45. தெண்திரை தேங்கி ஓதம் - பாடல் 9
கரிய மலையினைப் போன்றும்
கருவரை அனைய மேனிக் கடல் வண்ணன் அவனும்
காணான்
திருவரை அனைய பூமேல் திசைமுகன் அவனும் காணான்
ஒருவரை உச்சி ஏறி ஓங்கினார் ஓங்கி வந்து
அருமையில் எளிமை ஆனார் அவர் வலம்புரவனாரே
விளக்கம்
கருவரை = கரிய மலை. திருவரை = திருமகள் தங்கும் இடமாக கருதப்படும். அருமை = அரிய தன்மை. ஒரு வரை = ஒப்பற்ற மலையாகிய கயிலை மலை.
Advertisement
பொழிப்புரை
கரிய மலையினைப் போன்றும் கடலினைப் போன்றும் மேனி நிறத்தினை உடையவனாகிய திருமால் காணமுடியாதபடி நின்றவன் சிவபெருமான்.
திருமகள் உறையும் இடம் என்று கருதப்படும் தாமரை மலரில் அமர்பவனாகிய பிரமனும் காணமுடியாதபடி நின்றவன் சிவபெருமான். ஒப்பற்ற மலையென்று கருதப்படும் கயிலை மலையின் உச்சியில் மேம்பட்ட நிலையில் விளங்குபவன் சிவபெருமான். இத்தனை அரியவனாக இருக்கும் சிவபெருமான், அடியார்களுக்கு மிகவும் எளியவனாகத் திகழும் தலம் வலம்புரம் ஆகும்.