24. கருநட்ட கண்டனை - பாடல் 8
சென்ற பாடலில் சமண சமயத்தில் தான் இருந்த நாட்களுக்காக பாவியேன் என்று தன்னைத் தாழ்த்தி சொல்லிக்கொண்ட அப்பர் பிரானுக்கு, சமண சமயத்தவர்கள் தனக்கு இழைத்த சூழ்ச்சிகளும்,
பாடல் 8
படைக்கலமாக உன் நாமத்து எழுத்து அஞ்சு என் நாவில் கொண்டேன்
இடைக்கலம் அல்லேன் எழு பிறப்பும் உனக்கு ஆட்செய்கின்றேன்
துடைக்கினும் போகேன் தொழுது வணங்கித் தூநீறு அணிந்து உன்
அடைக்கலம் கண்டாய் அணித் தில்லைச் சிற்றம்பலத்து அரனே
விளக்கம்
Advertisement
இடைக்கலம் அல்லேன் = இடையில் நிறுத்தாமல் இருப்பேன்.
சென்ற பாடலில் சமண சமயத்தில் தான் இருந்த நாட்களுக்காக பாவியேன் என்று தன்னைத் தாழ்த்தி சொல்லிக்கொண்ட அப்பர் பிரானுக்கு, சமண சமயத்தவர்கள் தனக்கு இழைத்த சூழ்ச்சிகளும், அந்த சூழ்ச்சிகளிலிருந்து சிவபிரான் காப்பாற்றிய தன்மையும் நினைவுக்கு வந்தது போலும். அப்போது அவரைக் காப்பாற்றியது அஞ்செழுத்து மந்திரம்தானே. அந்த மந்திரம் படைக்கலம்போல் தன்னைக் காத்ததை பெருமையுடன் இங்கே சொல்லிக்கொள்கின்றார்.
இடைவிடாது உனது அன்பராக இருப்பேன் என்று சிவபிரானிடம் கூறும் அப்பர் பிரான் வேறொரு செய்தியையும் இறைவனுக்குத் தெளிவுபடுத்துகின்றார். புழுவாய் பிறக்கினும் புண்ணியா உனதடி வழுவாது இருக்க வரம் வேண்டியவர் அல்லவா. மறுபிறப்பு என்ற தத்துவத்தில் நம்பிக்கை கொண்ட சைவராகிய அவருக்கு தனது மறுபிறப்பு எந்த வகையான பிறப்பாக இருக்குமோ என்ற சந்தேகம் வருகின்றது. இந்த பிறப்பினில் நாம் செய்த வினைகளுக்கு ஈடாக உள்ள உடலுடன் அடுத்த பிறவியில் நமது உயிர் இறைவனால் பொருத்தப்படுகின்றது. தாவரம், நீரில் வாழ்வன, ஊர்வன, நடப்பன, பறப்பன, மனிதர், தேவர் என்ற ஏழுவகையான பிறப்புகளில் எதுவாக இருந்தாலும் தான் இறைவனுக்கு அடிமையாக இருப்பேன் என்று உறுதியாக அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார்.
சுந்தரர் பெருமானும் பாச்சிலாச்சிராமத்து பதிகத்தின் பதினோராவது பாடலில், ஒருமையே அல்லேன் எழுமையும் அடியேன் என்ற சொற்றொடர் மூலம் இந்த ஒரு பிறப்பினில் மட்டுமல்ல ஏழு வகையான பிறப்புகளில் எந்த விதமாக பிறந்தாலும் தான் சிவபிரானுக்கு அடியேனாக இருப்பேன் என்று சொல்லுகின்றார்.
ஒருமையே அல்லேன் எழுமையும் அடியேன் அடியவர்க்கு அடியனும் ஆனேன்
உரிமையால் உரியேன் உள்ளமும் உருகும் ஒண்மலர்ச் சேவடி காட்டாய்
அருமையாம் புகழார்க்கு அருள் செயும் பாச்சில் ஆசிராமத்து எம் அடிகள்
பெருமைகள் பேசிச் சிறுமைகள் செய்யில் இவரலாது இல்லையோ பிரானார்
எந்த மொழியாயிருந்தாலும் அருளாளர்களின் கண்ணோட்டம் ஒன்று போல் இருப்பதை நாம் ஆதி சங்கரர் அருளிய சிவானந்த லஹரியின் பத்தாவது பாடலிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த பாடலில் ஆதி சங்கரர், தான் தனது அடுத்த பிறவியில் மனிதனாக இருந்தாலும், தேவனாக இருந்தாலும், காட்டு மிருகமாக இருந்தாலும், கொசுவாக இருந்தாலும், பசுவாக இருந்தாலும், புழுவாக இருந்தாலும், பறவையாக இருந்தாலும், இறைவன் மீது பக்தி இருக்குமாகில் அந்த உடலுக்கு எந்த விதத்திலும் குறை இல்லை என்று பாடுகிறார். அவரது வேண்டுதல் எந்த பிறவி எடுக்க நேர்ந்தாலும் அந்த பிறவியிலும் இறைவினிடம் பக்தி கொண்ட உயிராக இருக்க வேண்டும் என்பதாகும்.
