முகப்பு
தினம் ஒரு தேவாரம்

23. கருமணியை கனகத்தின் - பாடல் 1

இந்நாளில் பெண்ணாகடம் என்று அழைக்கப்படும் தலம், பண்டைய நாளில் கடந்தை என்றும் அங்குள்ள கோயில் தூங்கானை மாடம் என்று அழைக்கப்பட்டது. இந்த

Updated On : 27 ஏப்ரல், 2016 at 1:24 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:37 PM

(முதுகுன்றம் – திருத்தாண்டகம்)

பின்னணி

இந்நாளில் பெண்ணாகடம் என்று அழைக்கப்படும் தலம், பண்டைய நாளில் கடந்தை என்றும் அங்குள்ள கோயில் தூங்கானை மாடம் என்று அழைக்கப்பட்டது. இந்த தலத்தில் உறையும் சுடர்க்கொழுந்து நாதரைப் பணிந்த அப்பர் பிரான், தனது உடலில் இலச்சினைகள் பதித்து, சமணர்களுடன் தொடர்புகொண்டிருந்த உடலினைத் தூய்மையாக மாற்ற வேண்டும் என்று வேண்டினார். பெருமானும், அப்பர் பிரானின் வேண்டுகோளை நிறைவேற்றும் வண்ணம், மூவிலைச் சூலம் மற்றும் இடபத்தின் இலச்சினைகளை அப்பர் பிரானது தோள்களில் பொறிப்பதற்கு ஏற்பாடு செய்தார். பெருமானின் கட்டளைப் படி ஒரு பூதம், எவரும் அறியாத வண்ணம், மேற்கூறிய இரண்டு இலச்சினைகளையும் பொறித்தது. இதனால் மிகவும் மனம் மகிழ்ந்த அப்பர் பிரான், சில நாட்கள் இந்த தலத்தில் திருத்தொண்டுகள் புரிந்த பின்னர், அருகிலிருக்கும் நெல்வாயில் அரத்துறை, மற்றும் முதுகுன்றம் ஆகிய தலங்களுக்கு சென்றார். முதுகுன்றம் என்று இந்த பதிகத்தில் அழைக்கப்படும் தலம், இந்நாளில் விருத்தாசலம் என்று அழைக்கப்படுகின்றது. இதனைக் குறிப்பிடும் பெரியபுராணப் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து செய்யப்படும் செயலையே பயிலுதல் என்று கூறுவார்கள். அப்பர் பிரான் தொடர்ந்து திருத்தொண்டு செய்தமையை உணர்த்தும்வண்ணம், சேக்கிழார் இங்கே பயின்று என்ற சொல்லினை பயன்படுத்தி உள்ளார். பொருவில் = ஒப்பற்ற. தேங்கா = தேன்+கா = தேன் நிறைந்த மலர்கள் உடைய சோலை. முகில் = மேகம்.

Advertisement

தூங்கானை மாடத்து சுடர்க் கொழுந்தின் அடி பரவிப்
பாங்காகத் திருத்தொண்டு செய்து பயின்று அமரும் நாள்
பூங்கான மணம் கமழும் பொருவில் திரு அரத்துறையும்
தேங்காவின் முகில் உறங்கும் திரு முதுகுன்றமும் பணிந்து

பெருமானின் அருளால் இலச்சினைகள் பொறிக்கப்பட்டு, அப்பர் பிரானின் உடல் தூய்மையானது என்று இறைவனே உணர்த்திய பின்னரும், அப்பர் பிரானின் மனம் ஆறுதல் அடையவில்லை போலும். தான் சமண சமயத்தைச் சார்ந்து இருந்த நாட்களை நினைத்து வருந்தி, சிவபெருமானை அறியாதே தான், தீவினையேன் திகைத்து நின்றதாக இந்த பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் கூறுகின்றார். ஏ என்ற ஏகாரம் சேர்க்கப்பட்டு இரங்கல் குறிப்பினை உணர்த்துகின்றது. தான் அவ்வாறு சிவபெருமானை அறியாமல் நின்ற நிலை இரங்கத்தக்கது என்பதை பெருமானிடம் வேண்டுகோளாக சமர்ப்பித்து, அவரது இரக்கத்தை வேண்டும் பாடல்.

