முகப்பு
தினம் ஒரு தேவாரம்

24. கருநட்ட கண்டனை - பாடல் 7

இதே பதிகத்தின் நான்காவது பாடலில் நடராஜப் பெருமானின் திருவுருவத்தை நமது கண் முன்பு நிறுத்துவதுபோல் விவரித்து

Updated On : 9 மே, 2016 at 6:31 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:45 PM

பாடல் 7

முடி கொண்ட மத்தமும் முக்கண்ணின் நோக்க முறுவலிப்பும்
துடி கொண்ட கையும் துதைந்த வெண்ணீறும் சுரிகுழலாள்
படி கொண்ட பாகமும் பாய்புலித் தோலும் என் பாவி நெஞ்சில்
குடி கொண்டவா தில்லை அம்பலக்கூத்தன் குரைகழலே


விளக்கம்

Advertisement

இதே பதிகத்தின் நான்காவது பாடலில் நடராஜப் பெருமானின் திருவுருவத்தை நமது கண் முன்பு நிறுத்துவதுபோல் விவரித்து மகிழ்ந்த அப்பர் பிரான் தனது மனதினில் இறைவனின் திருவுருவம் எவ்வாறு பதிந்துள்ளது என்பதை இங்கே கூறுகின்றார். இத்தைகைய அழகுடைய சிவபிரானை, கருணைகொண்டு தனது உள்ளத்தில் புகுந்துள்ள சிவபிரானை நினையாமல் சமண சமயத்தில் பல வருடங்கள் கழித்ததற்கு வருந்தி, தன்னை பாவியேன் என்று அழைப்பதையும் நாம் இங்கே உணரலாம். பாவியாகிய தனது நெஞ்சினில் இவ்வாறு சிவபிரானது திருவுருவம் பதிந்தது ஒரு அதிசயமாக அப்பர் பிரானால் கருதப் படுகின்றது.

பொழிப்புரை

பாவியாகிய எனது நெஞ்சினில், சிவபிரானின் தலையில் அணிந்துள்ள ஊமத்தைப் பூவும், மூன்று கண்களின் பார்வையும், கண்களில் தென்படும் புன்சிரிப்பும், ஒலிக்கும் உடுக்கையை ஏந்திய திருக்கரமும், மேனியில் முழுதும் பூசிய வெண்ணீறும், சுருண்ட கூந்தலைக் கொண்ட பார்வதி தேவியை தனது உடலில் கொண்டுள்ள பாங்கும், இடையில் உடுத்திய புலித்தோலும், ஒலிக்கும் கழல்களை அணிந்த திருவடிகளும் நிலையாக இடம் பெற்றுள்ளன.

</p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.