பாடல் - 3
காத்த எம் கூத்தாவோ மலை ஏந்திக்
கல்மாரி தன்னை,
பூத் தண் துழாய் முடியாய், புனை கொன்றை
அம் செஞ்சடையாய்,
வாய்த்த என் நான்முகனே, வந்து என்
ஆருயிர் நீ ஆனால்
ஏத்த அரும் கீர்த்தியினாய், உன்னை எங்கு
தலைப்பெய்வனே?
கோவர்த்தன மலையை ஏந்திக் கல்மழையைத் தடுத்துப் பசுக்களைக் காத்த எங்கள் கூத்தனே, மலர்கள் நிறைந்த, குளிர்ந்த துளசியினைச் சூடிய திருமுடியைக் கொண்டவனே, சடையிலே கொன்றை மாலை அணிந்த சிவனே, சிறந்த என் பிரம்மனே, எம்மைப்போன்ற எளியவர்களால் போற்றமுடியாத அளவுக்குப் பெரும்புகழ் கொண்டவனே, நீ வந்து என்னுடைய ஆருயிராக ஆனால், நான் உன்னை எங்கு சேர்ந்து அனுபவிப்பேன்?
***
பாடல் - 4
எங்கு தலைப்பெய்வன் நான், எழில் மூ
உலகும் நீயே,
அங்கு உயர் முக்கண்பிரான், பிரமபெருமான்,
அவன் நீ,
வெம்கதிர் வச்சிரக்கை இந்திரன் முதலாத்
தெய்வம் நீ,
கொங்கு அலர் தண் அம் துழாய்முடி என்னுடைக்
கோவலனே.
தேனோடு மலர்ந்த, குளிர்ந்த, அழகிய துளசியைத் திருமுடியிலே சூடிய எங்கள் கோபாலனே, எழில் நிறைந்த மூன்று உலகங்களும் நீயே, உயர்ந்த, மூன்று கண்களைக்கொண்ட சிவபெருமானும் நீ, பிரமனும் நீ, கொடிய கதிர்களையுடைய வச்சிராயுதத்தைக் கையில் கொண்டுள்ள இந்திரன் தொடங்கி அனைத்துத் தெய்வங்களும் நீ, உன்னை நான் எங்கே வந்து சேர்வேன்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.