பாடல் - 3
அழைக்கின்ற அடி நாயேன் நாய் கூழை வாலால்
குழைக்கின்றதுபோல் என் உள்ளம் குழையும்
மழைக்கு அன்று குன்றம் எடுத்து ஆ நிரை காத்தாய்,
பிழைக்கின்றது அருள் என்று பேது உறுவனே.
அன்றைக்குப் பெருமழை பெய்தபோது, கோவர்த்தன மலையைக் கையில் எடுத்துப் பசுக்கூட்டங்களைக் காத்தவனே, உன்னுடைய திருவடியிலே விழுந்துகிடக்கின்ற நாய்போன்ற நான் உன்னை அழைக்கின்றேன், நாயானது தன்னுடைய குட்டை வாலை அசைத்துத் தன் நினைவைக் காட்டுவதுபோல, என்னுடைய உள்ளம் உன்னை எண்ணிக் குழைகிறது, உன்னுடைய அருள் கிடைக்கவில்லையே என்று கலங்குகிறேன்.
பாடல் - 4
உறுவது இது என்று உனக்கு ஆட்பட்டு நின்கண்
பெறுவது எதுகொல் என்று பேதையேன் நெஞ்சம்
மறுகல் செய்யும், வானவர், தானவர்க்கு என்றும்
அறிவது அரிய அரி ஆய அம்மானே.
தேவர்கள், அசுரர்களால்கூட என்றைக்கும் அறிய இயலாத அரியவனே, அரியாகிய அம்மானே, உனக்கு அடிமைப்பட்டுத் தொண்டுசெய்வதுதான் சரி என்று உணர்ந்து நான் உன் அடியவனானேன், அதேசமயம், இந்தத் தொண்டின்மூலம் உன்னிடம் எதைப் பெறுவது என்று பேதையாகிய என்னுடைய நெஞ்சம் கலங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.