பாடல் 1

கருமணியை கனகத்தின் குன்று ஒப்பானைக் கருதுவார்க்கு
ஆற்ற எளியான் தன்னைக்
குருமணியைக் கோளரவு ஒன்று ஆட்டுவானைக் கொல் வேங்கை
அதளானைக் கோவணன்னைக்
அருமணியை அடைந்தவர்கட்கு அமுது ஒப்பானை ஆனஞ்சும்
ஆடியை நான் அபயம் புக்க
திருமணியைத் திருமுதுகுன்று உடையான் தன்னைத் தீவினையேன்
அறியாதே திகைத்தவாறே

விளக்கம்

கருமணி = கண்ணின் கருமணியைப் போன்று மிகவும் அருமையானவன். கோவணவன் தன்னை என்றும் ஒரு பாடம் உள்ளது. கோளரவு = கொடிய பாம்பு. அதள் = தோல். ஆற்ற = மிகவும். கனகம் = பொன். திருமணி = திருவினை உடைய மணி, வீடுபேறு ஆகிய செல்வத்தை உடைய மணி. குருமணி = நல்ல நிறமுடைய மாணிக்கக் கல். குருமணி என்பதற்கு சிறந்த ஆசிரியன் என்று பொருள் கொள்ளலாம். கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க என்று திருவாசகம் சிவபுராணத்தில் மணிவாசகப் பெருமான் கூறுவது நமது நினைவுக்கு வருகின்றது.

கருமணி என்பதற்கு சிவக்கவிமணி திரு சி.கே.எஸ். அவர்கள், தனது பெரியபுராண விளக்கம் புத்தகத்தில், ஒரு அருமையான விளக்கத்தை அளித்துள்ளார். முற்றூழிக் காலத்தில், உயிர்கள் அனைத்தும் இறைவனிடம் ஒடுங்குவதையும், அவ்வாறு ஒடுங்கும் உயிர்களை பின்னர் இறைவன் விடுவிப்பதையும் நாம் அனைவரும் அறிவோம். எனவே அத்தனை உயிர்களையும் ஈன்ற பெருமானை கருவினை ஈன்றவன் என்ற பொருள்பட கருமணி என்று அழைப்பது பொருத்தம் தானே.

பொழிப்புரை

கண்ணின் கருமணியைப் போன்று நமக்கு அருமையாக இருப்பவனும், பொற்குன்றினை ஒத்து இருப்பவனும், தன்னை தியானிக்கும் அடியார்களுக்கு மிகவும் எளியவனாக இருப்பவனும், ஞானத்தை வழங்கும் சிறந்த ஆசிரியனாக விளங்குபவனும், கொடிய பாம்பினைத் தனது விருப்பம்போல் ஆட்டும் வல்லமை படைத்தவனும், கொல்லும் குணத்தினை உடைய புலியினை உரித்து அதன் தோலினை உடையாக அணிந்தவனும், இடுப்பில் கோவணத்தை அணிந்து காட்சி தருபவனும், விலையுயர்ந்த மணி போன்று அருமையானவனும், தன்னைச் சரணம் புகுந்த அடியார்களுக்கு அமுதம் போன்று இனிப்பவனும், பசுவிடமிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களை விரும்பி நீராடுபவனும், அடியேனை சரணாக ஏற்றுக்கொண்டவனும், வீடுபேறு எனப்படும் செல்வத்தை அருளும் மணியாக விளங்குபவனும், மிகவும் பழமையான முதுகுன்றம் தலத்தில் உறையும் பெருமானும் ஆகிய சிவபெருமானை. நான் அறியாமல் திகைத்திருக்கும் நிலையில் என்னை ஆழ்த்திய எனது தீவினைகள் மிகவும் கொடியன அல்லவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.