முகப்பு
கண்ணோட்டம்

வாடிக்கையாளர்களின் திருப்தியால் உயர்ந்தேன்!

காது குத்துவதிலிருந்து கல்யாண வைபவங்கள் வரை வீட்டில் ஒரு விசேஷம் என்றால், அதிலும் பத்திரிகை அடித்து உறவினர்களை அழைக்கும் விசேஷம் என்றால் அழைப்பிதழ்களை வாங்குவதற்கு மனதில் தோன்றும் இடம், சென்னை, பாரிமு

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:02 PM
பகிர்:

காது குத்துவதிலிருந்து கல்யாண வைபவங்கள் வரை வீட்டில் ஒரு விசேஷம் என்றால், அதிலும் பத்திரிகை அடித்து உறவினர்களை அழைக்கும் விசேஷம் என்றால் அழைப்பிதழ்களை வாங்குவதற்கு மனதில் தோன்றும் இடம், சென்னை, பாரிமுனையில் இருக்கும் "ஒலிம்பிக் கார்ட்ஸ்' ஆகத்தான் இருக்கும்.

அந்த அளவுக்கு மக்களிடையே கடந்த 50 ஆண்டுகளாக அழைப்பிதழ் விற்பனையில் பேர்பெற்றிருக்கும் நிறுவனமாக உயர்ந்திருக்கும் இந்த நிறுவனத்தின் பின்னணி, வெற்றி ரகசியம், உழைப்பு ஆகியவை குறித்து நம்மிடையே பகிர்ந்து கொண்டார் அந்த நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ஹெச். நூர் முகம்மது.

""எங்கள் குடும்பத்திற்கு பூர்வீகம் என்றால் அது ராமநாதபுரம், இளையான்குடியிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் சோதரர் குடி. அங்கிருந்து என்னுடைய தகப்பனார் அபிபுல்லா, பர்மா சென்று அங்கு "பமாத்தி பேப்பர் மார்ட்' என்னும் கடையை வெற்றிகரமாக நடத்தி வந்தார்.

நான் பிறந்தது பர்மாவில்தான். 1962-ஆம் ஆண்டில் பர்மா ஆட்சியாளர்கள் "பர்மா பர்மியருக்கே' என்ற கோஷத்தை முன்வைத்து மற்றவர்களின் தொழில்களை அபகரித்து, அங்கு வாழ முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தினார்கள். எனவே, பர்மாவிலிருந்து நாங்கள் சென்னைக்கு திரும்ப வேண்டியதாயிற்று. சென்னையில் என்னுடைய தந்தை "ஒலிம்பியா பேப்பர் அண்ட் ஸ்டேஷனரிஸ்' கடையைத் துவங்கினார்.

1965-லேயே நானும் என்னுடைய அண்ணன், தம்பிகள் அனைவரும் பள்ளியில் படித்த நேரம் போக, மற்ற நேரங்களில் கடையில்தான் இருப்போம். அப்போதெல்லாம் இவ்வளவு கடைகள் இந்தத் தெருவில் இருக்காது.

1974-ல் நான் எஸ்.எஸ்.எல்.சி முடித்துவிட்டேன். 1978-ல் பட்டதாரியாகிவிட்டேன். அப்போதே கடையின் பொறுப்பையும் நான் கவனிக்க ஆரம்பித்துவிட்டேன். 67-70களில் எல்லாம் திருமண அழைப்பிதழ்கள் மஞ்சள், சிகப்பு அட்டைகளில்தான் விநியோகம் செய்யப்படும். அதன்பின்தான் பாரம்பரியமாக இப்படி அடிக்கப்படும் திருமண அழைப்பிதழ்களைத் தவிர, வெவ்வேறு வடிவமைப்புகளில் திருமண அழைப்பிதழ்களை அச்சடித்துக் கொடுக்கும் பழக்கம் வேகமாகப் பரவியது. இந்தப் பரவலுக்கு ஏற்றாற்போல் விதவிதமான திருமண அழைப்பிதழ் அட்டைகள் தேவைப்பட்டன. புதுப்புது டிசைன்களில் நாங்களே திருமண அழைப்பிதழ்களைத் தயாரிக்கத் தொடங்கினோம். இந்த சமயத்தில் என்னுடைய தம்பிக்குரிய பாகத்தைப் பிரித்துக் கொடுத்துவிட்டோம். அவர் தனியாக கடையை நடத்திக் கொண்டிருக்கிறார்.

1978-ல் எனக்கு திருமணம் நடந்தது. எனக்கு ஐந்து மகன்கள். மூவருக்குத் திருமணம் ஆகிவிட்டது. இருவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. கடையை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பத்துக்கு பத்து அறையில் பேப்பர் வியாபாரத்தை இந்த பாரிமுனையில் தொடங்கிய நாங்கள், இன்றைக்கு சொந்தக் கட்டடத்தில் எங்களின் தொழிலை நடத்துகிறோம். எங்களின் திருமண அட்டைகள் தயாரிப்புத் தொழிற்சாலையை வியாசர்பாடியில் 45 ஆயிரம் சதுர அடியில் வைத்துள்ளோம். எங்களிடமே மல்ட்டி கலர் ஆஃப்செட் மிஷின்கள், மூலப்பொருட்கள், தொழில்நுட்ப உத்திகள், வல்லுனர்கள் இருப்பதால் தரமான பொருளை நியாயமான விலையில் எங்களால் வாடிக்கையாளருக்குக் கொடுக்க முடிகிறது.

