முகப்பு
தினம் ஒரு தேவாரம்

22. கடவுளைக் கடலுள் எழு - பாடல் 8

அன் = அன்னை. சிவபெருமான் பொன் போன்ற மேனியினை உடையவன் என்று பல தேவாரப் பாடல்களில் சொல்லப்படுகின்றது. மழபாடி தலத்தின் மீது

Updated On : 19 ஏப்ரல், 2016 at 3:32 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:36 PM

பாடல் 8

பொன் ஒப்பானைப் பொன்னில் சுடர் போல்வதோர்
மின் ஒப்பானை விண்ணோரும் அறிகிலா
அன் ஒப்பானை அரத்துறை மேவிய
தன் ஒப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே

விளக்கம்

அன் = அன்னை. சிவபெருமான் பொன் போன்ற மேனியினை உடையவன் என்று பல தேவாரப் பாடல்களில் சொல்லப்படுகின்றது. மழபாடி தலத்தின் மீது சுந்தரர் அருளிய பொன்னார் மேனியனே என்று தொடங்கும் பதிகம் மிகவும் பிரசித்தமானது. கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் நாவலில், பல இடங்களிலும் சேந்தன் அமுதன் பாடுவதாக அமைந்துள்ள இந்த தேவாரப் பாடலில் (7.24.1), சுந்தரர் இறைவனின் மேனியின் நிறத்திற்கு பொன்னினை ஒப்பிடுகின்றார். கயிலாயத்தில் வடக்கு பாகம், விடியற்காலையில் (சூரியன் உதிப்பதற்கு சற்று முன்னர்) சூரியன் ஒளிபட்டு பொன் போன்று மின்னுவதை நாம் காணலாம்.

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே

சேரமான் பெருமாள் நாயனார் அருளிய பொன்வண்ணத் திருவந்தாதி பதிகத்தின் முதல் பாடலில், பெருமானின் மேனி பொன் வண்ணமாக பொலிந்து விளங்குகின்றது என்று கூறுகின்றார்.

பொன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்திலங்கும்
மின் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை வெள்ளிக்குன்றம்
தன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடை தன்னைக் கண்ட
என் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே

பொன் போன்று ஒளி மிளிரும் மேனியனை உடையவனே, வளைத்துக் கட்டப்பட்டதும் மின்னலினை ஒத்ததும் ஆகிய சடையை உடையவனே, விரைந்து ஓடும் நீரினை உடைய காவிரி நதி பாயும் நாகேச்சர நகரின் மன்னவனே என்று இறைவனை புகழ்ந்து ஏத்தினால், நமது வலிய வினைகளும் அழிந்து கெட்டுவிடும் என்று சம்பந்தர் கூறும் பாடல் (2.24.1) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

பொன் நேர் தரு மேனியனே புரியும்
மின் நேர் சடையாய் விரை காவிரியின்
நன்னீர் வயல் நாகேச்சுர நகரின்
மன்னே என வல்வினை மாய்ந்து அறுமே

ஆக்கூர் தான்தோன்றி மாடம் திருக்கோயிலின் மீது அருளப்பட்ட பதிகத்தின் பாடலில் (6.21.9) அப்பர் பிரான், இறைவனை மாதொரு பாகனாக காண்கின்றார். உடலின் ஒரு புறத்தில், தீயின் வண்ணமும் செம்பொன்னின் வண்ணமுமாக காட்சி தரும் இறைவன் மற்றொரு புறத்தில் நீலமணி வண்ணத்தில் காட்சி தருவதாக இந்தப் பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். இந்த தலத்தில் உள்ள மூர்த்தம் சுயம்பு எனப்படுகின்றது, ஸ்வயம்பு என்ற வடமொழிச் சொல்லினை, தான்தோன்றி என்று மிகவும் அழகாக மொழி பெயர்ப்பு செய்துள்ளதை நாம் இங்கே காணலாம். படி = உருவம். இறைவனின் திருமேனி, அடியார்களுக்கு புகலிடமாக அமைந்துள்ளது என்றும் அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.

கடியார் தளிர் கலந்த கொன்றை மாலை கதிர் போது தாதணிந்த கண்ணி போலும்
நெடியான் சதுர்முகனும் நேட நின்ற நீல நல் கண்டத்து இறையார் போலும்
படியேல் அழல் வண்ணம் செம்பொன் மேனி மணி வண்ணம் தம் வண்ணம் ஆவார் போலும்
அடியார் புகலிடமது ஆனார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே

திருநள்ளாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (7.68.1), சுந்தரர் செம்பொன் மேனியின் மீது வெண்ணீறு அணிந்தவன் என்று குறிப்பிடுகின்றார். சம்பு என்றால் இன்பத்தை உண்டாக்குபவன் என்று பொருள். யானையின் அகலமான தலையை குடத்திற்கு ஒப்பிட்டு கும்பமாகரி என்று சொல்லும் நயத்தை நாம் காணலாம். கம்பமாகரி என்ற சொல்லினைத்தான் நாம் மிகவும் அதிகமாக இலக்கியங்களில் காண்போம். தனது துதிக்கையை எப்போது அசைத்து ஆட்டியபடியே நிற்கும் யானையை கம்பமாகரி என்று சொல்வது வழக்கம். கோ என்ற வடமொழிச் சொல், மாற்றம் செய்யப்படாமல் பயன்படுத்தப்பட்டு இங்கே எருதினை உணர்த்துகின்றது. நள்ளாற்றின் திருக்கோயிலில் உறையும் இறைவனை நாயினேன் மறந்து வேறு எதனை நினைப்பேன் என்று தனது நிலையை சுந்தரர் சொல்லும் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

செம்பொன் மேனி வெண்ணீறு அணிவானைக் கரிய கண்டனை மாலயன் காணாச்
சம்புவைத் தழல் அங்கையினினானைச் சாம வேதனைத் தன்னொ ப்பிலானைக்
கும்பமா கரியின் உரியானைக் கோவின் மேல் வரும் கோவினை எங்கள்
நம்பனை நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே

திருவாசகம் திருவம்மானை பதிகத்தின் ஒரு பாடலில் மணிவாசகர், பொன்மேனி என்று இறைவனது திருமேனியை குறிப்பிடுகின்றார். கலி மதுரை=ஆரவாரம் மிகுந்த மதுரை நகரம். இசைப் பாடல்களால் இறைவனைத் துதித்து பாடும் அடியார்களுக்கு சிவபெருமான் அருள் புரியும் நிலை இங்கே குறிப்பிடப்படுகின்றது. வியன் = அகன்ற. பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட திருவிளையாடல் இந்த பாடலில் உணர்த்துப்படுகின்றது.

பண் சுமந்த பாடல் பரிசு படைத்து அருளும்
பெண் சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்
விண் சுமந்த கீர்த்தி வியன் மண்டலத்து ஈசன்
கண் சுமந்த நெற்றிக் கடவுள் கலி மதுரை
மண் சுமந்து கூலி கொண்டு அக்கோவால் மொத்துண்டு
புண் சுமந்த பொன்மேனி பாடுதும் காண் அம்மானாய்

அற்புதத் திருவந்தாதியின் 58ஆவது பாடலில் காரைக்கால் அம்மையார் சிவபெருமானின் உருவத்தை பொன்னுருவம் என்று குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் மாதொரு பாகனாக இறைவன் இருக்கும் தன்மை உணர்த்தப்படுகின்றது. பெருமானின் சடைமுடி கொழுந்துவிட்டு எரியும் சுடர் போன்று காணப்பட, இறைவியின் முடி கரிய வண்ணத்தில் காட்சி அளிக்கின்றது. கரிய வண்ணத்தில் இருக்கும் கூந்தலுக்கு, மேகத்தை, மயில் தோகையினை, மையினை உவமை கூறலாம். ஆனால் இந்த கோலத்தினை, தனது அகக்கண்களால் கண்டு கொண்ட அம்மையாருக்கு மேற்கண்ட உவமைகள் நினைவுக்கு வரவில்லை; இருள் தான் நினைவுக்கு வருகின்றது. இருளினை ஒத்த கூந்தல் என்று கூறிவிட்டு, ஒளியும் இருளும் அருகருகே இருப்பது பொருந்தாத தோற்றம் என்று நகைச்சுவையாக கூறுகின்றார். தீ இருக்கும் இடத்தில் இருள் இருக்க முடியாது அல்லவா. ஒவ்வாதே என்ற சொல்லினை நான்காவது அடிக்கும் பொருந்துவதாக எடுத்துக்கொண்டு நாம் பொருள் காண வேண்டும். பொன் போன்ற மேனியை உடையவனின் செஞ்சடையில், அம்மையின் பூங்குழல் இருக்கும் தோற்றம் ஒன்றுக்கொன்று ஒவ்வாது என்று நயமாக முடிக்கின்றார். ஆகம் = உடல். செக்கர் = அந்திச் செவ்வானம்.: வீங்கிய = மிகுதியான. பொங்கு = செறிந்து ததும்பும்.

மிக்க முழங்கெரியும் வீங்கிய பொங்கிருளும்
ஒக்க உடன் இருந்தால் ஒவ்வாதே -- செக்கர் போல்
ஆகத்தான் செஞ்சடையும் ஆங்கவன் தன் பொன்னுருவில்
பாகத்தாள் பூங்குழலும் பண்பு

பொன்னுருவம் என்று பல திருமுறைப் பாடல்களில் குறிப்பிடுவதன்றி, பெருமானின் சடை பொன்னிறத்தில் உள்ளதென்றும், அவரது திருவடிகள் பொன் போன்ற திருவடிகள் என்றும், அவரின் சோதி உருவம் பொன் போன்று மிளிர்கின்றது என்றும், பெருமான் பொன் போன்று அரியவன், நமக்கு விருப்பமானவன் என்றும் பல திருமுறைப் பாடல்கள் குறிப்பிடுகின்றன.

பொழிப்புரை

பொன்னின் நிறத்தை ஒத்த திருமேனியை உடையவனும், பொற்சுடர் போன்றும் மின்னல் போன்றும் மிளிரும் சோதியானை, தேவர்களால் அறிய முடியாதவனும், அன்னையை ஒத்து நம்மை கருணையுடன் பேணி வளர்ப்பவனும் ஆகிய அரத்துறை இறைவனைக் காணுங்கள். அவனைத் தான் நாம் தொழுகின்றோம். அவன் தனக்கு நிகராக வேறு எவரும் இல்லாமையால், தன்னையே தனக்கு நிகராகக் கொண்டவன் ஆவான்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.