முகப்பு
இந்த நாளில்...

இந்த நாளில் அன்று(22.03.1974)எம்.ஜி.ஆர். சபைக்கு வராதது குறித்து ஒழுங்குப் பிரச்னை: கடும் வாக்குவாதம்

ராஜ்ய சபைத் தேர்தலில் வோட்டளிக்க நேற்று சட்டமன்ற வராந்தாவுக்கு வந்த அண்ணா திமுக தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன், சட்டமன்றத்துக்குள் வந்து சபை நடவடிக்கைகளில் பங்குகொள்ளாதது முறைதானா? என்ற ஒழுங்குப் பிரச்னை இன்று சபையில் கிளப்பப்பட்டதைத் தொடர்ந்து சபையில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:05 PM
பகிர்:

ராஜ்ய சபைத் தேர்தலில் வோட்டளிக்க நேற்று சட்டமன்ற வராந்தாவுக்கு வந்த அண்ணா திமுக தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன், சட்டமன்றத்துக்குள் வந்து சபை நடவடிக்கைகளில் பங்குகொள்ளாதது முறைதானா? என்ற ஒழுங்குப் பிரச்னை இன்று சபையில் கிளப்பப்பட்டதைத் தொடர்ந்து சபையில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

ஆற்காடு வீராசாமி (திமுக), கிளப்பிய இந்த ஒழுங்குப் பிரச்னையை ஆட்சேபித்து அதிமுக உறுப்பினர்கள் மாறி மாறி ஒழுங்குப் பிரச்னையை எழுப்பினார்கள். ஒரு கட்டத்தில், சபையில் திமுக உறுப்பினர்களும், அதிமுக உறுப்பினர்களும் ஒருவரை நோக்கி மற்றவர் வாக்குவாதம் நடத்திக்கொண்டிருந்தார்கள். சபையில் இரைச்சல் அதிகமாக இருந்தது. சபையில் அமைதியை நிலைநாட்ட சபாநாயகர் பெரிதும் சிரமப்பட்டார்.

சபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் ஆற்காடு வீராசாமி இந்த ஒழுங்குப் பிரச்னையைக் கிளப்பினார்.

Advertisement

'ராஜ்ய சபைத் தேர்தலில் வோட்டுப் போட வந்த அதிமுக தலைவர் எம்.ஜி.ஆர்., மன்றத்தில் நடைபெற்ற ஹரிஜன நலத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் அக்கறை காட்டாததும், பங்குகொள்ளாததும் முறைதானா?' என்று வீராசாமி கேட்டார்.

இதைத் தொடர்ந்து சபையில் சலசலப்பு ஏற்பட்டது. வீராசாமியின் ஒழுங்குப் பிரச்னை மீது சபாநாயகர் தீர்ப்பளிக்க எழுந்ததும் அதிமுக உறுப்பினர்கள் டாக்டர் ஹண்டே, சீனிவாசன், சவுந்திரபாண்டியன் ஆகியோர் ஒரே நேரத்தில் எழுந்து நின்று ஆட்சேபித்தனர். வீராசாமி எழுப்பிய ஒழுங்குப் பிரச்னையை நிராகரிப்பதாகவும், அவர் எழுப்பிய பிரச்னையில் ஒழுங்கு மீறிய செயல் ஏதும் இல்லை என்றும் சபாநாயகர் தீர்ப்பு கூறினார்.

'ஹரிஜன நலத்துறை மானியக் கோரிக்கை மீது நேற்று நடைபெற்ற விவாதத்தில் நேற்று வீராசாமியும் பங்குகொள்ளவில்லை. ஹரிஜன நலனில் அவருக்கு அக்கறை இல்லை என்று அர்த்தமா? இதை எங்களாலும் சொல்ல முடியாதா?' என்று ஹண்டே கேட்டார்.

'பேச விரும்பினேன்; வாய்ப்புக் கிடைக்கவில்லை' என்று வீராசாமி பதில் சொன்னார்.

இதுபோல எங்கள் கட்சித் தலைவரை அவமதிக்கும் வகையில் அமானப்படுத்துவதற்காகத் திட்டமிட்டு அவதூறு செய்யும் ஒழுங்குப் பிரச்னைகள் கிளப்பப்படுமானால், பதிலுக்கு நாங்களும் அந்த நிலைக்கு இறங்க நேரிடும் என்று பி.சீனிவாசன் (அதிமுக) எச்சரித்தார்.

'நேற்றைய விவாதத்தில் நான் பங்குகொள்ளவில்லை என்றாலும் மன்றத்துக்கு வந்திருந்தேன்; வோட்டுப் போட வந்த எம்ஜிஆர், மன்றத்துக்குள் வராமல் போனது முறைதானா என்பதே என் கேள்வி' என்றார் வீராசாமி.

இதைத் தொடர்ந்து அதிமுக ஆட்சேபிக்க, திமுக வரிசையிலிருந்து மாறி மாறி ஒழுங்குப் பிரச்னைகள் கிளப்பப்பட்டு சபையில் ஒரே இரைச்சலாக இருந்தது.

'எந்த ஒரு அங்கத்தினரும் சபையில் இருந்துதான் தீர வேண்டும்; விவாதத்தில் பங்குகொண்டுதான் தீர வேண்டும் என்று யாரும் யாரையும் கட்டுப்படுத்த முடியாது' என்று சர்க்கார் கட்சித் தலைவர் நெடுஞ்செழியன் குறுக்கிட்டுச் சொல்லிவிட்டு, 'தேவை இல்லாத பிரச்னை கிளப்பப்பட்டது' என்றார்.

'ஒரு அங்கத்தினர் 60 நாள் வரை மன்றத்துக்கு வராமல் இருந்து 60-வது நாள் வந்து கையெழுத்திட்டுச் சென்றாலும் போதும் என்பதுதான் சட்டம். பேச வேண்டும்; மன்றத்துக்குள் வர வேண்டும் என்பதில்லை' என்று நெடுஞ்செழியன் விளக்கினார்.

இதை அடுத்து எட்மண்ட் (அதிமுக) இன்னொரு ஒழுங்குப் பிரச்னை எழுப்ப, அதன் மீது காரசாரமாக நடைபெற்ற விவாதத்தில் சீனிவாசன், ஹண்டே, சவுந்திரபாண்டியன் (அதிமுக) ஆகியோரும் சுருளிவேலு, வி.கிருஷ்ணமூர்த்தி, காமாட்சி, ஆறுமுகம் (திமுக) ஆகியோரும் மாறி மாறி ஒழுங்குப் பிரச்னை கிளப்பினார்கள்.

மிகுந்த சிரமத்துக்கு இடையே மன்றத்தில் அமைதியை நிலைநாட்டிய சபாநாயகர் புலவர் கோவிந்தன், 'மன்றத்துக்கு ஒரு உறுப்பினர் வந்தது, வராதது பற்றி ஒழுங்குப் பிரச்னை எழுப்ப முடியாது' என்று தீர்ப்பளித்தார். எம்ஜிஆர் வராதது குறித்து வீராசாமி சொன்னது அவதூறாக இருக்குமாதலால் அதை சபை நடவடிக்கைக் குறிப்புகளில் இருந்து நீக்கிவிட வேண்டும் என்று சீனிவாசன் விடுத்த கோரிக்கையை சபாநாயகர் ஏற்றுக்கொள்ளவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments