23. கருமணியை கனகத்தின் - பாடல் 2
கருமையான ஒளியுடன் மிளிரும் கழுத்தினை உடைய கடவுளை, காபாலியாக பிரமனின் தலையைக் கையில் ஏந்தி பலிக்குச் செல்பவனை, மழு ஆயுதத்தை ஏந்தியவனை,
பாடல் 2
காரொளிய கண்டத்து எம் கடவுள் தன்னைக் காபாலி கட்டங்கம் ஏந்தினானைப்
பாரொளியை விண்ணொளியைப் பாதாளனைப் பால் மதியம் சூடியோர் பண்பன் தன்னை
பேரொளியைப் பெண் பாகம் வைத்தான் தன்னைப் பேணுவார் தம் வினையைப் பேணி வாங்கும்
சீரொளியைத் திருமுதுகுன்று உடையான் தன்னைத் தீவினையேன் அறியாதே திகைத்தவாறே

விளக்கம்

காரொளிய = கரிய நிறத்துடன் ஒளி வீசும். கண்டம் = கழுத்து. கட்டங்கம் = மழு ஆயுதம். பாரொளி = உலகினில் ஒளி வீசும் சூரியன், சந்திரன் மற்றும் விண்மீன்கள். சீரொளி = சிறப்பான ஒளி. வாங்குதல் = வாங்கிக்கொள்ளுதல். தனது அடியார்களின் வினைகள், அவர்களைத் தாக்காதவாறு அவற்றைத்தான் முற்றிலும் அழித்தல். முற்றிலும் அழித்தல் என்ற பொருளில், மணிவாசகர் வைச்சு வாங்குவாய் என்று திருச்சதகம் - ஆனந்தாதீதம் பாடலில் கூறுகின்றார். விச்சு = வித்து. வைச்சு = பாதுகாத்து. விதை ஏதும் இன்றி செடியினை உண்டாக்குபவன் என்றும் உலகங்கள் அனைத்தையும் பாதுகாத்து பின்னர் அதனை அழிக்கும் வல்லமை படைத்தவன் என்று இறைவனை குறிப்பிடும் மணிவாசகர், அந்த இறைவன் வஞ்சகனாகவும் கீழ்மை குணங்களுடனும் இருந்த தன்னை அவன் பால் பற்றுகொண்டு அவனது கோயில் வாசலில் திரியும் பிச்சனாக மாற்றியதாக கூறுகின்றார். மேலும் அவரது அடியார்களுக்குத் தொண்டு செய்பவனாகவும் மாற்றினார் என்று கூறுகின்றார். நச்சு மரம் என்பதை அறியாமல் அதனை வளர்ப்பவர்கள், பின்னர் அதன் தன்மையை அறிந்த பின்னரும் அதனைக் கொல்லாமல் பாதுகாப்பது போன்று, வஞ்சகனாக இருந்த தன்னை மாற்றிய பெருமான், தன்னை அழிக்காமல் பாதுகாப்பதாக கூறுகின்றார்.

விச்சது இன்றியே விளைவு செய்குவாய் விண்ணும் மண்ணகம் முழுதும் யாவையும்
வைச்சு வாங்குவாய் வஞ்சகப் பெரும் புலையனேனை உன் கோயில் வாயிலில்
பிச்சனாக்கினாய் பெரிய அன்பருக்கு உரியனாக்கினாய் தாம் வளர்த்ததோர்
நச்சு மாமரம் ஆயினும் கொலார் நானும் அங்ஙனம் உடைய நாதனே

பதிகத்தின் முதல் பாடலில், மிகவும் அதிகமான நாட்கள் சமண சமயத்தைச் சார்ந்திருந்த தன்னை அபயமாக ஏற்றுக்கொண்டவன் என்று கூறி வியந்த அப்பர் பிரானுக்கு, பெருமான் சந்திரனுக்கு அபயம் அளித்துக் காத்தது நினைவுக்கு வந்தது போலும். இந்த நிகழ்ச்சியை பதிகத்தின் இரண்டாவது பாடலில் குறிப்பிடுகின்றார்.

பொழிப்புரை

கருமையான ஒளியுடன் மிளிரும் கழுத்தினை உடைய கடவுளை, காபாலியாக பிரமனின் தலையைக் கையில் ஏந்தி பலிக்குச் செல்பவனை, மழு ஆயுதத்தை ஏந்தியவனை, உலகத்திற்கு ஒளி தரும் சூரியனாகவும் சந்திரனாகவும் விளங்குபவனை, ஆகாயத்தில் ஒளியாக மிளிர்பவனை, பாதாளத்தின் இருளாகத் திகழ்பவனை, பால் போன்ற நிலவினைத் தனது சடையில் சூடி தன்னைச் சரண் அடைந்தாரை காக்கும் நற்பண்பு உடையவனை, ஒப்புமை இல்லாத முறையில் ஞான ஒளியாகத் திகழ்பவனை, பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்தவனை, தன்னைப் போற்றி வணங்கும் அடியார்களின் தீவினைகள் அவர்களைத் தாக்காத வண்ணம் அந்த தீவினைகளைத் தான் வாங்கிக் கொள்பவனை, சிறப்பான ஒளியாகத் திகழ்பவனை, மிகவும் பழமையான முதுகுன்றம் தலத்தில் உறையும் பெருமான் ஆகிய சிவபெருமானை நான் அறியாமல் திகைத்திருக்கும் நிலையில் என்னை ஆழ்த்திய எனது தீவினைகள் மிகவும் கொடியன அல்லவா.

Advertisement