இந்த நாளில் அன்று(30.3.1982)சென்னையில் புதிதாக ஆட்டோவுக்கு பர்மிட் இல்லை
சென்னை நகரில் புதிதாக ஆட்டோ ரிக்ஷாக்களுக்கு பர்மிட் தருவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ். முத்துசாமி தெரிவித்தார்.
சென்னை நகரில் புதிதாக ஆட்டோ ரிக்ஷாக்களுக்கு பர்மிட் தருவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ். முத்துசாமி தெரிவித்தார்.
செ.ராமலிங்கம் (திமுக) கேள்விக்கு பதிலளிக்கையில், மீட்டர்களில் தில்லுமுல்லுகள் செய்வதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். பனிரெண்டு மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர்கள் மீட்டர் கண்காணிப்புக்காக நியமிக்கப் பட்டுள்ளார்கள் என்ற விவரத்தையும் அமைச்சர் தெரிவித்தார்.
டாக்ஸி மற்றும் ஆட்டோ ரிக்ஷாக்களில் பொருத்தப்படும் மீட்டர்களில் உள்ள குறைபாடுகளைப் போக்க மீட்டர் திருத்துபவர்களுக்கு (மெக்கானிக்குகளுக்கு) அதிகாரச் சீட்டுகள் வழங்கப்படும். அத்தகைய சீட்டு பெறாதவர் மீட்டர் சரி பார்க்கும் பணியில் ஈடுபட முடியாது. அதிகார சீட்டு பெற்றவர்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட மீட்டர் முத்திரை வழங்கப்படும். அவர் சரி செய்த மீட்டர்கள் மீது அவரது முத்திரை வைக்கப்பட வேண்டும். பின்னர் அந்த பகுதி வட்டார போக்குவரத்து அலுவலர் மீட்டரை பரிசோதனை செய்து அவரது முத்திரையும் முத்திரை மீது வைக்கப்படும்.
Advertisement
இதில் அதிகாரச் சீட்டுப் பெற்ற மெக்கானிக் ஏதேனும் முறைகேடுகளில் ஈடுபட்டதாக தெரியவந்தால், அவரது அதிகாரச் சீட்டு ரத்து செய்யப்படும். இந்த முறை முதல் முதலாக சென்னை நகரில் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மீட்டர் குறைபாடுகளைக் கண்டறிந்து தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி போக்குவரத்து மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது என்ற விவரங்களையும் போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்தார்.
தவறு செய்யும் டாக்ஸி, ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, அனைத்துக் கட்சியினரும் அதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.