16. எட்டு நாண்மலர் கொண்டு - பாடல் 1
தலத்திலிருந்து திருவதிகை வந்த அப்பர் பிரான், அங்கே பல நாட்கள் தங்கி உழவாரப் பணிகள் செய்தவாறு இருந்தார்
(திருவதிகை வீரட்டம் – குறுந்தொகை)
பின்னணி
திருப்பாதிரிப்புலியூர் (இன்றைய நாளில் கடலூர் என்று அழைக்கப்படும் நகரத்தின் ஒரு பகுதி) தலத்திலிருந்து திருவதிகை வந்த அப்பர் பிரான், அங்கே பல நாட்கள் தங்கி உழவாரப் பணிகள் செய்தவாறு இருந்தார். அப்போது அருளப்பட்ட பதிகங்களில் ஒன்றுதான் இந்தப் பதிகம். பெரும்பாலும் அப்பர் பிரானின் பதிகங்களில், ஏதேனும் ஒரு கருத்து தொடரிழை போன்று பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் செல்வதை நாம் உணரலாம். இந்த பதிகத்தில் எட்டு மலர்களைக் கொண்டு இறைவனை வழிபட வேண்டும் என்ற கருத்து பதிகம் முழுவதும் இருப்பதை நாம் உணரலாம்.
Advertisement
சிவபெருமான் விரும்பி அணிகின்ற எட்டு மலர்கள், புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவட்டை, குவளை, பாதிரி, அலரி, செந்தாமரை. ஐந்து பூதங்கள் (நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம்), சூரியன், சந்திரன் மற்றும் அனைத்து உயிர்களிலும் நிறைந்திருக்கும் ஆன்மா ஆகிய எட்டு பொருட்களிலும் கலந்திருக்கும் அட்ட மூர்த்தியை, எட்டு வீரட்டானங்களில் உறையும் இறைவனை, எண்குணத்தான் என்று அழைக்கப்படும் இறைவனை, எட்டு மலர்கள் கொண்டு வழிபடுவது பொருத்தம் தானே. இதனை உணர்த்தும் முகமாக, வேதியர்கள் தினமும் எட்டு மந்திரங்கள் சொல்லி சிவபெருமானை வழிபடுவார்கள். ஓம் பவாய தேவாய நம (மிகச் சிறந்த செல்வமாகிய வீடுபேறு என்னும் செல்வம் உடையவன், பிறப்பு இறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அளிப்பவன்), ஓம் சர்வாய தேவாய நம (அனைத்து தேவர்களுக்கும் தலைவன்), ஓம் ஈசானாய தேவாய நம (அனைத்து தேவர்களையும் ஆள்பவன்), ஓம் பசுபதே தேவாய நம (அனைத்து உயிர்களுக்கும் தலைவன்), ஓம் ருத்ராய தேவாய நம (எவராலும் வெல்ல முடியாதவன்), ஓம் உக்ராய தேவாய நம (அனைவரும் நடுங்கக்கூடிய தோற்றமும் வல்லமையும் கொண்டவன்), ஓம் பீமாய தேவாய நம (மிகவும் அதிகமான வல்லமை படைத்தவன்), ஓம் மஹதே தேவாய நம (அனைத்துத் தேவர்களிலும் உயர்ந்தவன்) என்பவையே அந்த எட்டு வடமொழி மந்திரங்கள்.
இறைவன் எண்குணத்தான் என்று திருக்குறள் குறிப்பிடுகின்றது. எண்குணத்தானாகிய இறைவனை வழிபடாதவர்களின் உடலில் ஐந்து பொறிகள் செயல்படக் கூடிய நிலையில் இருந்தும், அந்த பொறிகள் செயல்படுவதாக கருதப்பட மாட்டா, என்பதே இந்த திருக்குறளின் சுருக்கமான பொருள்.
கோளில் பொறியின் குணம் இலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
இந்த பாடலுக்கு உரை கண்ட பரிமேலழகர் எட்டு குணங்களாவன, தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினனாக இருத்தல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல், பேரருள் உடைத்தல், முடிவில்லாத ஆற்றல் உடைமை, வரம்பு இல்லாத இன்பம் உடைத்தல் என்று கூறுகின்றார். இந்த எட்டு குணங்களே சைவ சித்தாந்தத்தில் சிவபிரானது குணங்களாக கூறப்படுகின்றன.
திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஒரு பாடலில் (6.34.9) நலம் சிறந்தார் மனத்தகத்து எட்டு மலர்கள் என்று நம்மிடம் இருக்க வேண்டிய எட்டு குணங்களை அப்பர் பிரான் கூறுகின்றார். இவற்றை அகமலர்கள் என்று கூறுவார்கள். இந்த குணங்கள் தோன்றுவதற்கு முன்னமே திருவாரூர் திருக்கோயில் தோன்றியது என்று இந்த பாடலில் கூறப்படுகின்றது. கொல்லாமை, இரக்கம், ஐம்பொறிகளை அடக்குதல், பொறுமை, தவம், வாய்மை, அன்பு, அறிவு ஆகியவை அந்த எட்டு குணங்களாகும். நாம் அனைவரும் இந்த குணங்களைக் கொண்டு, அக மலர்களாகிய இவைகளால் வழிபடுவதையே கடவுள் விரும்புகின்றார்.
புகை எட்டும் போக்கெட்டும் புலன்கள் எட்டும் பூதலங்கள் எட்டும் பொழில்கள் எட்டும்
கலை எட்டும் காப்பு எட்டும் காட்சி எட்டும் கழல் சேவடி அடைந்தார் களைகண் எட்டும்
நகை எட்டும் நாள் எட்டும் நன்மை எட்டும் நலம் சிறந்தார் மனத்தகத்து மலர்கள் எட்டும்
திகை எட்டும் தெரிப்பதற்கு முன்னோ பின்னோ திருவாரூர்க் கோயிலாக் கொண்ட நாளே
புகை = புகக்கூடிய இடங்கள். இங்கே உயிர்கள் புகக்கூடிய இடங்களை குறிப்பிடுகின்றார். பொதுவாக ஏழு வகையான பிறவிகளை உயிர் புகக்கூடிய இடங்களாக சொல்வதுண்டு. ஆனால் இங்கே அப்பர் பிரான், ஏழு வகையான பிறப்புகள் அல்லாமல் நரகர் என்ற நிலையையும் ஒரு பிறப்பாக கருதி எட்டு பிறவிகள் என்று கூறுகின்றார். ஏதேனும் ஒரு பிறப்பு எடுப்பதற்கு முன்னர், தனது வினைத் தொகுதியின் ஒரு பகுதியினை, நரகத்தில் கழிக்கவேண்டி வருவதால் அதனையும் ஒரு பிறவியாக கருத்தில் கொள்கின்றார் போலும். எட்டு பிறவிகளாவன - தேவர், மனிதர், விலங்குகள், பறவைகள், ஊர்வன, நீரில் வாழ்வன, தாவரங்கள் மற்றும் நரகர் என்பன.
போக்கு = குற்றம். எட்டு வகையான குற்றங்கள்: அறியாமை, மயக்கம், யான் எனப்படும் அகங்காரம், எனது எனப்படும் மமகாரம், விருப்பு, வெறுப்பு, நல்வினை மற்றும் தீவினை ஆகிய எட்டும் உயிருக்கு உள்ள குற்றங்களாகும். நல்வினை குற்றமாக கருதப்படுவதன் காரணம், நல்வினை அடுத்த பிறப்புக்கு வழி வகுப்பதால். அதனால்தான் பெரியோர்கள் தீவினையை இரும்புச் சங்கிலிக்கும் நல்வினையை பொன் சங்கிலிக்கும் ஒப்பிடுவார்கள். பொன்னாயிருந்தாலும், இரும்பாக இருந்தாலும் பிறவிப் பிணியுடன் இணைப்பதில் இரண்டின் தன்மையும் ஒன்றுதானே.
ஐந்து புலன்கள் முதலாய இருபத்து நான்கு தத்துவங்களை ஆன்ம தத்துவம் என்று ஒரு கூட்டமாக சொல்வார்கள். இந்த இருபத்து நான்கு தத்துவங்களை சுருக்கி எட்டு தொகுப்பாக கூறுவதும் வழக்கம். அப்பர் பிரான், புலன்கள் முதலாக உள்ள இந்த எட்டு தொகுப்புகளை, புலன்களின் முதன்மை கருதி புலன்கள் எட்டு என்று இங்கே கூறுகின்றார். எட்டு புலன்களாவன - ஐம்பூதங்கள் (ஆகாயம், காற்று, தீ, நீர், நிலன்), ஐந்து ஞானேந்திரியங்கள் (மெய், வாய், கண், மூக்கு, செவி), ஐந்து கன்மேந்திரியங்கள் (கை, கால், வாய், எருவாய், கருவாய்), ஐந்து தன்மாத்திரைகள் (ஒலி, ஒளி, ஊரு, சுவை, நாற்றம்), மனம், புத்தி, சித்தம், அகங்காரம்.
