35. செஞ்சடைக் கற்றை - பாடல் 6
ஆணும் பெண்ணுமாய் ஒரே உடம்பினில் இருவராய் கலந்துநிற்கும்
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:41 PM
பாடல் 6
ஓரிடம்பு இருவராகி ஒளிநிலா எறிக்கும் சென்னிச்
பாரிடம் பாணி செய்யப் பயின்ற எம் பரம மூர்த்தி
Advertisement
காரிடம் தில்லை தன்னுள் கருது சிற்றம்பலத்தே
பேரிடம் பெருக நின்று பிறங்கு எரி ஆடுமாறே
விளக்கம்
இருவர் = சக்தி, சிவம் ஆகிய இருவர். பாரிடம் = பூதகணம். பாணி செய்ய = தாளம் கொட்ட. கார் = மேகங்கள். பிறங்கு = ஒளி வீசும்
பொழிப்புரை
ஆணும் பெண்ணுமாய் ஒரே உடம்பினில் இருவராய் கலந்துநிற்கும் எம்பெருமான், சந்திரனின் ஒளி பரவிய சென்னியராய், அருகிலுள்ள பூதகணங்கள் தாளமிட, நடனக் கலையில் தேர்ந்தவராய், மேகங்கள் தங்கும் உயர்ந்த மாடங்களையும் சோலைகளையும் உடைய தில்லைச் சிற்றம்பலத்தில், ஒளிவீசும் தீயினிடை நடமாடுகின்றார். இவ்வாறு சிவபிரான் நடனமாடும்போது, அவர் நடமாடும் அரங்கு மேலும் விரிகின்றது.