முகப்பு
தினம் ஒரு தேவாரம்

29. நங்கையை பாகம் வைத்தார் - பாடல் 7

ஞானத்தின் படிநிலைகள் நான்கு என்று சைவ சித்தாந்தம் கூறுகின்றது. அந்த நான்கு படிகளையும் அப்பர் பிரான் இந்த பாடலில் உணர்த்துவதை நாம் அறியலாம்.

Updated On : 27 ஜூன், 2016 at 4:31 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:07 PM

பாடல் 7

ஊனப்பேர் ஒழிய வைத்தார் ஓதியே உணர வைத்தார்
ஞானப்பேர் நவில வைத்தார் ஞானமும் நடுவும் வைத்தார்
வானப் பேராறு வைத்தார் வைகுந்தற்கு ஆழி வைத்தார்
கானப்பேர் காதல் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே

விளக்கம்

ஊனப்பேர் = ஊனத்தால், பாசத்தால் கட்டுண்ட ஆன்மாக்களின் பெயர்கள். ஆன்மா தனக்கென்று தனியாக எந்த ஒரு பெயரும் இல்லாமல் இருக்கின்றது; எடுக்கும் பிறவிகளுக்கு ஏற்ப ஆன்மா, ஒவ்வொரு பிறவியிலும் வேறு வேறு பெயர் எடுக்கின்றது. அந்த ஆன்மா தனது வினைத் தொகைகளைக் கழித்துக் கொண்டு, இனி பிறவியே இல்லை என்ற நிலை ஏற்படும் வரையில், ஒவ்வொரு பிறவியிலும் வேறு வேறு பெயரால் அழைக்கப்படுகின்றது. ஆன்மா முக்தி அடைந்து இறைவனுடன் கலந்த பின்னர், பெயர்கள் அனைத்தும் ஒழிந்த நிலையில் இன்பமாக இறைவனுடன் கூடி இருக்கின்றது. அந்த நிலையினை ஆன்மா அடைவதற்காக இறைவன் என்னென்ன வைத்திருக்கின்றார் என்பதை விளக்கும் பாடலாக இந்த பாடல் அமைந்துள்ளது. நடு = குறிக்கோள், நிலைத்த, இன்பம்; கானப்பேர் என்று அழைக்கப்பட்ட தேவாரத் தலம், இன்று காளையார்கோயில் என்று அழைக்கப்படுகின்றது.

ஞானத்தின் படிநிலைகள் நான்கு என்று சைவ சித்தாந்தம் கூறுகின்றது. அந்த நான்கு படிகளையும் அப்பர் பிரான் இந்த பாடலில் உணர்த்துவதை நாம் அறியலாம். கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடல் என்பன அவை நான்காகும். கேட்டல் என்பது மெய்ப் பொருளை அடுத்தவர் சொல்ல அவர்கள் மூலம் நாம் அறிந்து கொள்ளுதல். அருளாளர்கள் அருளிய நூல்கள் மற்றும் பெருமான் அருளிய வேதங்கள் இவற்றை ஓதியும் நாம் மெய்பொருளை தெரிந்து கொள்ளலாம் அல்லவா. இதனையே இங்கே ஓதியே உணரவைத்தார் என்று கூறுகின்றார். ஞானப் பேர் நவில வைத்தார் என்று, கேள்விப்பட்ட ஞானத்தை, தான் ஓதி அறிந்த ஞானத்தை மறுபடியும் மறுபடியும் சிந்திக்கும் தன்மையை குறிப்பிடுகின்றார். இவ்வாறு சிந்தித்து தெளிந்த ஞானத்தை உள்ளத்தின் நடுவில் வைத்த தன்மையும் இங்கே குறிப்பிடப்பட்டு, ஞானத்தின் மூன்று படிகள் இங்கே குறிப்பிடப் படுகின்றன.

ஊனப்பேர் ஒழிய வைத்தார் என்பதற்கு, தனது பெயரினை மறந்து, தன்னிலையற்று பற்றற்று வாழும் தன்மையை வைத்தவர் என்றும் பொருள் கொள்ளலாம். திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஒரு பாடலில், அப்பர் நாயகி, தன்னையும் மறந்து, தனது பெயரினையும் மறந்து, தலைவனின் திருவடிகளைப் பற்றிக்கொண்ட தன்மை குறிப்பிடப்படுகின்றது. சிவபிரானைச் சென்று உயிர்கள் அடைய, உயிர் மேற்கொள்ள வேண்டிய நிலைகளை படிப்படியாக விவரிக்கும் பாடலாக, இந்த பாடல் கருதப்படுகின்றது. கேட்டல், தெளிதல், சிந்தித்து ஆராய்தல், யான் எனது என்ற நிலை மாறி சிவமாக மாறுதல் என்ற நான்கு நிலைகளும் இங்கே கூறப்பட்டுள்ளன. ஆரூர்ப் பெருமானின் பெயரை முதன் முதலாகக் கேட்ட தலைவி, பின்னர் அவனது தன்மைகளை பலர் மூலம் கேட்டறிந்துகொண்டு அவனது நிலை பற்றி தனக்கிருந்த ஐயங்களைத் தெளிவித்துக்கொள்கின்றாள்; பின்னர் அவனைப் பற்றியே சிந்தித்து, சிந்தித்து, தனது பெயரை மறந்து, தனது பெற்றோர்களை விடுத்து, தனது குல வழக்கங்களை விடுத்து, முடிவில் தன்னையே மறந்து அவனுக்கு ஆளான நிலை, அவளது தோழிக்கூற்றாக இங்கே சொல்லப்பட்டுள்ளது

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தைத்
தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே

பொழிப்புரை

உடலுடன் தொடர்புகொண்டுள்ள இந்த ஆன்மாவின் பெயரை ஒழிப்பதற்காக எனக்கு அடியான் என்ற பெயரை வழங்கினார் சிவபெருமான்; பின்னர் சிவஞானத்தினை உணர்த்தும் நூல்களை படிக்க வைத்து ஞானம் பெரும் வழியினை உணர வைத்தார்; பின்னர் உலகப் பொருட்கள் மற்றும் உலகில் உள்ள உயிர்கள் அனைத்திலும் சிவம் கலந்திருப்பதை உணர்த்தி அனைத்தையும் சிவமாக கருத வைத்தார்; மற்றும் நான் உணர்ந்த ஞானத்தை எனது மனதில் நிலை பெற்று இருக்குமாறு வைத்தார்; இவ்வாறு பல வழிகளிலும் என்னை பக்குவம் அடையச் செய்த பெருமான், சிவலோகத்தில் எனது ஆன்மா இருப்பதற்காக முக்தி எனப்படும் வழியையும் வைத்தார். இவ்வாறு எனது ஆன்மாவுக்கு அருளிய ஈசன், வைகுந்தத்தில் உறையும் திருமாலுக்கு சக்கரப்படையை வைத்தார், கானப்பேர் என்று அழைக்கப்படும் தலத்தின் மீது விருப்பம் கொண்டு அதனைத் தனது இருப்பிடமாக வைத்தார். அவர் தான் கழிப்பாலை தலத்தில் கடற்கரைத் தலைவனாக விளங்குகின்றார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.