முகப்பு
தினம் ஒரு தேவாரம்

30. வண்ணமும் வடிவும் - பாடல் 1

தில்லையில் நடராஜப் பெருமானின் திருக்கோலம் கண்டு மகிழ்ந்த பின்னர், அப்பர் பிரான் அருகில் இருந்த வேட்களம், கழிப்பாலை முதலிய தலங்கள் சென்று அங்கும் பதிகங்கள் அருளி சிவபிரானை வழிபட்டார்.

Updated On : 8 ஜூலை, 2016 at 5:58 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:09 PM

(கழிப்பாலை – குறுந்தொகை)

முன்னுரை

தில்லையில் நடராஜப் பெருமானின் திருக்கோலம் கண்டு மகிழ்ந்த பின்னர், அப்பர் பிரான் அருகில் இருந்த வேட்களம், கழிப்பாலை முதலிய தலங்கள் சென்று அங்கும் பதிகங்கள் அருளி சிவபிரானை வழிபட்டார். கழிப்பாலையில் பல பதிகங்கள் அருளியதாக சேக்கிழார் பெரிய புராணத்தில் குறிப்பிடுகின்றார். நமக்கு தற்போது கிடைத்துள்ள அப்பர் பிரானின் பதிகங்கள் ஐந்து. இந்த ஐந்து பதிகங்களில் காந்தாரப் பண்ணில் அமைந்துள்ள பதிகமும் (வனபவள வாய் திறந்து என்று தொடங்கும் பதிகம் - 4.06), இந்தப் பதிகமும் அகத்துறைப் பாடல்களாக அமைந்துள்ளன. நாமும் சிவபிரான் பால் ஆராத காதல் கொண்டு அவனது நினைவாகவே எப்போதும் இருக்கவேண்டும் என்பது அப்பர் பிரானின் உள்ளக் கருத்து போலும். கழிப்பாலை தலத்திற்கு அப்பர் பிரான் சென்றதை குறிப்பிடும் சேக்கிழார், மண்ணோர் வாழ இந்த தலத்தின் பதிகங்களை அருளினார் என்று கூறுகின்றார். சே = எருது. மேலும் இந்த பதிகத்தின் கடைப் பாடலில், துஞ்சும் போதும் துணை எனலாகுமே என்று உணர்த்துவதன் மூலம், சிவபிரானின் நினைவுகளை நாம் இறக்கும் சமயத்தில் கொண்டால், உய்யலாம் என்று அப்பர் பிரான் உணர்த்துவதால், மண்ணோர் வாழ வழி வகுக்கும் பதிகம் என்று சேக்கிழார் குறிப்பிட்டார் போலும்.

Advertisement

மேவிய பணிகள் செய்து விளங்கு நாள் வேட்களத்துச்
சேவுயர் கொடியார் தம்மைச் சென்று முன் வணங்கிப் பாடிக்
காவியங்கண்டர் மன்னும் திருக்கழிப்பாலை தன்னில்
நாவினுக்கரசர் சென்று நண்ணினார் மண்ணோர் வாழ

நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் அமைந்துள்ள பல அகத்துறைப் பாடல்கள், திருமால் பால் காதல் கொண்ட பெண்ணின் உணர்வுகளையும், நிலையையும், அந்தப் பெண்ணைச் சார்ந்த தோழியர் மற்றும் தாயின் கவலைகளையும் பிரதிபலிப்பதாக உள்ளன. அந்த பாடல்களுக்கு விளக்கம் அளித்த, வைணவ ஆச்சாரியார்கள், அத்தகைய பாடல்களில் வரும் நாயகியை பரகால நாயகி என்றும் பராங்குச நாயகி என்றும் குறிப்பிடுகின்றார்கள். திருமங்கை ஆழ்வாரின் ஒரு நாமம் பரகாலன் என்பதால், அவரது பாசுரங்களில் வரும் நாயகி பரகால நாயகி என்றும், நம்மாழ்வாரின் பாசுரங்களில் வரும் நாயகி (அவரின் மற்றொரு பெயர் பராங்குசன்) பராங்குச நாயகி என்றும் குறிப்பிடப்படுகின்றார்கள். அந்த மரபினை ஒட்டி, நாமும் அப்பர் தேவாரப் பதிகங்களில் வரும் நாயகியை அப்பர் நாயகி என்றும் சம்பந்தரின் தேவாரங்களில் வரும் நாயகியை சம்பந்தர் நாயகி என்றும் குறிப்பிட்டு விளக்கம் அளிக்கலாமே.

