44. முற்றுணை ஆயினானை - பாடல் 9
நஞ்சு கலந்து ஊட்டப்பட்ட பின்னரும்,
பத்துமோர் இரட்டித் தோளான் பாரித்து மலை எடுக்கப்
பத்துமோர் இரட்டித் தோள்கள் படர் உடம்பு அடர ஊன்றிப்
பத்து வாய் கீதம் பாடப் பரிந்து அவர்க்கு அருள் கொடுத்தார்
பத்தர் தாம் பரவி ஏத்தும் நனிப்பள்ளி பரமனாரே
விளக்கம்
பத்துமோர் இரட்டித் தோளான் = பத்தினைப் போன்று இருமடங்கு தோள்களைக் கொண்டவன், இருபது தோள்களைக் கொண்ட அரக்கன் இராவணன்: பத்து என்ற சொல், பாடலின் நான்கு அடிகளிலும் வருமாறு பாடல் அமைக்கப்பட்டிருப்பதால், இறுதி அடியில் இருக்கும் பத்தர் என்ற சொல்லுக்கு பத்து குணங்களை உடைய அடியார்கள் என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக இருக்கும். சிவனடியார்களிடம் இருக்க வேண்டிய குணங்களை அக குணங்கள் என்றும் புறக் குணங்கள் என்றும் பிரிக்கின்றனர். பத்து புற குணங்கள், திருநீறும் உருத்திராக்கமும் பக்தியுடன் தரித்தல், சிவபெருமானை புகழ்ந்து பாடுதல், சிவபிரானின் திருநாமங்களை ஓதுதல், சிவபூசனை புரிதல், சிவபுண்ணியங்கள் செய்தல், சிவபுராணங்களையும் சிவச்சரிதைகளையும் கேட்டல், சிவாலய வழிபாடு செய்தல், சிவனடியார்களை வணங்குதல், சிவனடியார்களுக்கு வேண்டுவன கொடுத்தல், சிவனடியார்கள் இல்லங்களில் அன்றி வேறிடத்தில் அன்னம் உட்கொள்ளாது இருத்தல் ஆகும். பத்து அக குணங்கள், சிவபிரானின் புகழைக் கேட்கும்போது கண்டம் விம்முதல், நாக்கு தழுதழுத்தல், உதடுகள் துடித்தல், உடம்பு குலுங்குதல், மயிர்ப்புளகம் கொள்ளுதல், உடல் வியர்த்தல், சொல் எழாமல் இருத்தல், கசிந்துருகி கண்ணீர் பெருக்குதல், வாய் விட்டு அழுதல், மெய்ம்மறத்தல் ஆகும். பத்து என்ற சொல்லினை பற்று என்ற சொல்லின் திரிபாகக் கருதி, சிவபெருமானிடத்தில் பற்று உடைய அடியார்கள் என்று பொருள் கொள்வதும் பொருத்தமாக உள்ளது.
Advertisement
பொழிப்புரை
இருபது தோள்களை உடைய அரக்கன் ராவணன், தனது பெருமையை பறை சாற்றியவாறு மிகுந்த ஆரவாரத்துடன், கயிலை மலையினை பேர்த்தெடுக்க முயற்சி செய்தபோது, இருபது தோள்களை உடைய அவனது உடல் வருந்துமாறு, தனது கால் விரலினை மலையின் மீது ஊன்றியவர் சிவபெருமான். தனது தவற்றினை உணர்ந்த அரக்கன் இராவணன், தனது பத்து வாய்களாலும் இசைப் பாடல்களைப் பாட, அவனுக்கு அருள்கள் செய்தவர் சிவபெருமான். நனிபள்ளி தலத்தில் உறையும் சிவபெருமானை, சிறந்த பத்து அக குணங்களையும், பத்து புற குணங்களையும் கொண்ட அடியார்கள், புகழ்ந்து பாடுகின்றார்கள்.
முடிவுரை
இந்த பதிகத்தின் எட்டாவது பாடலின் பிற்பகுதியும், ஒன்பதாவது பாடலும் சிதைந்துவிட்டன. சுண்ணாம்புக் காளவாயில், ஏழு நாட்கள் அடைக்கப்பட்டிருந்தபோதிலும், தனது உடலுக்கு ஏதும் ஊனம் இன்றி இருந்ததைக் கண்ட சமணர்கள், முதலில் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் மன்னரிடம் சென்று நடந்ததைக் கூறும்போது உண்மையைத் திரித்து, தங்களது மதத்தில் இருந்தபோது அறிந்துகொண்ட சாதகங்களால் அப்பர் உயிர் பிழைத்தார் என்றும், அவருக்கு நஞ்சினை ஊட்டி அவரை தண்டிக்கவேண்டும் என்று மன்னனிடம் கூறினார்கள். பல்லவ மன்னனும், சமண சமயத்தின் மீது தான் கொண்டிருந்த பற்று காரணமாக, அவ்வாறே செய்யுங்கள் என்று அனுமதி அளித்தான். இதனை உணர்த்தும் பெரியபுராணப் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. சமண சமயத்தைச் சார்ந்து இருந்த காரணத்தால் மன்னவன் கெடுமதி உடையவனாக விளங்கினான் என்றும், சமண குருமார்கள் ஏற்படுத்திய மயக்கத்தில் மன்னன் ஆழ்ந்திருந்தான் என்பதும் இங்கே உணர்த்தப்படுகின்றது. தேங்குதல் = கூடுதல், தேங்காதார் என்று சைவ சமயத்து நெறிகளுடன் கூடாத சமணர்களை சேக்கிழார் குறிப்பிடுகின்றார்.
