8. வெண்ணிலா மதியம் தன்னை - பாடல் 3
ஊன் = ஊனம், உயிரின் மிகப் பெரிய ஊனமாக கருதப்படுவது, மறுபடியும் மறுபடியும் பிறவி எடுத்து உழலும் நிலைதான்.
ஊனையே கழிக்க வேண்டில் உணர்மின்கள் உள்ளத்துள்ளே
தேனைய மலர்கள் கொண்டு சிந்தையுள் சிந்திக்கின்ற
ஏனைய பலவுமாகி இமையவர் ஏத்த நின்று
ஆனையின் உரிவை போர்த்தார் அதிகை வீரட்டானாரே

விளக்கம்

ஊன் = ஊனம், உயிரின் மிகப் பெரிய ஊனமாக கருதப்படுவது, மறுபடியும் மறுபடியும் பிறவி எடுத்து உழலும் நிலைதான். அந்த ஊனத்தைக் கழிக்க விரும்புவோர் சிவபெருமானை தியானம் செய்து உய்யலாம் என்ற அறிவுரை இங்கே வழங்கப்படுகின்றது. நமது உள்ளத்தில் சிவபெருமானை நினைத்து தியானம் செய்து அகப்பூசை செய்வதால் ஏற்படும் பலன் இந்த பாடலில் கூறப்படுகின்றது.

எவ்வாறு அகப்பூசை செய்வது என்பதை உணர்த்தும் அப்பர் பிரானின் பாடல் (4.75.4) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. நமது உடல் என்னும் வீட்டில், உள்ளத்தை அகல் விளக்காகக் கொண்டு, உணர்வு எனப்படும் நெய்யினை ஊற்றி, உயிர் என்னும் திரியை வைத்து, ஞானம் என்னும் நெருப்பினால் திரியை ஏற்றி தியானம் செய்தால், சிவபிரானின் திருப்பாதங்களைக் காணலாம் என்று அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார்.

உடம்பெனும் மனை அகத்து உள்ளமே தகளியாக

மடம் படும் உணர் நெய் அட்டி உயிரெனும் திரி மயக்கி

இடம் படு ஞானத் தீயால் எரி கொள இருந்து நோக்கில்

கடம்பமர் காளை தாதை கழலடி காணலாமே

சிவபெருமானை வழிபட்டு உய்வடையச் சொல்லும் அப்பர் பிரான், ஏன் சிவபிரானை நாம் வணங்க வேண்டும் என்றும் இங்கே கூறுகின்றார். தேவர்கள் அனைவரும் வணங்கும் கடவுள் சிவபெருமான். எனவே ஏனைய சிறு தெய்வங்களை வணங்காமல் சிவபெருமானை வணங்க வேண்டும் என்று உணர்த்தும் முகமாக தேவர்கள் செய்யும் வழிபாடு இங்கே கூறப்படுகின்றது. தேவர்கள் சிவபெருமானை வணங்கி வழிபடுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்றான, யானையின் பசுந்தோலை உரித்துப் போர்த்த வீரச் செயல் இங்கே குறிப்பிடப்படுகின்றது. தங்களால் செய்யமுடியாத செயலைச் செய்யும் ஒருவரை, மற்றவர்கள் போற்றுவது இயற்கைதானே. யானையின் பசுந்தோலை போர்த்துக்கொள்ளும் வல்லமை இல்லாதவர்கள் தேவர்கள் என்பதும் இங்கே சொல்லாமல் சொல்லப்படுகின்றது.

தேன் என்பது இங்கே வண்டுகளை உணர்த்துகின்றது. தேன் நிறைந்த புதுமலர்களைக் கொண்டு தேவர்கள் சிவபெருமானை வழிபடுவதால். அத்தகைய மலர்களைச் சுவைக்கும் வாய்ப்பினை இழந்த வண்டுகள் வருந்துவதாக அப்பர் பிரான் நயமாக கூறுகின்றார். தேனைய மலர்கள் என்பதற்கு தேனைப்போன்று இனிமையான அன்பு நிறைந்த சிந்தனை மலர்கள் என்றும் பொருள் கொள்ளலாம். மலர்களை உள்ளத்துடன் இணைத்து அப்பர் பிரான் குறிப்பிட்டு இருப்பதால், மலர்கள் என்று இங்கே குறிப்பிடப்படுவது அகமலர்கள் என்றும் பொருள் கொள்ளலாம். கொல்லாமை, இரக்கம், ஐம்பொறிகளை அடக்குதல், பொறுமை, தவம், வாய்மை, அன்பு மற்றும் அறிவு ஆகிய எட்டு குணங்களைக் கொண்டவர்களாக இருந்து, அத்தகைய மலர்களால் இறைவனை வழிபாடு செய்வது மிகவும் சிறந்த வழிபாடாக கருதப் படுகின்றது. இதனை உணர்த்தும் வகையில், இந்த மலர்களை தேனினும் இனிய மலர்கள் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார் போலும்.

