நாள்தோறும் நம்மாழ்வார்

ஐந்தாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 3, 4

பேயான பூதனை

செ.குளோரியான்

பாடல் - 3

ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன், பேய்முலை
சார்ந்து சுவைத்த செவ்வாயன் என்னை நிறைகொண்டான்,
பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடு அன்றி ஓர் சொல்
                                                                                                 இல்லேன்,
தீர்ந்த என் தோழி, என் செய்யும் ஊரவர் கவ்வையே?

(இறைவன்மீது விருப்பம்கொண்ட ஒரு பெண் சொல்கிறாள்.) தன்னைக் கொல்வதற்காகச் சக்கரத்தின் வடிவத்தில் ஊர்ந்துவந்த சகடாசுரனை உதைத்த திருப்பாதங்களைக் கொண்டவன், பேயான பூதனையின் மார்பகங்களில் பால் குடித்து அவளை வீழ்த்திய செவ்வாயன், அவன் என் அடக்கத்தைக் கொள்ளைகொண்டான், எங்கே சென்றாலும் வந்தாலும் எப்போதும் அவனைப் பற்றியே நான் பேசுகிறேன், வேறெந்தப் பேச்சும் எனக்கு இல்லை, என்மீது அக்கறை கொண்ட தோழியே, மற்ற எதிலும் விருப்பமில்லாமல் எனக்கு நெருக்கமாக இருப்பவளே, இந்த ஊர்மக்கள் என்னைப் பற்றிச் சொல்லும் பழிச்சொல் இனி என்னை என்ன செய்யும்?

******

பாடல் - 4

ஊரவர் கவ்வை எரு விட்டு அன்னைசொல் நீர்படுத்து
ஈரநெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெரும்செய்யுள்
பேர் அமர் காதல் கடல் புரைய விளைவித்த
கார் அமர் மேனி நம் கண்ணன் தோழீ, கடியனே?

(இறைவன்மீது விருப்பம்கொண்ட ஒரு பெண் சொல்கிறாள்.) என் நெஞ்சம் என்கிற வயலிலே, எம்பெருமான் மீது கொண்ட ஆசை என்கிற நெல்லை விதைத்தேன், ஊராருடைய பழிச்சொல்லே அந்தக் காதலுக்கு எருவானது, என் அன்னையின் அன்பான சொற்களே அதற்கு நீரானது, மேகம்போன்ற திருமேனியைக்கொண்ட நம் கண்ணன் அந்தக் காதலைக் கடல்போல் விளையச்செய்தான். அவனைப் பழிக்கலாமா? (கூடாது.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்கள் நலத்திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் -செ.ராபா்ட் புரூஸ் எம்.பி. வலியுறுத்தல்

பெரியசேமூா் நெசவாளா் குடியிருப்புவாசிகளுக்கு பட்டா வழங்கக் கோரிக்கை

திமுகவை வீழ்த்தக்கூடிய சக்தி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத்தான் உள்ளது - வானதி சீனிவாசன்

சாலையோரம் படுத்திருந்த சிறுத்தை: வாகன ஓட்டிகள் அச்சம்

போடி நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ - பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT