பாடல் - 9
தொழுது மா மலர், நீர், சுடர், தூபம் கொண்டு
எழுதும் என்னும் இது மிகை ஆதலின்
பழுது இல் தொல் புகழ்ப் பாம்பு அணைப் பள்ளியாய்
தழுவும் ஆறு அறியேன் உன தாள்களே.
உன்னைத் தொழுது, சிறந்த மலர்கள், நீர், சுடர், தூபம் ஆகியவற்றைக் கொண்டு வழிபடுவேன், ஆனால் நீயோ இதையும் மிகையாகக் கருதுவாய், குற்றமில்லாத, பழைமையான புகழையுடைய ஆதிசேஷனாகிய பாம்புப் படுக்கையிலே பள்ளிகொள்ளும் பெருமானே, உன்னுடைய திருவடிகளைத் தழுவும் முறை எனக்குத் தெரியவில்லை.
பாடல் - 10
தாள தாமரையான் உனது உந்தியான்,
வாள்கொள் நீள் மழு ஆளி உன் ஆகத்தான்,
ஆளராய்த் தொழுவாரும் அமரர்கள்,
நாளும் என் புகழ்கோ உன சீலமே.
நாளத்தையுடைய தாமரையிலே பிறந்த பிரமன், உன்னுடைய திருவுந்தியிலே இருக்கிறான். ஒளி பொருந்திய நீண்ட மழுவை ஏந்திய சிவன், உன்னுடைய திருமேனியிலே இருக்கிறான். அடியவர்களாகி உன்னை வணங்குபவர்களோ, அமரர்கள். இத்தகைய உன்னுடைய சிறப்பைக் காலமெல்லாம் புகழலாம் என்று எண்ணுகிறேன். ஆனால் நான் அதை எப்படிப் புகழ்வேன்? என்ன சொல்லிப் புகழ்வேன்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.