பூதலங்கள் எட்டு - கீழுலகங்கள் ஏழுடன் நிலவுகத்தையும் சேர்த்து எட்டு உலகங்கள். மேல் உலகங்கள் ஏழுடன் நிலவுலகத்தையும் இணைத்து எட்டு உலகங்கள் என்று பொருள் கொள்ளினும் பொருந்தும். இங்கே குறிப்பிடப்படும் தலங்கள், தீவுகள், கடல்கள் முதலானவை வேதங்களில், புராணங்களில் குறிப்பிடப்படுகின்றன. சிவஞான மாபடியத்திலும் இவை குறிப்பிடப்படுகின்றன. கந்தபுராணம் அண்டகோசப் படலத்திலும் இந்த விவரங்கள் காணப்படுகின்றன.
பொழில்கள் என்றால் தீவு என்று பொருள். மணிவாசகர் திருவாசகப்பாடலில் பூம்பொழில்கள், பயந்து காத்து மற்று அழித்து என்று உலகத்தைப் படைத்தும், காத்தும், அழித்தும் விளையாடும் பரமனின் செயல் பற்றி கூறுவது இங்கே நோக்கத் தக்கது. நாவல், சாகம், குசை, கிரௌஞ்சம், சால்மலி, கோமேதகம், புட்கரம் மற்றும் தேவர் உலகம் ஆகியவை எட்டு தீவுகள்.
மேலே குறிப்பிட்ட எட்டு பொழில்களைச் சுற்றி அமைந்துள்ள கடல்கள், அந்த தீவுகளுக்கு ஆடை போன்று அமைந்திருப்பதால், கடல் என்று கூறாது கலை என்று கூறினார். எட்டு கடல்களாவன, உவர்க் கடல், பாற் கடல், தயிர்க் கடல், நெய்க் கடல், கருப்பஞ்சாற்றுக் கடல், தேன் கடல், நன்னீர்க் கடல் மற்றும் சக்கரவாக மலையைச் சூழ்ந்துள்ள கடல்.
காப்பு என்பதற்கு அரண் என்று பொருள். இந்த எட்டு கடல்களைச் சூழ்ந்த மலைகள் எட்டும் எட்டு அரண்களாக கருதப்படுகின்றன. நிடதம், ஹேமகூடம், இமாசலம், நீலம், சுவேதம், சிருங்கவான், மாலியவான், கந்தமாதனம் ஆகிய மலைகள் எட்டு மலைகளாகும்.
காட்சி எட்டு என்று எந்தக் காட்சிகளைக் குறிக்கின்றார் என்பது தெளிவாக விளங்கவில்லை. இந்த பதிகத்தின் பல பாடல்களில் இறைவன் செய்த வீரச் செயல்களைக் குறிப்பிட்டு, அந்த செயல்கள் செய்யப்பட்ட நாட்களுக்கு முன்னோ பின்னோ, திருவாரூர் கோயிலாக் கொண்ட நாள் என்று அப்பர் பிரான் கூறுவதால், எட்டு காட்சிகள் என்பதை எட்டு வீரட்டத் தலங்களில் புரிந்த வீரச் செயல்கள் இங்கே உணர்த்தப்படுகின்றது எனத் தோன்றுகின்றது.
களைகண் என்றால் பயன் என்று பொருள். இந்த உலகத்தில் செய்த செயல்களின் பலன்களுக்கு ஏற்ப, கிடைக்கும் உலகங்கள் இங்கே உணர்த்தப்படுகின்றன. இந்த உலகங்களில் நாம் செய்த கர்மங்களின் வினைகளை போகங்களாக அனுபவிக்க முடியுமே தவிர, வினைகளை கூட்டிக் கொள்ளவோ, கழித்துக் கொள்ளவோ முடியாது. எனவே போக லோகங்கள் என்று பொதுவாக அழைக்கப்படுகின்றன. அவையாவன, புவலோகம், சுவலோகம், மகலோகம், ஜனலோகம், தபலோகம், சத்யலோகம், விஷ்ணுலோகம் மற்றும் உருத்திரலோகம்.