அடியார்களின் சிந்தனையில் சிவபெருமான் இருக்கின்றான் என்று அப்பர் பிரான் கூறுவது நமக்கு சுந்தரர் அருளிய கச்சி ஏகம்பத்தின் மீது அருளிய பதிகத்தின் (7.61) எட்டாவது பாடலை நினைவூட்டுகின்றது. பந்தித்த = பற்றிய

சிந்தித்து என்றும் நினைந்து எழுவார்கள் சிந்தையில் திகழும் சிவன் தன்னைப்

பந்தித்த வினை பற்று அறுப்பானைப் பாலொடு ஆனஞ்சும் ஆட்டுகந்தானை

அந்தமில் புகழாள் உமை நங்கை ஆதரித்து வழிபடப்பெற்ற

கந்த வார்சடைக் கம்பன் எம்மானைக் காணக் கண் அடியேன் பெற்றவாறே

கோயில் திருப்பதிகத்தின் கடைப் பாடலில் மணிவாசகரும், சிந்தையினை கோயிலாகக் கொண்ட சிவபெருமானே என்று பாடுவதை நாம் கீழக்கண்ட பாடலில் உணரலாம். இறைவனும் தானும் நடத்திய பண்டமாற்றில், தன்னைக் கொடுத்து இறைவனைத் தான் பெற்றதால், இருவரில் தானே சாமர்த்தியம் வாய்ந்தவன் என்று மணிவாசகர் கூறுவது மிகவும் நயமாக உள்ளது.

தந்தது உன் தன்னைக் கொண்டது என் தன்னைச் சங்கரா ஆர் கொலோ சதுரர்

அந்தம் ஒன்றில்லா ஆனந்தம் பெற்றேன் யாது நீ பெற்றதொன்று என்பால்

சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான் திருப்பெருந்துறை உறை சிவனே

எந்தையே ஈசா என் உடலிடம் கொண்டாய் யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே

அப்பர் பிரானும் தில்லைப் பதிகத்தின் (5.2) முதல் பாடலில் சிவபெருமானை நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன் என்று குறிப்பிடுகின்றார்.

பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்

நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்

அனைத்தும் வேடமாம் அம்பலக் கூத்தனைத்

தினைத்தனைப் பொழுதும் மறந்து உய்வனோ

வாக்கிற்கும் மனத்திற்கும் எட்டாதவன் சிவபெருமான் என்று பல திருமுறைப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. இந்த செய்தியைத்தான் அப்பர் பெருமான், நாம் நமது மனத்தினால் சிந்திக்கின்ற அனைத்துப் பொருட்களாகவும், நமது சிந்தனைக்கு எட்டாத மற்ற பொருட்களாகவும் சிவபெருமான் விளங்குகின்றான் என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.

பொழிப்புரை

உங்களது ஊனமாகிய பிறவிப்பிணியை கழிக்க வேண்டும் என்று விருப்பம் இருந்தால், நீங்கள் சிவபெருமானை எப்போதும் மனத்தினில் நினைத்து, தியானம் செய்து வழிபாடு செய்யுங்கள். அடியார்களின் சிந்தனையில் வீற்றிக்கும் சிவபெருமான் நாம் சிந்திக்கின்ற அனைத்துப் பொருட்களாகவும், நமது சிந்தைக்கு எட்டாத பல பொருட்களாகவும் இருக்கின்றான். யானையின் தோலை உரித்துப் போர்த்த சிவபெருமானின் செயற்கரிய செயலினைக் கண்ட தேவர்கள், தாங்கள் தேன் உண்ணும் வாய்ப்பினை இழந்து விட்டோமோ என்று வண்டுகள் வருந்துமாறு, தேன் நிறைந்த மலர்களைக் கொண்டு, சிவபெருமான் பற்றிய சிந்தனையுடன் வழிபாடு செய்கின்றார்கள்.