நாள்தோறும் நம்மாழ்வார்

ஒன்பதாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் 3, 4

கிடந்த திருக்கோலத்தில்

செ.குளோரியான்

பாடல் - 3

கிடந்த நாள் கிடந்தாய், எத்தனை காலம்
கிடத்தி உன் திரு உடம்பு அசைய,
தொடர்ந்து குற்றேவல் செய்து தொல் அடிமை
வழிவரும் தொண்டரோர்க்கு அருளித்
தடம் கொள் தாமரைக்கண் விழித்து நீ எழுந்து உன்
தாமரை மங்கையும் நீயும்
இடம் கொள் மூ உலகும் தொழ இருந்து அருளாய்
திருப்புளிங்குடிக் கிடந்தானே.

திருப்புளிங்குடியிலே, கிடந்த திருக்கோலத்தில் அருளும் பெருமானே, அன்று தொடங்கி இன்றுவரை எத்தனை நாளாக இப்படிக் கிடந்த திருக்கோலத்தில் இருக்கிறாயோ! உன்னுடைய திருவுடம்புக்கு வலிக்காதோ? உனக்குத் தொடர்ந்து குற்றேவல் செய்து, உன்னுடைய பழைய அடிமைகளாகப் பரம்பரை பரம்பரையாக வரும் தொண்டர்களுக்கு அருள்வாய், பெரிய தாமரை மலர்களைப்போன்ற திருக்கண்களை விழித்து எழுவாய், தாமரை மலரிலே அமர்ந்த பிராட்டியுடன் நீயும் வந்து பரந்த மூன்று உலகங்களும் தொழும்படி வீற்றிருந்து அருள்வாய்.

பாடல் - 4

புளிங்குடிக் கிடந்து வரகுண மங்கை
இருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே
என்னை ஆள்வாய் எனக்கு அருளி,
நளிர்ந்த சீர் உலகம் மூன்று உடன் வியப்ப
நாங்கள் கூத்து ஆடி நின்று ஆர்ப்பப்
பளிங்கு நீர் முகிலின் பவளம்போல் கனி வாய்
சிவப்ப நீ காண வாராயே.

திருப்புளிங்குடியிலே கிடந்த திருக்கோலத்திலும், வரகுணமங்கையிலே இருந்த திருக்கோலத்திலும் வைகுந்தத்தில் நின்ற திருக்கோலத்திலும் அருள்செய்பவனே, அதனை எண்ணி என்னுடைய சிந்தை தெளிவடைய, எனக்குள்ளிருந்து நீங்காமல் என்னை ஆள்பவனே, உன்னுடைய குளிர்ந்த சிறப்பை எண்ணி மூன்று உலகங்களும் சேர்ந்து வியக்கும்படி, நாங்களெல்லாம் கூத்து ஆடி நின்று ஆரவாரிக்கும்படி, தெளிந்த நீரையுடைய மேகத்திலே பவளக்கொடி படர்ந்தாற்போல் உன்னுடைய கனிந்த திருவாய் சிவந்து தோன்றும்படி நீ வரவேண்டும், அத்திருக்கோலத்தை நாங்கள் காணவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT