1912 - ம் ஆண்டு பிறந்த பிரபல ஹரிகதை இசைக் கலைஞர் சி. பன்னிபாயின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு நிகழ்ச்சியாக, சுனாதா அறக்கட்டளை, சென்னை ஃபைன் ஆர்ட்ஸ் மற்றும் நாரதகான சபாவுடன் இணைந்து, கடந்த வெள்ளிக்கிழமையன்று, நாரதகான சபா சிற்றரங்கில், முனைவர் அரிமளம் பத்மநாபனின் "சத்தியவான் - சாவித்ரி' இசை உரையை நடத்தியது. நிகழ்ச்சியிலிருந்து சுவையான பகுதிகளின் தொகுப்பு:
""சத்தியவான் - சாவித்ரி' இசை நாடகம், 1890 - ம் ஆண்டு சங்கரதாஸ் சுவாமிகளால் எழுதப்பட்டது. 150 பாடல்களைக் கொண்ட இந்நாடகத்தின் நடுவே வசனங்களும் வரும். பாடல்கள் வர்ண மெட்டுக்களில் அமைந்தவை. இருபத்து நான்கு காவடிச்சிந்து வர்ண மெட்டுக்களைச் சேர்த்து அவர் இசையமைத்துள்ள நாடகம் இது.
நல்ல சங்கீதத்தை, தன் நாடகங்களின் மூலம் கிராமங்களுக்கும் கொண்டு சென்றவர் சங்கரதாஸ். நாலாயிரம் சந்தப் பாடல்கள் புனைந்து பெருமை பெற்றவர். கே.பி.சுந்தராம்பாள் தன் "கணீர்' குரலில் பாடிய மிகப் பிரபலமான "ஞானப்பழத்தைப் பிழிந்து' எனும் பாடல் இவர் தன் நாடகத்துக்காக இயற்றி இசையமைத்ததுதான். இவருடைய நாடகங்களில் மக்களிடையே பிரபலமான காபி, பெஹாக் மெட்டுப் பாடல்கள் நிறையவே அமைந்திருக்கும்.
சங்கரதாஸ் சுவாமிகள், தாளப் பின்னல்களில் மாமேதை. கர்நாடக இசையோடு, ஹிந்துஸ்தானி மற்றும் மேற்கத்திய இசையிலும் தேர்ச்சி பெற்றவர் இவர். "சத்தியவான் - சாவித்ரி' நாடகத்தைப் பார்த்த மகாகவி பாரதியார், இவருடைய வர்ணமெட்டுப் பாடல்களில் லயித்து, இவரைப் பெரிதும் பாராட்டியுள்ளார்.
இவருடைய நாடகங்களில் நடித்து, பாடல்கள் பாடிப் பிரபலமானோர் நூற்றுக்கணக்கானவர்கள். இவர்களில் எஸ்.ஜி.கிட்டப்பா, விஸ்வநாத தாஸ் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவரிடம் கற்றுத்தேர்ந்து, திரைப்பட இசையமைப்பாளர்களாக சிறப்புப் பெற்றவர்கள் பலர். எஸ்.எம்.சுப்பய்யா நாயுடுவிலிருந்து எம்.எஸ். விஸ்வநாதன் வரையிலான இசைக்கலைஞர்கள்.
நாடகங்களில் தியாகராஜ கீர்த்தனைகளையும் சேர்த்துப்பாடி, கிராமங்களிலும் அப்பாடல்களைப் பிரபலமாக்கிய பெருமை அவரையே சாரும். அவருடைய நாடக நகைச்சுவை வசனங்கள் இன்றும் ரசிக்கத்தக்கவை. இன்றைய திரைப்படங்களிலும் இடம் பெறுகிற "கதாநாயகனோடு வரும் தோழன்' என்ற மரபு அவரிடமிருந்தே தொடங்கியது.''
இப்படி சங்கரதாஸ் சுவாமிகளைப் பற்றிய பல தகவல்களைத் தன் சொற்பொழிவின் நடுவே அளித்த அரிமளம் பத்மநாபன், "சத்தியவான் - சாவித்ரி' நாடகக் கதையை, அந்நாடகத்தின் பாடல்கள் மூலம் விளக்கினார்.
