தனிமையோடு பேசுங்கள்: இராச. கிருட்டினன்
மெல்லப் பேசுங்கள் - உண்மை
சொல்லிப் பேசுங்கள்!
தனிமை யோடே இனிமை யுடனே
கனிவாய்ப் பேசுங்கள்!
நன்றாய்ப் பேசுங்கள் - தவறா
தென்றும் பேசுங்கள்!
தன்னைத் தானே என்றும் அறிய
ஒன்றிப் பேசுங்கள்!
நிறையப் பேசுங்கள் - பாரம்
குறையப் பேசுங்கள்!
ஒளிவோ மறைவோ சற்றும் இன்றித்
தெளிவாய்ப் பேசுங்கள்!
மாயக் கண்ணாடி - மனமோர்
தூய கண்ணாடி !
வலத்தை இடத்தை மாற்றாக் குழப்பம்
விலக்கும் கண்ணாடி !
குற்றம் கண்டிடலாம் - நிறைகள்
பற்றிக் கண்டிடலாம்!
உண்மை தன்னை உரிய வகையில்
கண்ணாற் கண்டிடலாம் !
தன்னை அறிந்திடலாம் - பொறுமை
இன்மை அறிந்திடலாம்!
சித்தம் புத்தி அகங்கா ரத்தின்
வித்தை அறிந்திடலாம்!
உற்றுக் கேளுங்கள் - எதையும்
பற்றாய்க் கேளுங்கள்!
மனத்தின் கூற்றை கவனத் தோடே
தினமும் கேளுங்கள்!
இனிக்கும் தருணங்கள் - கண்கள்
பனிக்கும் தருணங்கள்!
தனிமை தானே தனக்குள் பேசக்
கனிந்த தருணங்கள்!