இந்த நாளில் அன்று(24.03.1976)த.நா.வுக்கு ரூ.2 கோடி வரிச் சலுகை - நிதி மந்திரி சி.எஸ். அறிவிப்பு
தமிழ்நாடு பட்ஜெட் இன்று லோகசபையில் நிறைவேறியது. ஓராண்டில் ரூ.2 கோடி அளவுக்கு வருவாயை இழக்கக்கூடிய வரிச் சலுகைகளை நிதி மந்திரி சி.சுப்ரமணியம் அறிவித்தார்.
தமிழ்நாடு பட்ஜெட் இன்று லோகசபையில் நிறைவேறியது. ஓராண்டில் ரூ.2 கோடி அளவுக்கு வருவாயை இழக்கக்கூடிய வரிச் சலுகைகளை நிதி மந்திரி சி.சுப்ரமணியம் அறிவித்தார்.
விவாதத்துக்கு பதிலளிக்கையில், நிதி மந்திரி சுப்ரமணியம் அறிவிக்கப்பட்ட சலுகைகள் கணிசமானதென்று கூறினார்.
தமிழ்நாட்டின் நிதி நிலவரத்தையும், ரூ.200 கோடிக்கு அதிகரிக்கப்பட்ட திட்ட முதலீட்டுக்கான நிதி வசதிகளைக் காண வேண்டிய கட்டாய நிலை இருப்பதையும் கருதி, வரிச் சலுகைகள் பெருந்தொகையாகும் என்று சுப்ரமணியம் கூறினார்.
Advertisement
வரிச் சலுகைகள் மூலம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.2 கோடி வருமானத்தை இழக்கவேண்டி இருக்கும் என்றும், இக் கணிசமான சலுகைகளை மெம்பர்கள் வரவேற்பார்கள் என்று நம்புவதாகவும் நிதி மந்திரி சுப்ரமணியம் கூறினார்.
நிதி மந்திரி மேலும் பேசுகையில், உறுப்பினர்கள் அதிக வரிச் சலுகைகளை கோரினரென்றும், தமிழ்நாட்டின் சிரமமான நிதி நிலவரத்தைக் கருதி அதிக சலுகை தர இயலவில்லை என்றும் கூறினார்.
தமிழ்நாட்டில் உள்ள பத்திரிகைகள், பல்வேறு சங்கங்கள், பொதுமக்கள் தெரிவித்த கருத்துகளை மிகவும் ஜாக்கிரதையாகப் பரிசீலித்து இந்தச் சலுகைகளைத் தருவதென முடிவு செய்ததாகத் தெரிவித்தார்.
ஆரம்பத்தில் சுப்ரமணியம், திமுக அரசு பதவியிலிருந்து நீக்கப்பட்டபோது, தமிழ்நாட்டில் இருந்த நிலவரத்தையும், பின்பு நிர்வாகத்தை சீர்படுத்தவும் எல்லாத் துறைகளிலும் அபிவிருத்திகளைக் கொணரவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையெல்லாம் விவரமாக விளக்கினார்.
மத்திய அரசாங்கம் ஏதோ அற்புதங்களை நிகழ்த்தி, ஒரே இரவில் தமிழ்நாட்டை ஒழுங்கான பாதையில் செல்லும்படி செய்துவிட முடியுமென்று எதிர்பார்க்கலாகாது என்று சுப்ரமணியம் கூறினார். ராஷ்டிரபதி நிர்வாகத்தை மேற்கொண்டபோது எல்லாம் முழு கோளாறாக இருந்ததென்று சொல்வதுதான் மிதமாக சொல்வதாக இருக்கும் என்றார்,
நிர்வாகத்தில் படிந்துள்ள ஓட்டைகளையெல்லாம் நீக்கவும், கல்வி ஸ்தாபனங்களிலும், பிற அபிவிருத்தித் துறை நிறுவனங்களிலும் எல்லாம் ஒழுங்காக இருக்கிறதென்ற தோற்றத்தை ஒருவாறு உண்டாக்கவும் நெடுநாள் பிடிக்குமென்று சுப்ரமணியம் சொன்னார்.
நிதி மந்திரி என்ற வகையில் மட்டுமின்றி தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் என்ற முறையிலும், மாநிலங்களிடையில் அதற்கு இருந்த மதிப்புமிக்க ஸ்தானம் மீண்டும் கிடைப்பதற்கானதையெல்லாம் செய்ய முயல்வதாக உறுதி அளித்தார்.
சேலம் உருக்காலை திட்டத்துக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டுமென்ற கோரிக்கையை குறிப்பிட்டு, மிக உயர் மட்டத்தில் இதைப் பற்றி பரிசீலனை நடந்துகொண்டிருக்கிறது. விரைவில் சாதகமான முடிவு எடுக்கப்படும் என்று நம்புகிறேன் என்று சுப்ரமணியம் தெரிவித்தார்.
ஒன்பது ஆண்டு திமுக ஆட்சியில், தமிழ்நாடு எவ்விதம் சீர் கெட்டுவிட்டதென்பதற்கு சில உதாரணங்களை எடுத்துரைத்தார். தமிழ்நாட்டில் நீர் வசதிகளும் எப்படி வீணாகியது என்பதையும் விவரித்தார்.