35. செஞ்சடைக் கற்றை - பாடல் 7
சடை முழுதும் ஒளியைப் பரப்பும் சந்திரனை
பாடல் 7
முதல் தனிச் சடையை மூழ்க முகிழ்நிலா எறிக்கும் சென்னிச்
மதக் களிற்று உரிவை போர்த்த மைந்தரைக் காணலாகும்
Advertisement
மதர்த்து வண்டு அறையும் சோலை மல்கு சிற்றம்பலத்தே
கதத்ததோர் அரவம் ஆடக் கனல் எரி ஆடுமாறே
விளக்கம்
மதர்த்து = களிப்புடன் இருக்கும், தேன் உண்டதால் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படும் வண்டுகள். கதத்த = கோபம் கொண்ட. சிவபெருமானின் சடையை முதல் தனிச்சடை என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். ஒப்பற்ற சடையை உடைய காரணத்தால் தான், சிவபெருமான் சடையன் என்று அழைக்கப்படுகின்றார்.
சடையை வளர்க்கும் பல முனிவர்களை இந்த உலகம் கண்டிருக்கின்றது. இருந்தாலும் சடையன் என்ற பெயரில் அவர்கள் எவரும் அழைக்கப் படுவதில்லை. சடையான் என்ற பொருள்பட சடையாய் எனுமால் என்று தொடங்கும் சம்பந்தர் பதிகம் (பதிக எண்: 2.18) மிகவும் பிரபலமானது. சடையான் என்று தொடங்கும் மற்றொரு சம்பந்தர் பதிகத்தின் பத்தாவது பாடல் (1.134) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. சமணர்களுக்கும் சாக்கியர்களுக்கும் அருள் புரிவதற்கு உரிய அன்பு இல்லாதவன் சிவபெருமான் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார்.
சடையன் பிறையன் சமண் சாக்கியரோடு
அடை அன்பிலாதான் அடியார் பெருமான்
உடையன் புலியின் உரி தோல் அரை மேல்
விடையன் திருப்பறியல் வீரட்டத்தானே
அப்பர் பெருமானும் திருவையாறுப் பதிகம் ஒன்றினில் (4.13.5) இறைவனை சடையானே என்று அழைக்கின்றார். அடையான் = எல்லோரும் சென்று சரணம் அடையத்தக்கவன்.
சடையானே சடை இடையே தவழும் தண்மதியானே
விடையானே விடையேறிப் புரம் எரித்த வித்தகனே
உடையானே உடை தலை கொண்டு ஊர் ஊர் உண் பலிக்கு உழலும்
அடையானே ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே
மணிவாசகப் பெருமானும், திருவாசகம் திருப்புலம்பல் பதிகத்தின் இரண்டாவது பாடலில், சடையானே என்று இறைவனை அழைக்கின்றார். தயங்கும் = விளங்கும். மழ = இளமையான.
சடையானே தழலாடீ தயங்கு மூவிலைச் சூலப்
படையானே பரஞ்சோதி பசுபதீ மழவெள்ளை
விடையானே விரிபொழில் சூழ் பெருந்துறையாய் அடியேன் நான்
உடையானே உனை அல்லாது உறுதுணை மற்று அறியேனே
பொழிப்புரை
ஒப்பற்ற தன்மையை உடையதால் முதன்மையாகத் திகழும் சடை முழுதும் ஒளியைப் பரப்பும் சந்திரனை சென்னியில் உடையவராய் திகழும் சிவபிரான், தாருகவனத்து முனிவர்கள் ஏவிய மதயானையின் தோலை உரித்துத் தனது உடலின் மீது போர்க்கும் வல்லமை படைத்தவன். அத்தகைய வல்லமை படைத்த சிவபிரானை நாம், தேன் உண்டதால் களிப்புடன் உலாவும் வண்டுகள் சூழ்ந்த தில்லைச் சிற்றம்பலத்தில் தீயினிடைக் கூத்து நிகழ்த்துவதைக் காணலாம். அவன் நடனமாடும்போது, அவன் உடலின் மீது படர்ந்துள்ள படம் எடுத்த பாம்பு உடன் ஆடுகின்றது.