முகப்பு
இந்த நாளில்...

இந்த நாளில் அன்று(17.03.1969)காவிரி நீர் மீது தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்படும் - அசெம்பிளியில் மந்திரி உறுதி

காவேரி தண்ணீரைப் பயன்படுத்துவது சம்பந்தமாக மைசூர் அரசுடனும், மத்திய அரசாங்கத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தும்போது, தமிழ்நாட்டின் உரிமைகளையும் தேவைகளையும் பாதுகாக்க இந்த அரசு ஒவ்வொரு விதத்திலும் நடவடிக்கை எடுக்குமென்று முன்பு முதல்வர் கூறிய உறுதிமொழியை பொதுப்பணி மந்திரி ஸ்ரீ சாதிக் பாட்சா அசெம்பிளியில் ஊர்ஜிதம் செய்தார்.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:05 PM
பகிர்:

இந்த நாளில் அன்று

(17.03.1969)

காவிரி நீர் மீது தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்படும் - அசெம்பிளியில் மந்திரி உறுதி

Advertisement

காவேரி தண்ணீரைப் பயன்படுத்துவது சம்பந்தமாக மைசூர் அரசுடனும், மத்திய அரசாங்கத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தும்போது, தமிழ்நாட்டின் உரிமைகளையும் தேவைகளையும் பாதுகாக்க இந்த அரசு ஒவ்வொரு விதத்திலும் நடவடிக்கை எடுக்குமென்று முன்பு முதல்வர் கூறிய உறுதிமொழியை பொதுப்பணி மந்திரி ஸ்ரீ சாதிக் பாட்சா அசெம்பிளியில் ஊர்ஜிதம் செய்தார்.

விவாதத்தின்போது, ஸ்ரீ கே.ஆர்.நல்லசிவம் 1924-ம் ஆண்டு காவிரி தண்ணீர் ஒப்பந்தத்தைப் பற்றி குறிப்பிட்டு, தமிழகத்தின் உரிமைகளுக்குப் பாதகமான முறையில் மைசூரில் தண்ணீர் பயன்படுத்துவதாகக் கூறினார்.

சிறு பாசனப் பணிகளை சர்க்கார் மேற்கொள்ளும் பிரச்னை, உத்தேசப் பஞ்சாயத்துச் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும்போது பரிசீலனைக்கப்படும் என்று மந்திரி கூறினார். காவேரி பேரணை விரிவான சீரமைப்புப் பிரச்னையை அரசாங்கம் கவனிக்கும் என்றார்.

காவேரி தண்ணீர்ப் பயன்படுத்துவது பற்றி தமிழ்நாட்டுக்கும் மைசூருக்கும் இடையே உள்ள பிரச்னை பேச்சுவார்த்தைகள் மூலம் சுமுகமாகத் தீர்க்கப்படும் என்றும், நமது மாநிலத்தின் உரிமைகள், தேவைகளைப் பாதுகாக்க அரசாங்கம் சகல நடவடிக்கைகளையும் எடுத்துக்கொள்ளும் என்றும், மறைந்த முதலமைச்சர் ஸ்ரீ அண்ணாதுரை வெளியிட்டிருந்த அறிக்கையை அவர் நினைவுபடுத்தி, அந்த உறுதிமொழிப்படி தமிழக அரசு செயலாற்றும் என்று உறுதியளித்தார்.

கோவை, தஞ்சை மாவட்டங்களின் பாசனத் திட்டங்கள் புறக்கணிக்கப்படுகின்றன என்று சில அங்கத்தினர்கள் கூறிய புகாரை மறுத்தார். எந்த மாவட்டத்தையும் சர்க்கார் புறக்கணிக்கவில்லை என்று கூறினார். வட ஆற்காடு மாவட்டத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் சிறுபாசனத் திட்டங்களின் விவரங்களை சபையில் விவரித்து, வட ஆற்காடு மாவட்டத்தை அரசு புறக்கணிக்கிறதோ என்று அவ் வட்ட உறுப்பினர் எழுப்பிய ஐயப்பாட்டுக்கு ஆதாரமே இல்லை என்று அமைச்சர் கூறினார்.

ராமநாதபுரம் மாவட்ட பெரிய கண்மாய் தூர்ந்துவிட்டிருப்பதை அமைச்சர் ஒப்புக்கொண்டார். கண்மாய் சீர் செய்யும் பணியைத் துவக்க அரசு நடவடிக்கை எடுத்துவிட்டதென்றும் அதற்காக அரசு நிதியும் ஒதுக்கி இருக்கிறதென்றும் அவர் அறிவித்தார்.

இவ்வாண்டு பருவ மழை தவறி இருந்தும், கூடுமானவரை அபிவிருத்திப் பணிகள் பாதிக்கப்படாமல் அரசு நிறைவேற்றி வருகிறதென்றும் கூறிவிட்டு, அரசாங்கத்தைப் பொருத்தவரையில் மாவட்டங்களுக்கிடையே பாரபட்சம் காட்டாது என்றும் சமமாகவே அரசு நோக்குமென்றும் பலன் முக்கியத்துவத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு, திட்டங்களை அரசு நிறைவேற்றி வருகிறதென்றும் அமைச்சர் தெளிவாக்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments