வணக்கம் தமிழா: அனுபவ அஸ்திவாரத்தில் வெற்றிக் கட்டடம்!
சென்னையின் முக்கிய பகுதிகளில் அடுக்குமாடி வீடுகள் கட்டும் கட்டுமானப் பணிகளில் இந்திய அளவில் சிறந்த குடியிருப்புக்கான விருதைப் பெற்றிருக்கும் நிறுவனம் "அஸ்வினி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்'. இதன் நிறுவனர், இயக்குநர
சென்னையின் முக்கிய பகுதிகளில் அடுக்குமாடி வீடுகள் கட்டும் கட்டுமானப் பணிகளில் இந்திய அளவில் சிறந்த குடியிருப்புக்கான விருதைப் பெற்றிருக்கும் நிறுவனம் "அஸ்வினி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்'. இதன் நிறுவனர், இயக்குநரான சிவகுருநாதன். நிறுவனத்தை ஆரம்பித்த பத்து ஆண்டுகளில் ஏறக்குறைய ஐந்து லட்சம் சதுர அடிகளில் கட்டுமானப் பணியை இதுவரை முடித்திருக்கிறார். முதல் தலைமுறை கட்டுமானத் தொழில் அதிபராகியிருக்கும் அவர் நம்மிடம் பேசியதிலிருந்து...
""எனக்குப் பூர்வீகம் நாகர்கோவில். என்னுடைய தந்தை சுவாமிநாதப் பிள்ளை, ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, அவரது இடைவிடாத படிப்பினால் நான்கு முனைவர் பட்டங்களைப் பெற்று, கோவை, பாரதியார் பல்கலைக் கழகத்தில், தொலைநிலைக் கல்வித் துறைக்கு இயக்குநராக இருந்து பணியை இறுதி செய்தவர்.
அவர் எப்போதும் என்னிடம் ""படிப்புதான் உன்னுடைய சொத்து; அதுதான் உன்னைக் காப்பாற்றும்'' என்று வலியுறுத்திக் கொண்டே இருப்பார்.
அவரது வார்த்தைகள் நான் சோர்வடையும் போதெல்லாம் என்னை உத்வேகப்படுத்தும். சென்னை, லயோலா கல்லூரியில் பி.காம் படித்தேன். அதன் பின் மதுரை, காமராஜர் பல்கலைக் கழகத்தில் எம்.காம் படித்தேன். அக்கவுண்ட்ஸ் தொடர்பான பணியில் என்னை ஈடுபடுத்திக் கொள்ளவே பெரிதும் நான் விரும்பினேன்.
சென்னையிலிருக்கும் பிரபல கட்டுமானப் பணி நிறுவனங்களில் ஒன்றான ரமணியம் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் மேலாளராகப் பணியில் சேர்ந்தேன். அங்குதான் கட்டுமானப் பணிகளில் இருக்கும் பல நுணுக்கங்களை நான் கற்றுக் கொண்டேன். ஓர் இடத்தில் கட்டுமானப் பணியைத் தொடங்குவதற்கு முன் என்னென்ன விஷயங்களைச் செய்யவேண்டும். எதற்கெல்லாம் எப்படிப்பட்ட அனுமதிகளை முறையாக வாங்கவேண்டும் என்பதையெல்லாம் நேரடியாகக் கவனித்தேன்.
பணியில் நான் சிரத்தையாக இருந்ததால் அந்த நிறுவனத்திலேயே ஜெனரல் மேனேஜராக உயர்த்தப்பட்டேன். பதவி உயர்வுக்கு ஏற்றபடி பணியிலும் நிறையப் பொறுப்புகள் கூடின. அதையும் கவனத்தோடு செய்துவந்தேன். ரமணியம் நிறுவனத்தில் எனக்குக் கிடைத்த ஆறுவருட அனுபவங்கள், கட்டுமானத் துறையில் இருக்கும் பல நெளிவுசுளிவுகளை எனக்குப் புரியவைத்தன. அந்தத் துறையில் இருக்கும் சவால் என்பதே கிடைக்கிற நன்மதிப்பை தக்கவைத்துக் கொள்வதுதான்.
கட்டுமானத் துறையில் இருக்கும் இந்த சவால் எனக்குப் பிடித்திருந்தது. இந்தச் சமயத்தில்தான், "அல்மா மேட்டர்' என்னும் அமைப்பின் மூலம் தன்னம்பிக்கையை வளர்க்கும் பயிற்சி முகாம்களை நாடெங்கும் நடத்திவரும் ரங்கராஜன் எனக்கு அறிமுகமானார். அவரின் அணுகுமுறைகளும் பேச்சுகளும் "எனக்கான இலக்கு' இதுவல்ல என்பதை எனக்குப் புரியவைத்தன. அதேசமயத்தில் "இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைப்படுவதா?' என்பது போன்ற தயக்கங்களும் எனக்கு இருந்தன.
அந்தச் சமயத்தில் நான் குருஜியாக மதிக்கும் ரங்கராஜன் எனக்குச் சொன்ன மந்திரம்: "துணிவே துணை'! எந்த விஷயத்திலும் துணிந்து இறங்காதவன் வாழ்க்கையில் முன்னேற முடியாது என்பது ஆகும்.
குருஜியின் இந்த அறிவுரைக்குப் பின், துணிந்து நான் எடுத்த முடிவுதான் "அஸ்வினி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்' என்கிற அமைப்பு கட்டுமானப் பணியில் எனக்கிருந்த ஆறு ஆண்டுகள் அனுபவத்தையும் நம்பிக்கையையும் மட்டுமே அஸ்திவாரமாகக் கொண்டு கட்டுமான நிறுவனத்தை 1999-ல் தொடங்கினேன்.
கட்டுமான நிறுவனத்தை தொடங்கிய நேரத்தில் எங்களுக்குப் பெரிதும் சவாலாக இருந்த விஷயம் பணத் தட்டுப்பாடுதான். அந்தச் சமயத்தில் நாடெங்குமே பொருளாதார ரீதியான தட்டுப்பாடு இருந்தது. சைதாப்பேட்டை, மந்தைவெளி, கோடம்பாக்கம், அடையாறு... இப்படி சென்னையின் பல பகுதிகளிலும் எங்களின் நிறுவனம் சார்பாக அடுக்ககங்களைக் கட்டிக் கொண்டிருந்தோம்.
இந்தச் சமயத்தில்தான் என்னுடைய நிறுவனத்தில் பங்குதாரராக ஆர்த்தி ரஸி என்பவர் சேர்ந்தார். அவர் மார்க்கெட்டிங், டாக்குமென்டேஷன் போன்ற பணிகளில் கவனம் செலுத்த, நான் கட்டுமானப் பணிகளிலும், பிளான் அப்ரூவல், கட்டுமானப் பணிக்கான இடத்தை தேர்வு செய்தல் போன்ற பணிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.
உண்மை, நன்னடத்தை, வாடிக்கையாளர்களிடம் சொன்ன சொல்லைக் காப்பாற்றுதல் இவை மூன்றும் எந்தத் தொழிலுக்கும் முக்கியம். இவைகளை நாங்கள் எங்கள் கொள்கை முடிவாகவே வைத்திருந்தோம். இதன் பலனாக, கடந்த ஆண்டு இந்திய அளவில் "சிறந்த குடியிருப்புக்கான கட்டுமானப் பணிக்காக' வழங்கப்படும் இதஐநஐக-இதஅஉஈஅஐ அமைப்பின் "பான் இந்தியா' விருது எங்கள் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இந்த விருது கட்டுமானத் துறையில் இருப்பவர்களுக்கு ஒரு மைல் கல்! நிறுவனம் ஆரம்பித்து பத்தாண்டுகள் உழைப்புக்கேற்ற மரிதையாக இந்த விருதை நினைக்கிறேன். ராமாபுரத்தில் கட்டப்பட்ட "அஸ்வினி அமரிஷா' என்னும் ஓர் அடுக்கக குடியிருப்புக்காக இந்த விருது அளிக்கப்பட்டது.
என்னுடைய தந்தையால் அவரின் பணி ஓய்வுக்குப் பின் கிடைத்த தொகையால்தான் ஒரு வீடு வாங்க முடிந்தது. நடுத்தர வர்க்கத்து மக்களின் லட்சியம், கனவு எல்லாமே ஒரு வீடாகத்தான் இருக்கும். வீடு வாங்குவதில் இருக்கும் வலியை நடுத்தர வர்க்கத்திலிருந்து வந்த நான் நன்றாகவே உணர்வேன். அதனால்தான் எவ்வளவுதான் வசதியானவர்களுக்கான கட்டுமானப் பணிகளைச் செய்தாலும் நடுத்தர மக்களும் பயன் அடையும் வகையில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை கட்டித்தருவதை என்னுடைய தொழிலின் மூலமாக நான் செய்யும் சமூகக் கடமையாக நினைக்கிறேன்.
சொந்த இடம் உள்ளவர்களுக்கு வீடு கட்டித்தர, சதுர அடிக்கு ரூ. 1500 கட்டணம் பெறும் இன்றைய காலகட்டத்தில், எங்களால் கட்டப்படும் வீடுகளுக்கு கட்டணமாக சதுர அடிக்கு ரூ. 1799 மட்டுமே பெறுகிறோம்.
இந்தத் துறையில் எங்களின் அனுபவ அஸ்திவாரம் பலமாக இருப்பதால்தான் இதுபோன்ற வெற்றிக் கட்டடங்கள் எங்களால் சாத்தியமாகின்றன!
கட்டுமானத் தொழிலை ஆரம்பித்த காலத்தில் எங்களுக்கு ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல்கள் ஏராளம். அந்தச் சிரமத்தைச் சொல்லி மாளாது. ஆனால் அத்தனையையும் சமாளித்தோம். இன்றைக்கு "பான் இந்தியா' விருது பெற்ற நம்பிக்கையான நிறுவனமாக நாங்கள் வளர்ந்திருப்பதால், பல நிதி நிறுவனங்களும், வங்கிகளும் எங்களுடன் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றன. இன்னும் நிறைய இந்தச் சமூகத்துக்குச் செய்வோம். அந்த நம்பிக்கை எங்களிடம் நிறைய இருக்கிறது'' என்றார் புன்னகையுடன் சிவகுருநாதன்.
- ரவிக்குமார்