர்ந்திருந்தது. இதுவரையில் ஆளும் கட்சியாகவே இருந்த காங்கிரஸ் (49 மெம்பர்கள்) எதிர்க்கட்சியாக இருந்தது.
இந்த நாளில் அன்று
(15.03.1967)
சென்னை அசெம்பிளியின் புது மெம்பர்கள் பிரமாணம் ஏற்றனர் - காங்கிரஸ் கட்சித் தலைவர் என்று யாரும் பிரமாணம் ஏற்கவில்லை
Advertisement
சென்னை அசெம்பிளிக்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மெம்பர்கள் இன்று விசுவாசப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர். முக்கிய எதிர்க்கட்சியாக இருந்த திமுக இன்று ஆளும் கட்சியாக அமர்ந்திருந்தது. இதுவரையில் ஆளும் கட்சியாகவே இருந்த காங்கிரஸ் (49 மெம்பர்கள்) எதிர்க்கட்சியாக இருந்தது.
மந்திரிகளின் வரிசையில் முதலில் ஸ்ரீ ஸி.என். அண்ணாதுரை அமர்ந்திருந்தார். ஆனால், அவர் அசெம்பிளி மெம்பர் இல்லையாகையால் விசுவாசப் பிரமாணம் எடுத்துக்கொள்ளவில்லை. ஸ்ரீ நெடுஞ்செழியனும் மற்ற ஏழு மந்திரிகளும் முதலில் பிரமாணம் ஏற்றார்கள். காங்கிரஸை தவிர மற்ற கட்சிகளின் தலைவர்களுக்குப் பின்னர் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. அசெம்பிளியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் யார் என்பது புதன்கிழமை காலை வரையில் தெரியவில்லை. ஆகையால், காங்கிரஸ் கட்சி தலைவரை அழைக்க முடியவில்லை.
தற்காலிக சபாநாயகராக ஸ்ரீ பி.எம்.மூக்கையாத் தேவரின் (சுதந்திரா கட்சி) தலைமையில் இன்றைய அசெம்பிளி கூட்டம் நடைபெற்றது.
சென்ற அசெம்பிளிக்கும் இந்தப் புதிய அசெம்பிளிக்கும்தான் எவ்வளவு வித்தியாசம்! முன்பு சபாநாயகரின் வலதுபுறத்தில் உள்ள மூன்று வரிசைகளிலும் கதர் ஆடைகள் அணிந்த காங்கிரஸ் மெம்பர்கள் இருந்தார்கள். ஆனால், அந்த வரிசைகளில் இன்று திமுக மெம்பர்கள் அமர்ந்திருந்தார்கள். இப்போது சபையில் ஒரு மைனாரிட்டியாக உள்ள காங்கிரஸ் மெம்பர்கள், சர்க்கார் கட்சிக்கு எதிரே ஆறாவது வரிசையில் இருந்தார்கள். பிரமாணம் ஏற்கும் தினத்தன்று மெம்பர்கள் எந்த வரிசைக்கிரமத்தில் உட்கார வேண்டும் என்று விதி ஒன்றுமில்லை. மாஜி மந்திரி ஸ்ரீ ஜி.பூவராகனும், அம்பாசமுத்திரம் காங்கிரஸ் மெம்பர் ஸ்ரீ கோமதி சங்கர தீட்சதரும், மந்திரிகள் உட்கார்ந்திருந்த வரிசையின் கடைசியில் திமுக மெம்பர்களுடன் உட்கார்ந்திருந்தார்கள். எதிர்க்கட்சியின் முன் வரிசையில் கட்சித் தலைவர்கள் இருந்தார்கள்.
சரியாக காலை 10.30-க்கு நடவடிக்கைகள் ஆரம்பமாகின. விஸிட்டர்கள் காலரி பூராவாக நிறைந்திருந்தது. பெண்கள் பகுதியில் அவ்வளவாகக் கூட்டமில்லை. கூட்டம் ஆரம்பமானவுடன் மெம்பர்களை வரவேற்று ஸ்ரீ மூக்கையாத் தேவர் ஒரு சிறு உரை நிகழ்த்தினார். தன்னை தற்காலிக சபாநாயகராக நியமித்ததற்கு தேவர் கவர்னருக்கு நன்றி செலுத்தினார். சபை மாமூல் நடவடிக்கைகளில் இறங்குவதற்கு முன்பு மெம்பர்கள் விசுவாசப் பிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார். எந்த வரிசைக்கிரமத்தில் மெம்பர்கள் அழைக்கப்படுவார்கள் என்பதையும் ஸ்ரீ தேவர் அறிவித்தார். பிரமாணம் ஏற்பதென்பது புனிதமான பணியென்றும், இந்தச் சடங்கு நடக்கும்போது எல்லா மெம்பர்களும் சபையில் இருக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். வியாழக்கிழமை பகல் 12 மணிக்குள் புது சபாநாயகர் பதவிக்கான நியமனப் பத்திரங்களை தாக்கல் செய்துவிட வேண்டுமென்றும் அறிவித்தார்.
ஸ்ரீ ம.பொ.சிவாஞான கிராமணி, டாக்டர் ஹபிபுல்லா பெய்க் (முஸ்லிம் லீக்), ஸ்ரீ ஜி.பூவராகன் (கா), ஸ்ரீ ஏ.சிதம்பரநாத நாடார் (கா) முதலியவர்கள் 'கடவுளின் பெயரால்' என்று பிரமாணம் செய்தனர். இன்று 221 மெம்பர்கள் பிரமாணம் எடுத்துக்கொள்வதற்கு இரண்டு மணி நேரம் ஆயிற்று. மீதமுள்ள மெம்பர்கள் தன் அறையியோ அல்லது வெள்ளிக்கிழமை சபை கூடும்போதோ பிரமாணம் எடுத்துக்கொள்ளலாமென்று சபாநாயகர் அறிவித்தார். பிரமாணம் எடுத்துக்கொண்ட மெம்பர்கள்தான் சபாநாயகர் தேர்தலில் வோட் அளிக்க முடியும்.
பிரபர சினிமா நடிகர் ஸ்ரீ எம்.ஜி.ராமச்சந்திரன் (திமுக) இன்று பிரமாணம் ஏற்க வரவில்லை. சுதந்திரா கட்சி மெம்பர் ஸ்ரீ எஸ்.ராமசாமி நாயுடு உடல் நலம் குன்றியிருப்பதால் அவரும் இன்று வரவில்லை. திமுக மெம்பர்கள் யாவரும் தமிழில் பிரமாணம் செய்தார்கள். ஆனால், பெரும்பாலானோர் மெம்பர்கள் புஸ்தகத்தில் ஆங்கிலத்தில் கையெழுத்திட்டனர்.