பாடல் - 7
அன்னைமீர், அணி மாமயில், சிறுமான்
இவள் நம்மைக் கைவலிந்து
என்ன வார்த்தையும் கேட்குறாள்,
தொலைவில்லிமங்கலம் என்றலால்,
முன்னம் நோற்ற விதிகொலோ? முகில்வண்ணன்
மாயம்கொலோ? அவன்
சின்னமும் திருநாமமும் இவள் வாயனகள் திருந்தவே.
அன்னைமார்களே, அழகிய, சிறந்த மயிலைப்போன்ற, சிறு மானைப்போன்ற இந்தப்பெண் நம் பேச்சைக் கேட்பதில்லை, தொலைவில்லிமங்கலத்தை எண்ணினால், வேறு எந்த வார்த்தையும் இவள் காதில் சேர்வதில்லை, இது ஏன்? முற்பிறவியில் இவள் செய்த புண்ணியமோ? முகில்வண்ணனின் மாயமோ? அவனுடைய திருத்தமான திருச்சின்னங்களையும் திருநாமங்களையுமே இவள் எப்போதும் சொல்லிக்கொண்டிருக்கிறாளே.
***
பாடல் - 8
திருந்து வேதமும் வேள்வியும் திருமாமகளிரும்
தாம் மலிந்து
இருந்து வாழ் பொருநெல் வடகரை வண்
தொலைவில்லிமங்கலம்
கரும்தடம்கண்ணி கைதொழுத அந்நாள்
தொடங்கி இந்நாள்தொறும்
இருந்து இருந்து 'அரவிந்த லோசந' என்று என்றே
நைந்து இரங்குமே.
திருத்தமான வேதங்கள், வேள்விகள், அழகிய செல்வம் ஆகியவற்றைக்கொண்ட அந்தணர்கள் நிறைந்து வாழ்கிற திருத்தலம், தொலைவில்லிமங்கலம், தாமிரபரணிக்கு வடகரையிலே இருக்கும் வளமான ஊர், அத்தகைய தொலைவில்லிமங்கலத்திலே, இந்தக் கருமையான, பெரிய கண்களைக்கொண்ட பெண் கைகூப்பித் தொழுதாள், அன்றைக்குத் தொடங்கி இன்றுவரை இவள் எந்நேரமும் 'தாமரைக்கண்ணா' என்று எம்பெருமான் பெயரையே சொல்கிறாள், நைந்துபோகிறாள், மனம் உருகுகிறாள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.