23. கருமணியை கனகத்தின் - பாடல் 10
மாற்று மதத்தினில் மிகவும் அதிகமான நாட்களைத் தான் கழித்திருந்த போதும், சரணம் என்று பெருமானின்
பாடல் 10
இகழ்ந்தானை இருபது தோள் நெரிய ஊன்றி எழுநரம்பின்
இசை பாட இனிது கேட்டுப்
புகழ்ந்தானைப் பூந்துருத்தி மேயான் தன்னைப் புண்ணியனை
விண்ணவர்கள் நிதியம் தன்னை
மகிழ்ந்தானை மலைமகள் ஓர் பாகம் வைத்து வளர்மதியம்
சடை வைத்து மால் ஓர் பாகம்
திகழ்ந்தானைத் திருமுதுகுன்று உடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்தவாறே

விளக்கம்

இகழ்ந்தான் = பெருமான் வீற்றிருக்கும் கயிலை மலையின் பெருமையினை அறியாது இகழ்ந்த அரக்கன் இராவணன்.

பொழிப்புரை:

கயிலை மலையின் பெருமையை அறியாது அதனை இகழ்ந்து பின்னர் அதனை பேர்த்து எடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட அரக்கன் இராவணனின் இருபது தோள்களும் நொறுங்குமாறு தனது கால் பெருவிரலை கயிலை மலையின் மீது ஊன்றியவனும், தனது வலிமை அடக்கப்பட்ட பின்னர் உண்மை நிலையினை உணர்த்த அரக்கன் தனது உடலின் ஏழு நரம்புகளைக் கொண்டு பாடிய இன்னிசையைக் கேட்டு அரக்கனைப் புகழ்ந்தவனும், பூந்துருத்தி தலத்தில் உறைபவனும், புண்ணியனும், விண்ணவர்களால் பெரிய செல்வமாக கருதப்படுபவனும், உமையம்மையை தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்து மகிழ்ந்தவனும், தன்னிடம் சரணடைந்த பின்னர் வளரும் தன்மையினைப் பெற்ற சந்திரனைத் தனது சடையில் அணிந்தவனும், திருமாலைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துத் திகழ்பவனும் ஆகிய பெருமானை, மிகவும் பழமையான முதுகுன்றம் தலத்தில் உறையும் பெருமானை, நான் அறியாமல் திகைத்திருக்கும் நிலையில் என்னை ஆழ்த்திய எனது தீவினைகள் மிகவும் கொடியன அல்லவா.

முடிவுரை

மாற்று மதத்தினில் மிகவும் அதிகமான நாட்களைத் தான் கழித்திருந்த போதும், சரணம் என்று பெருமானின் திருவடிகளைப் பற்றியபோது தன்னை ஆட்கொண்ட இறைவனின் பண்பினை நினைத்து, அப்பர் பிரான் மிகவும் நெகிழ்வதை நாம் இந்த பதிகத்தில் காணலாம். பதிகத்தின் முதல் பாடலில் தான் அபயம் புகுந்ததையும், இரண்டாவது பாடலில் சரணடைந்த சந்திரனைக் காத்த பண்பினையும், மூன்றாவது பாடலில் தன்னை பாடவைத்த கருணைச் செயலையும், நான்காவது பாடலில் தன்னைத் தனது சீடனாக ஏற்றுக்கொண்டு அருளியதையும் குறிப்பிடுவதை நாம் காணலாம்.

நாமும் நமது வாழ்வினில் தெரிந்தும் தெரியாமலும் பல தவறுகளைச் செய்கின்றோம். அவ்வாறு செய்யும் தவறுகளின் விளைவாக, பல தீவினைகளை பெருக்கிக்கொள்கின்றோம். அந்த தீவினைகளைக் களையும் வல்லமை படைத்த இறைவனிடம், நமது இரங்கத்தக்க நிலையினை வெளிப்படுத்தி, அத்தகைய தீவினைகளைப் போக்க வேண்டும் என்ற நமது விண்ணப்பத்தை அவனிடம் சமர்ப்பித்து, அவனது கருணையை வேண்டி நிற்பதற்கு மிகவும் உகந்த பதிகமாக இந்த பதிகம் உள்ளதுபோல் தோன்றுகின்றது.

Advertisement