முகப்பு
தினம் ஒரு தேவாரம்

23. கருமணியை கனகத்தின் - பாடல் 4

உடலின் கருவாக உள்ள உயிரின் உள்ளே கலந்திருக்கும் சோதியானை, உத்தமனை, அடியார்கள் மனத்தினில் குடிகொண்டிருப்பவனை, அர்ஜுனனுக்கு அருள்

Updated On : 27 ஏப்ரல், 2016 at 1:25 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:39 PM

பாடல் 4

ஊன் கருவின் உள்நின்ற சோதியானை உத்தமனைப் பத்தர்
மனம் குடி கொண்டானைக்
கான் திரிந்து காண்டீபம் ஏந்தினானைக் கார்மேக மிடற்றானைக்
கனலைக் காற்றைத்
தான் தெரிந்து அங்கு அடியேனை ஆளாக்கொண்டு தன்னுடைய
திருவடி என் தலை மேல் வைத்த
தீங்கரும்பைத் திருமுதுகுன்று உடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்தவாறே

விளக்கம்

ஊன் = உடல். மிடறு = கழுத்து. இந்தப் பாடலில் தன்னுடைய திருவடியை என் தலை மேல் வைத்த பெருமான் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். நல்லூரில் அப்பர் பிரானின் தலை மேல் திருவடி வைத்து சிவபெருமான் அருள் செய்த நிகழ்ச்சி பின்னாளில் நடந்தது. எனவே இந்த குறிப்பு, அந்த நிகழ்ச்சியை குறிப்பிடுவதாக நாம் கொள்ள முடியாது. குருவாக ஆட்கொண்டு சூலை நோயினைப் போக்கியதும் அன்றி, பல தேவாரப் பாடல்கள் பாட வைத்து அருள் செய்ததை, அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுவதாக, சிவக்கவிமணி திரு. சி.கே.எஸ். பெரியபுராண விளக்கம் புத்தகத்தில் கூறுகின்றார்.

அறிவித்தால் அறியக்கூடியது உயிர், எதனையும் எவரும் அறிவிக்காமலே அறியக்கூடியது சிவம் என்பது சைவ சித்தாந்தக் கொள்கை. அனைத்தையும் அறியும் வல்லமை, பெருமானின் எண்குணங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. சமண சமயம் சார்ந்திருந்த தான் சைவ சமயத்திற்கு திரும்ப வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது என்பதை உணர்ந்த சிவபெருமான், தனக்கு சூலை நோய் கொடுத்து திருவதிகை தலம் வரவழைத்து ஆட்கொண்ட அருட்செயலை, இங்கேதான் தெரிந்தங்கு அடியேனை ஆளாக் கொண்ட என்ற தொடர் மூலம் இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.

பொழிப்புரை

உடலின் கருவாக உள்ள உயிரின் உள்ளே கலந்திருக்கும் சோதியானை, உத்தமனை, அடியார்கள் மனத்தினில் குடிகொண்டிருப்பவனை, அர்ஜுனனுக்கு அருள் செய்வதற்காக கானகத்தில் திரிந்து காண்டீபம் என்ற வில்லினை ஏந்தியவனை, கருமையான மேகம் போன்ற நிறமுடைய கழுத்தினை உடையவனை, தீயாகவும் காற்றாகவும் ஆகாயமாகவும் நிலமாகவும் நீராகவும் ஐம்பெரும் பூதங்களாக இருப்பவனும், சமண சமயம் சார்ந்திருந்த அடியேன் சைவ சமயத்திற்கு திரும்ப வேண்டிய நேரம் நெருங்கியதை தானே உணர்ந்து சூலை நோய் கொடுத்து என்னை ஆட்கொண்டவனும், என்னை ஆட்கொண்ட பின்னர் எனக்கு குருவாக இருந்து என்னை பல பாடல்கள் பாட வைத்தவனும், எனக்கு கரும்பு போன்று இனிப்பவனும், மிகவும் பழமையான முதுகுன்றம் தலத்தில் உறையும் பெருமானும் ஆகிய சிவபெருமானை, நான் அறியாமல் திகைத்திருக்கும் நிலையில் என்னை ஆழ்த்திய எனது தீவினைகள் மிகவும் கொடியன அல்லவா.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.