ஆங்கது கேட்டாலும் கொடிய அமண் சார்பால் கெடு மன்னன்
ஓங்கு பெரும் மையலினால் நஞ்சு ஊட்டும் என உரைப்பத்
தேங்காதார் திருநாவுக்கரசரை அத்தீய விடப்
பாங்குடைய பால் அடிசில் அமுது செயப் பண்ணினார்
மன்னனின் ஆணைப்படி, சுண்ணாம்புக் காளவாயில் அடைக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்ட போது, சிறிதும் கலங்காமல் அப்பர் பிரான், ஈசனின் அடியார்களுக்கு இத்தகைய துன்பங்களும் வருமோ என்ற எண்ணத்துடன் சிவபிரானின் திருப்பாதங்களைத் தொழுதவாறே நீற்றறையில் புகுந்ததாக சேக்கிழார் பெரியபுராணத்தில் கூறுகின்றார். அதேபோல், இப்போதும் கலக்கம் ஏதும் இன்றி, நாதனின் அடியார்களுக்கு நஞ்சும் அமுதாகும் என்று சொல்லியவாறே, தனக்கு கொடுக்கப்பட்ட, நஞ்சு கலந்த சோற்றினை உண்டார் என்று சேக்கிழார் கூறும் பாடலை நாம் இங்கே காண்போம். மிசைதல் = விரும்பி உண்ணுதல். நஞ்சு கலந்த சோற்றினை உண்ட பின்னரும் அப்பர் பிரான் உயிருடன் பிழைத்திருந்த செய்தி இங்கே குறிப்பிடப்படுகின்றது.
நஞ்சும் அமுதாம் எங்கள் நாதன் அடியார்க்கு என்று
வஞ்சமிகு நெஞ்சுடையார் வஞ்சனையாம் படி அறிந்தே
செஞ்சடையார் சீர் விளக்கும் திறல் உடையார் தீவிடத்தால்
வெஞ்சமணர் இடுவித்த பாலடிசில் மிசைந்து இருந்தார்
இந்த நிகழ்ச்சியை குறிப்பிடும் சேக்கிழார், உலகத்தார் அனைவரையும் முடிக்குமாறு திரண்டெழுந்து வந்த ஆலகால நஞ்சினையே, தான் உண்டு அமுதமாக மாற்றிய சிவபெருமானுக்கு, தனது அடியாருக்கு ஊட்டப்பட்ட நஞ்சினை அமுதமாக மாற்றுதல் மிகவும் எளிதான செயல் தானே, அதனை அற்புதம் என்று கருதலாமா என்று கேட்கின்றார். அந்த பெரியபுராணப் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
பொடியார்க்கும் திருமேனிப் புனிதர்க்குப் புவனங்கள்
முடிவாக்கும் துயர் நீங்க முன்னை விடம் அமுதானால்
படியார்க்கும் அறிவரிய பசுபதியார் தம்முடைய
அடியார்க்கு நஞ்சு அமுதம் ஆவது தான் அற்புதமோ
நீற்றறையில் இட்டது, யானையை வைத்து இடறச் செய்ததது, கல்லுடன் பிணைத்துக் கடலில் தள்ளியது ஆகிய நிகழ்ச்சிகளை குறிப்பிடும் பெரியபுராணப் பாடல்களில், அப்பர் பிரான் அருளிய பதிகச் சொற்றொடர்கள் சேக்கிழாரால் கையாளப்பட்டுள்ளன. எனவே நஞ்சும் அமுதாம் எங்கள் நாதன் அடியார்க்கு என்ற சொற்றொடர், அந்த சமயத்தில் அப்பர் பிரான் அருளிய பதிகத்தின் தொடராக இருக்கவேண்டும். செல்லரித்துப்போய், நாம் இழந்த பதிகங்களில் இந்த பதிகமும் ஒன்றாக இருக்கவேண்டும். நனிபள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஐந்தாவது பாடல், அப்பர் பிரான் சிவபெருமானின் கருணையால், நஞ்சு கலந்து ஊட்டப்பட்ட பின்னரும், உயிர் பிழைத்தமைக்கு அகச் சான்றாகத் திகழ்கின்றது. நால்வர் பெருமானார்களில் அப்பர் பிரான் ஒருவரே, அதிகமான ஆண்டுகள் வாழ்ந்தார் (81 வருடங்கள்). நஞ்சினை அமுதமாக இறைவன் மாற்றிய கருணைச் செய்கை தான், அப்பர் பிரான் நெடுங்காலம் வாழ்வதற்கு வழி வகுத்ததோ என்று நினைக்கத் தோன்றுகின்றது. ஆனால் உண்மையில் இந்த நிகழ்ச்சியால் மிகவும் பயனடைந்தவர்கள், அப்பர் பிரானின் இனிய பதிகங்கள் கிடைக்கப்பெற்று பயனடைந்தவர்கள் நாம்தானே. எனவே அவரது பதிகங்களை ஓதி, சிவபிரானின் அருளுக்கு பாத்திரமாக மாறுவோமாக.