நரத்வம் தேவத்வம் நக வன ம்ருகத்வம் மசகதா
பசுத்வம் கீடத்வம் பவது விஹகத்வாதி ஜனனம்
சதா த்வத் பாதாப்ஜ ஸ்மரண பரமாந்த லஹரீ
விஹாரா சக்தஞ் சேத் த்ருதயமிஹ கிம் தேன வபுஷா
எத்தகையான அடிமை என்பதை கச்சி ஏகம்பம் மீது அருளிய ஒரு திருவிருத்தப் பாடலில் அப்பர் பிரான் உணர்த்துகின்றார். காதுவித்தல் = கொல்லுதல். இங்கே சமணர்கள் தன்னை பல சூழ்ச்சிகள் மூலம் கொலை செய்ய முயன்றதை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார், கொலை செய்ய முயன்றது சமணர்கள் என்றாலும் அதனை இறைவன் சிவபிரான் பேரில் அப்பர் பிரான் ஏற்றிச் சொல்வதை நாம் இங்கே உணரலாம். தான் சமண சமயத்தைச் சார்ந்து இருந்த தவற்றிற்காக இறைவன் தனக்கு விதித்த தண்டனையாக அதனை கருதும் அப்பர் பிரான், சிவபிரானுக்கு அடிமையாகிய தான் ஏதேனும் தவறு செய்தால், தன்னை கோபித்து புளியங்கொம்பினால் அடித்து தண்டிக்கும் உரிமையையும் சிவபிரானுக்கு வழங்குவதை நாம் காணலாம்.
ஓதுவித்தாய் முன் அறவுரை காட்டி அமணரோடே
காதுவித்தாய் கட்ட நோய் பிணி தீர்த்தாய் கலந்தாண்ட
போதுவித்தாய் நின் பணி பிழைக்கில் புளியம் வளாரால்
மோதுவிப்பாய் உகப்பாய் முனிவாய் கச்சி ஏகம்பனே
பொருட்களின் மீது உள்ள தூசினை நாம் துடைத்து அடியோடு நீக்குவது அனைவரும் அறிந்த ஒன்று. அவ்வாறு துடைத்து வெளியேற்றினாலும் தான் இறைவனது திருவடியை விட்டு நீங்காது இருப்பேன் என்றும் அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார்.
சமணர்களால் தனக்கு ஏற்பட்ட சோதனைகளிலிருந்து தான் தப்பியதற்கு அப்பர் பிரான் ஏதும் பெருமைகொள்ளவில்லை. தான் காப்பாற்றப்பட்டது ஈசனின் அருளால்தான் என்பதை முழுதும் உணர்ந்த அப்பர் பிரான், தனக்கு இனி வரும் இடர்களிலிருந்தும் இறைவன் தான் காக்கவேண்டும் என்பதை இங்கே அடைக்கலம் கண்டாய் என்று குறிப்பிடுவதன் மூலம் தெளிவுபடுத்துகின்றார்.
பொழிப்புரை
அழகிய சிற்றம்பலத்தில் உள்ள பெருமானே, எனக்கு மற்றவர்கள் இழைக்கக் கூடிய தீங்குகளிலிருந்து காப்பாற்றும் படைக்கலமாக உனது நாமத்தை எந்தன் நாவினில் கொண்டுள்ளேன். இந்த பிறப்பு மட்டுமல்லாது எந்த வகையான பிறப்பு எடுத்தாலும், இடையில் விட்டு நீங்காது உனக்கு அடிமைத் தொண்டினைச் செய்வேன். நீயே என்னை விலக்கினாலும் நான் உன்னை விட்டு பெயராமல், உன்னை மனத்தால் தொழுது உடலால் வணங்கி, எனது உடலில் திருநீறு அணிந்து நீ காக்கப்பட வேண்டிய பொருளாக உன்னிடம் அடைக்கலம் புகுகின்றேன்.
</p>