பாடல் 1

வண்ணமும் வடிவும் சென்று கண்டிலள்
எண்ணி நாமங்கள் ஏத்தி நிறைந்திலள்
கண்ணுலாம் பொழில் சூழ் கழிப்பாலை
அண்ணலே அறிவான் இவள் தன்மையே

விளக்கம்

நிறைவு = மன நிறைவு. கண் = இடம். உலாம் = பொருந்திய. பெருமானைக் காணாமலே அவன் மீது காதல் கொண்ட பெண்ணின் நிலையை உணர்த்தும் பாடல். பெருமானைக் காணாமலே அவன் மீது காதல்கொள்ளும் நிலை நமக்கு ஆரூர்ப் பதிகத்தின் அப்பர் நாயகியை உணர்த்துகின்றது. சிவபிரானைச் சென்று உயிர்கள் அடைய, உயிர் மேற்கொள்ள வேண்டிய நிலைகளை படிப்படியாக விவரிக்கும் பாடலாக, இந்த பாடல் கருதப்படுகின்றது. கேட்டல், தெளிதல், சிந்தித்து ஆராய்தல், யான் எனது என்ற நிலை மாறி சிவமாக மாறுதல் என்ற நான்கு நிலைகளும் இங்கே கூறப்பட்டுள்ளன. ஆரூர்ப் பெருமானின் பெயரை முதன் முதலாகக் கேட்ட தலைவி, பின்னர் அவனது தன்மைகளை பலர் மூலம் கேட்டறிந்துகொண்டு அவனது நிலை பற்றி தனக்கிருந்த ஐயங்களைத் தெளிவித்துக்கொள்கின்றாள்; பின்னர் அவனைப் பற்றியே சிந்தித்து, சிந்தித்து, தனது பெயரை மறந்து, தனது பெற்றோர்களை விடுத்து, தனது குல வழக்கங்களை விடுத்து, முடிவில் தன்னையே மறந்து அவனுக்கு ஆளான நிலை, அவளது தோழிக்கூற்றாக இங்கே சொல்லப்பட்டுள்ளது.

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தைத்
தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே

ஆரூர் பதிகத்தின் நாயகி போன்று, இந்த பாடலில் அப்பர் பிரான் உணர்த்தும் நாயகியும் கழிப்பாலைப் பெருமானை நேரில் பார்க்காது இருந்த போதிலும், அவன் மீது காதல்கொண்டுள்ள இவள், அவனது திருநாமத்தை எத்தனை முறை உச்சரித்தாலும் நிறைவு அடையாதவளாக, அவனது பெயரினை பிதற்றியவாறு இருக்கின்றாள் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார்.

பொழிப்புரை

இந்தப் பெண், கழிப்பாலைப் பெருமானை இதுவரை நேரில் சென்று கண்டதில்லை; எனவே அவனது உருவம் எப்படி இருக்கும், அவனது மேனியின் நிறம் எப்படி இருக்கும் என்பதை அறியாதவள். ஆயினும் அவனது பெருமையைத் தனது தோழியர்கள் சொல்லக் கேட்டறிந்தவள் போலும். அதனால் அவன் மீது ஆராத காதல் கொண்டு, அவனது திருநாமங்களை உச்சரித்தவாறே காணப்படுகின்றாள். எத்தனை முறை அவனது நாமங்களை பிதற்றினாலும், அதனால் மனநிறைவு அடையதவளாக அவனது நாமத்தைச் சொல்வதை நிறுத்தாமல் இருக்கின்றாள். இவ்வாறு இருக்கும் இவளது தன்மையைக் காணும் எனக்கு, இவளின் காதலின் ஆழம் என்னவென்று புரியவில்லை. எங்கும் பொழில்கள் காணப்படும் கழிப்பாலைத் தலத்தில் உறையும் சிவபெருமானே, இவளது காதலின் உண்மையான நிலையை அறிவான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.