நகை என்பன ஒளிவீசும் கோள்களையும் நட்சத்திரக் கூட்டங்களையும் குறிக்கும். இராகு மற்றும் கேது கிரகங்களுக்கு, சுயமான ஒளியில்லை என்பதால் அவை இரண்டும் இந்த தொகுதியில் சேர்க்கப்படவில்லை. சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி மற்றும் நட்சத்திரக் கூட்டங்கள் இந்த நகை எட்டு என்ற தொகுப்பில் வரும்.
காலத்தின் கூற்றாக கருதப்படும் எட்டும் நாள் எட்டு என்ற தொகுப்பில் வருகின்றன. நாழிகை, நாள், வாரம், பட்சம், மாதம், ருது, அயனம், வருடம் என்பன இந்த தொகுதியில் அடங்கும். நன்மை எட்டு எனப்படுவன, அறம், பொருள், இன்பம், வீடு, மறம், இன்மை (இல்லாமை), துன்பம், பிறப்பு ஆகியவை. அக மலர்கள் மேலே விளக்கப் பட்டுள்ளன. திகை என்பது திசை என்ற சொல்லின் திரிபு. நேர்த்திசைகள் நான்கும் கோணத் திசைகள் நான்கும் சேர்ந்து எட்டு. மேற்கண்ட எட்டு தொகுதிகள் என்று கருதப்படும் பொருட்கள் அனைத்தும் தோன்றுவதற்கு முன்னமே தோன்றிய திருக்கோயில் திருவாரூர் திருக்கோயில் என்று பாடலை அப்பர் பிரான் முடிக்கின்றார்.
பூக்களைக் கொண்டு அடியார்கள் தொழும் செய்தி பல தேவாரப் பாடல்களில் கூறப்படுகின்றது. அண்ணாமலைப் பதிகத்தின் முதல் பாடலில் (1.69.1) ஞான சம்பந்தர் இதனை குறிப்பிடுவதை நாம் இங்கே காண்போம். ஆமாம்பிணை = காட்டுப் பசுக்கள். தொறு = ஆடு. நிரை = வரிசை, கூட்டம். வானில், நீர்த் திவலைகளைக் கொண்ட கரிய மேகங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடி முழக்கம் செய்ய, அந்த ஒலியைக் கேட்டு அஞ்சிய ஆட்டு மந்தைகளும், காட்டுப் பசுக்களின் கூட்டமும் ஒதுங்கும் அடிவாரத்தைக் கொண்டது திருவண்ணாமலை என்று இங்கே கூறுகின்றார். பூவார் மலர் என்று மலர இருக்கும் அரும்புகள் மற்றும் முழுதும் மலர்ந்த மலர்கள் கொண்டு அடியார்கள் தொழுவதாக கூறுகின்றார்.
பூவார் மலர் கொண்டு அடியார் தொழுவார் புகழ்வார் வானோர்கள்
மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க்கு அருள் செய்தார்
தூமாமழை நின்று அதிர வெருவி தொறுவின் நிரையோடும்
ஆமாம் பிணை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே
திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தில் (4.3.1) அப்பர் பிரான், மலர்களோடு நீரினைச் சுமந்து கொண்டு பெருமானை வழிபடச் சென்ற அடியார்களுடன் தானும் திருக்கோயிலுள் புகுந்ததாக கூறுகின்றார்.
மாதர் பிறைக் கண்ணியானை மலையான் மகளோடும் பாடிப்
போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்
யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்றபோது
காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்

பாடல் 1
எட்டு நாண்மலர் கொண்டு அவன் சேவடி
மட்டு அலர் இடுவார் வினை மாயுமால்
கட்டித் தேன் கலந்தன்ன கெடில வீ
ரட்டனர் அடி சேரும் அவருக்கே

விளக்கம்

நாண்மலர் = அன்று பூத்த மலர். அன்று பூத்த மலர்களைக் கொண்டு இறைவனை வழிபட வேண்டும் என்று பல திருமுறைப் பாடல்களில் கூறப்படுகின்றது. மட்டு அலர் = தேன் நிறைந்த மலர்கள்.

பொழிப்புரை

அன்று புதியதாக மலர்ந்த எட்டு வகைப் பட்ட மலர்களைக் கொண்டு சிவபெருமானின் திருவடிகளில், அத்தகைய தேன் நிறைந்த மலர்களை இட்டு அர்ச்சனை செய்து வழிபடும் அடியவர்களின் வினைகள் மாயும். எனவே கரும்புக் கட்டியும் தேனும் கலந்ததுபோன்று இனிக்கும், கெடில விரட்டப் பெருமானின் திருவடிகளைச் சென்று சார்ந்து பயன் அடையுங்கள்.