35. செஞ்சடைக் கற்றை - பாடல் 9
கர்த்தன் என்ற சொல்லின் திரிபு
பாடல் 9
விருத்தனாய்ப் பாலனாகி விரிநிலா எறிக்கும் சென்னிச்
திருத்தனார் நிருத்தம் செய்ய நீண்ட புன்சடைகள் தாழ
Advertisement
கருத்தனார் தில்லை தன்னுள் கருது சிற்றம்பலத்தே
அருத்தமா மேனி தன்னோடு அனல் எரி ஆடுமாறே
விளக்கம்
விருத்தன் = அனைத்துப் பொருட்களுக்கும் அனைத்து உயிர்களுக்கும் முன்னவனாக இருக்கும் நிலை. பாலனாகி = அனைத்துப் பொருட்களும், அனைத்து உயிர்களும் அழிந்த பின்னரும் இருக்கும் நிலை. இந்த நிலை, ஞான சம்பந்தப் பெருமானால் இடர் களையும் பதிகத்தின் (1.52) எட்டாவது பாடலில் குறிக்கப் படுகின்றது. கருத்தன் = முழுமுதற் கடவுள், கர்த்தன் என்ற சொல்லின் திரிபு. அருத்தன் = அனைத்துப் பொருட்களுக்கும் கருவானவன், உட்பொருளானவன். சிவபெருமானை வழிபடும் அடியார்கள், ஆனந்தத்தினால், ஆடுவதாகவும் பாடுவதாகவும் சம்பந்தர் கூறுகின்றார்.
விருத்தனாகி பாலனாகி வேதம் ஓர் நான்கு உணர்ந்து
கருத்தனாகிக் கங்கையாளை கமழ்சடை மேல் கரந்தாய்
அருத்தனாய ஆதி தேவன் அடியிணையே பரவும்
நிருத்தர் கீதர் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே
பொழிப்புரை
காலத்தால் அனைவருக்கும் மூத்தவராக இருக்கும் எம்பெருமான், அனைவரும் இறந்த பின்னரும் இருப்பதால் அனைவருக்கும் இளையவராகவும் கருதப்படுகின்றார். தனது தலையில் சூடியுள்ள நிலவின் ஒளி, சடையில் பரவ, தனது சடைகள் தாழுமாறு, கூத்தில் வல்லவரான சிவபெருமான் நடனம் ஆடுகின்றார். தனது கூத்தின் அழகால், அடியார்களின் உள்ளத்தைக் கவர்ந்து, அவர்களது கருத்தாகத் திகழும் சிவபிரான், சிற்றம்பலத்தில், தனது உடலின் ஒரு பாகத்தில் உமையம்மையை உடையவராய், ஊழித்தீயிடை நின்று நடனம் ஆடுகின்றார்.