""இளவரசன் சத்தியவான் ஒரு மாவீரன். அவன் வெளிநாடு சென்ற சமயம் பார்த்து, கஜகேது என்ற கலிங்க மன்னன் படையெடுத்து, நாட்டைக் கைப்பற்றி, சத்தியவானின் தாய்தந்தையரின் கண்களைக் குருடாக்கி காட்டிற்குத் துரத்தி விடுகிறான். சத்தியவானின் நண்பன் சுமாலி, சத்தியவானைத் திரும்ப அழைத்து வருகிறான். வரும் வழியில் கானகத்தில் ஒரு சிங்கத்தோடு போராடி, சத்தியவான், மன்னன் அசுவபதியின் மகள் சாவித்ரியைக் காப்பாற்றுகிறான். அவர்களுக்குள் காதல் மலர்கிறது.
சத்தியவான் நாடு இழந்தாலும், அவன் ஓராண்டில் மரணமடைவான் என்று தெரிந்தாலும், காதல் மாறாமல் அவனை மணக்கிறாள் சாவித்ரி. குறிப்பிட்ட நாளில் எமதூதர்கள் சத்தியவானின் உயிரைப் பறித்து எமலோகம் எடுத்துச் செல்கின்றனர். சாவித்ரி விடாமல் அவர்களைத் துரத்திச் சென்று, நேராக யமனிடமே வாதாடி, பல போராட்டங்களுக்குப்பின் சத்தியவானையும், இழந்த நாட்டையும் மீட்கிறாள். நாரத முனிவர் எல்லாக்கட்டங்களிலும் அவளுக்குத் துணை நிற்கிறார்.
நாடகத்தின் முத்தாய்ப்பாகக் கடைசிக் காட்சியில், வெற்றியோடு சாவித்ரி செல்லும்போது, எமதர்மராஜன் தன் மனைவியை அழைத்து உட்காரச் சொல்லி, சாவித்ரியிடம் "பூலோகத்திலிருந்து வந்துள்ள தமிழ் நாட்டுப்பெண்ணே, நீ உன் கற்பின் மகிமையை நிலை நாட்டியதை இவளுக்குச் சொல்' என்கிறான். சாவித்ரி "கற்பு மனைவிமார்கள்' என்ற நொண்டிச் சிந்து பாடலில் ஒரு மனைவியின் கடமைகளை வரிசைப்படுத்திச் சொல்லியதும், எமன் மகிழ்ந்து அவளை வாழ்த்தி அனுப்புகிறான்'' என்ற அரிமளம் பத்மநாபன்,
இந்த நாடகத்தின் பாடல்களை அதன் மூலத்தன்மை சிதைந்து விடாமல், அப்படியே தன் கம்பீரமான குரலில், தெள்ளத் தெளிவாய்ப் பாடி, அரங்கத்திலிருந்தோரை நெகிழ வைத்தார்.
"நண்பன் உயிர்மீட்டு வந்த', "எட்டுபேர் முன்னே இழுக்க', "அன்பர் தொழு மாறனோ', "ஏனோ என்னை எழுப்பலானாய் மடமானே', "உமை நான் பிரிந்தாலும்', "எட்டி நில்லும் நாரதரே', "கற்பு மனைவிமார்கள்' போன்ற பல காதுக்கினிய பாடல்களைப் பக்கவாத்தியங்களுடன் பாடி மகிழ்வித்தார் பத்மநாபன்.
ஹரிகதை இசை வல்லுநரான "பன்னிபாயி'ன் நூற்றாண்டு விழாவில், நாடக இசைமேதையான சங்கரதாஸ் சுவாமிகளைப் பற்றிய இசைச்சொற்பொழிவு இடம் பெற்றது, அவ்விரு மாமேதைகளின் புகழுக்கு, மேலும் பெருமை சேர்ப்பதாகவே அமைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.