அழைப்பிதழ் தொழிலில் எங்களுக்கு இருக்கும் 50 வருட அனுபவத்தில் வாடிக்கையாளர் கேட்கும் எந்த வகை டிசைனையும் எங்களால் உருவாக்கித் தரமுடியும் என்பதை பல சந்தர்ப்பங்களில் நிரூபித்திருக்கிறோம். இதன் பலனாக அரசு சார்பாக நடக்கும் விழாக்களுக்குக் கூட எங்களிடமே அழைப்பிதழ்களை தயார் செய்துகொண்டு போவார்கள். இதை எங்களுக்கு கிடைத்த பெருமையாக நினைக்கிறோம்.

எப்போதும் கையிருப்பு இருக்கக்கூடிய பொருள்கள் என்று இந்தத் துறையில் சில இருக்கின்றன. அதேபோல் வாடிக்கையாளர்களுக்குப் பிடித்த பொருள்கள் என்று சில இருக்கின்றன. இவை இரண்டுமே எங்களின் தொழிலுக்கு இரண்டு கண்கள். இந்த எச்சரிக்கை உணர்வை எங்களின் கொள்கை முடிவாகவே வைத்திருக்கிறோம். எங்களின் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் எந்தப் பொருளையும் எதிர்பார்த்து வந்து, "அது தற்போது கையிருப்பு இல்லை' என்று நாங்கள் சொன்னதே கிடையாது. அழைப்பிதழ்கள் தொடர்பான எந்தப் பொருளும் எங்களிடம் தங்கு தடையின்றி கிடைத்துக் கொண்டே இருக்கும் என்னும் நிலையை உருவாக்கினோம். இந்த நிலையை அடைவதற்கு நிறைய உழைப்பு தேவைப்பட்டது.

எங்களுக்கு தியாகராய நகர், கோடம்பாக்கம், திருவான்மியூர், கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் நேரடியான கிளைகள் உள்ளன. இவை தவிர, கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வேற்று மாநிலங்களிலும் எங்களுக்கு விற்பனையாளர்கள் இருக்கின்றனர்.

இலங்கை, மலேசியா, துபாய், அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளிலிலிருக்கும் தமிழர்கள் இணையத்தின் வழியாகவும் அவர்களுக்குத் தேவைப்படும் அழைப்பிதழ்களை செய்துதரச் சொல்லி ஆர்டர்கள் தருகிறார்கள். அவர்களுக்கு ஏர்-கூரியர் மூலம் நாங்கள் அனுப்பிவைக்கிறோம்.

1998-ல் ஒலிம்பிக் கார்ட்ஸ் தனியார் நிறுவனமாக எங்களின் நிறுவனத்தை மாற்றிக் கொண்டோம். எங்களிடம் 225 நேரடி ஊழியர்கள் பணியிலிருக்கிறார்கள். அவர்களுக்குரிய பி.எஃப், இ.எஸ்.ஐ. போன்ற எல்லா நடைமுறைகளையும் முறையாகச் செய்கிறோம். ஒரு தொழிலில் வெற்றி பெறுவதைவிட அந்த வெற்றியை தக்கவைத்துக் கொள்வதற்கு நிறைய திறமைகள் வேண்டும். நிறைய அர்ப்பணிப்பு உணர்வு வேண்டும். இத்தகைய உணர்வு அந்தத் தொழிலை நடத்தும் முதலாளிக்கு மட்டும் இருந்தால் போதாது. அந்த தொழிலிலிருக்கும் கடைக்கோடி ஊழியர் வரைக்கும் இருக்கவேண்டும். அப்படி இருந்ததால்தான் எங்களின் தொழில் விரிவடைந்தது.

அழைப்பிதழ் அட்டையின் விலை ஒரு ரூபாயிலிருந்து ஒரு அழைப்பிதழின் விலை 700 ரூபாய் வரையிலும் எங்களிடம் பல வகைகள் இருக்கின்றன. அதனால் அவரவரின் வசதிக்கு ஏற்ப எங்களிடம் வாங்கிச் செல்வதற்கு முடியும்.

சின்ன வயதில் நான் என்னுடைய அண்ணன் தம்பிகளுடன் வாடிக்கையாளர்களுடன் சகஜமாகப் பேசி, வியாபாரம் செய்து, அவர்களுக்கான பேப்பர் பண்டல்களை நாங்கள் தூக்கிக் கொண்டு வண்டியிலேற்ற உதவியதை எல்லாம் நினைத்துப் பார்க்கிறேன். அந்த உழைப்பைத்தான் இன்று எங்களிடம் பணியிலிருக்கும் ஊழியர்களுக்கும் சொல்லிக் கொடுக்கிறோம். அவர்களும் அதைக் கடைப்பிடிப்பதால்தான் எத்தனை கடைகள் வந்தாலும், "கைராசி நிறுவனம்' என்னும் பெயரை நாங்கள் சம்பாதித்து வைத்திருப்பதற்கு மூலகாரணம் என்பேன்.

முழு கட்டுரையைப் படிக்க →