முகப்பு
தினம் ஒரு தேவாரம்

47. தோடுலா மலர்கள் தூவி - பாடல் 10

சிவபெருமான் தனது கால்விரலை சிறிது ஊன்றி

Updated On : 31 டிசம்பர், 2016 at 12:00 AM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:30 AM

புயங்கள் ஐஞ்ஞான்கும் பத்தும் ஆய கொண்ட அரக்கன்
                                                          ஓடிச்
சிவன் திருமலையைப் பேர்க்கத் திருமலர்க் குழலி அஞ்ச
வியன் பெற எய்தி வீழ விரல் சிறிது ஊன்றி மீண்டே
சயம் பெற நாமம் ஈந்தார் சாய்க்காடு மேவினாரே

விளக்கம்

புயங்கள் = தோள்கள். திருமலர்க் குழலி = அழகிய மலர்கள் அணிந்த கூந்தலை உடைய உமையம்மை. வியன் = வேறுபாடு. மலையை பேர்த்து எடுக்கலாம் என்ற எண்ணத்திலிருந்து மாறான நிலைகொள்ளுமாறு. சயம் பெற = மலையைப் பெயர்த்தெடுக்கும் தனது முயற்சியில் அரக்கன் தோற்றான். எனினும் சிறப்பு வாய்ந்த வாளும், நூறு கோடி வாழ்நாளும், சிவனருளால் பெற்றதால், தோல்வியும் ராவணனுக்கு வெற்றியாக முடிந்தது. இதனைக் குறிப்பிடும் வகையில் சயம் பெற என்று இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார். எய்து வீழ = நெருக்கப்பட்டு கீழே விழுமாறு. மீண்டே = ஊன்றிய விரலைத் திரும்ப வாங்கி.

இந்த பாடலில் அப்பர் பிரான் சிவபெருமான் தனது கால்விரலை சிறிது ஊன்றி மீண்டும் கால விரலை தளர்த்தியதாக கூறுகின்றார். அவ்வாறு செய்யவே தான் ராவணனின் உயிர் பிழைத்தது. இல்லையேல் அவனது நிலை என்ன ஆயிருக்கும் என்பதை எவராலும் கூற இயலாது என்று கயிலாயத்தின் மீது அருளிய ஒரு பதிகத்தின் பத்து பாடல்களிலும் அப்பர் பிரான் கூறுகின்றார். இந்த பதிகத்தின் (4.47) மூன்றாவது பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. கறுத்தவன் = கரிய நிறம் உடைய அரக்கன் ராவணன்.

Advertisement

மறித்தல் = கீழ் மேலாக புரட்ட நினைத்தல். நக்கு = சிரித்து, சிரித்தபடியே சிவபெருமான் தனது கால் விரலை ஊன்றியதால், அரக்கன் ராவணனின் உயிர் தப்பியது.

இறைவன் சிவபிரான் சிரிக்காமல், ஊன்றவேண்டும் என்ற நோக்கத்துடன் ஊன்றியிருந்தால், அரக்கன் இராவணன் எவரையும் கண் விழித்துப் பார்க்கும் நிலை ஏற்பட்டிருக்காது என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார்.

கறுத்தவன் கண் சிவந்து கயிலை நன்மலையைக்
                                                                      கையால்
மறித்தலும் மங்கை அஞ்ச வானவர் இறைவன் நக்கு
நெறித்து ஒரு விரலால் ஊன்ற நெடுவரை போல
                                                                வீழ்ந்தான்
மறித்து இறை ஊன்றினானேல் மறித்து நோக்கு இல்ல
                                                                அன்றே

பொழிப்புரை

இருபது தோள்களும் பத்து தலைகளும் கொண்ட அரக்கன் ராவணன், ஓடிச் சென்று, சிவபெருமான் உறையும் கயிலை மலையைப் பெயர்த்து எடுக்க முயற்சி செய்த போது, கயிலை மலை அசைந்தது. அந்த அசைவினால் அழகிய மலர்கள் அணிந்த கூந்தலைக் கொண்ட பார்வதி தேவி அச்சம் கொண்டதைக் கண்ட சிவபெருமான் நகைத்தவாறே, அரக்கன் ராவணன் தனது முயற்சியை கைவிடுமாறு, தனது கால் விரலை சற்றே ஊன்றினார். மலையின் கீழ் நெருக்குண்ட ராவணன், தான் செய்த தவற்றினை உணர்ந்து, தனது முயற்சியைக் கைவிட்டு, இறைவன் சிவபிரானை புகழ்ந்து சாமவேத கீதங்கள் பாட, அந்த பாடல்களால் மனம் மகிழ்ந்த சிவபிரான் தனது விரலை தளர்த்த ராவணன், சிவபிரான் அருளால் சந்திரகாசம் என்ற வாளும், நூறுகோடி வாழ்நாட்களும் பெற்றான். இதனால் அவனது கயிலை மலையை பேர்த்தேடுக்கும் முயற்சி தோல்வியுற்றாலும், அவனுக்கு சிவபிரான் அளித்த வரங்கள் மூலம் வெற்றி கிட்டியது. இவ்வாறு ராவணனின் தோல்வியையும் வெற்றியாக மாற்றி அருள் புரிந்தவர் சாய்க்காடு தலத்தில் உறையும் இறைவன் ஆவார்.

முடிவுரை

இந்த பதிகத்தில் தன்னை விரும்பித் தொழுத பல அடியார்களுக்கு, சிவபெருமான் அருள் புரிந்த வரலாறு அப்பர் பிரானால் விரித்து கூறப்பட்டுள்ளது. இந்த அருட்செயல்கள் மூலம் சிவபிரானின் வீரச் செயல்களும் உணர்த்தப் படுகின்றன. சிறுவன் மார்க்கண்டேயன், பிரமன் திருமால் உள்ளிட்ட பல தேவர்கள், சிலந்தி, அர்ஜுனன், சந்திரன், சண்டீசர், பகீரதன், கண்ணப்பர், திருமால், இராவணன் ஆகிய அடியார்கள், சிவபெருமானைச் சரண் அடைந்து பெற்ற பலன்கள் கூறப்பட்டு, நாமும் சிவபெருமானைச் சரண் அடைந்து பயன் பெற வேண்டும் என்று நம்மைத் தூண்டும் அப்பர் பிரானின் அருமையான பதிகம் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.