36. சொல்லானைப் பொருளானை - பாடல் 4
இராமனுக்கு காகுத்தன் என்ற பெயரும் உள்ளது
பாடல் 4
செம்பொன்னை நன்பவளம் திகழும் முத்தைச்
செழுமணியை தொழும் அவர் தம் சித்தத்தானை
வம்பு அவிழும் மலர்க்கணை வேள் உலக்க நோக்கி
மகிழ்ந்தானை மதில் கச்சி மன்னுகின்ற
கம்பனை எம் கயிலாய மலையான் தன்னைக் கழுகினொடு
காகுத்தன் கருதி ஏத்தும்
நம்பனை எம் பெருமானை நாதன் தன்னை நாரையூர்
நன்னகரில் கண்டேன் நானே
விளக்கம்
Advertisement
உலக்க = அழியுமாறு. வம்பு அவிழும் = நறுமணம் வீசுகின்ற. நாரை வழிபட்ட தலமாகிய நாரையூர் சென்ற அப்பர் பிரானுக்கு, மற்றொரு பறவை (கழுகு) பெருமானை
வழிபட்டதும் நினைவுக்கு வந்தது போலும். திருக்கழுக்குன்றம் மற்றும் புள்ளிருக்கு வேளூர் ஆகிய தலங்கள் கழுகு வழிபட்ட தலங்கள். இராமயணத்தில் வரும் சம்பாதி
மற்றும் ஜடாயு வழிபட்ட தலம் புள்ளிருக்கு வேளூர். திருஞான சம்பந்தர் இந்த தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (2.43) பத்து பாடல்களிலும் இந்த நிகழ்ச்சியை
குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் முதல் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. அரையன்=தலைவன். பறவையாக பிறந்தாலும் சிவபெருமானிடம் பக்தி கொண்டு
விளங்கிய, ஜடாயு மற்றும் சம்பாதி ஆகியவற்றை பறவை எனப்படும் இழிந்த பிறவி என்று தள்ளக்கூடாது என்று சம்பந்தர் நமக்கு உணர்த்தும் பாடல்.
கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தம் கதிர் மதியம்
உள்ளார்ந்த சடைமுடி எம் பெருமானார் உறையும் இடம்
தள்ளாய சம்பாதி சடாய் என்பர் தாமிருவர்
புள்ளானார்க்கு அரையன் இடம் புள்ளிருக்குவேளூரே
ஜடாயு செய்த வழிபாட்டினை குறிப்பிட்ட அப்பர் பிரானுக்கு, ஜடாயுவுடன் தொடர்பு கொண்ட இராமபிரான் நினைவுக்கு வந்தார் போலும். ககுத்த வம்சத்தில் அவதரித்த
இராமனுக்கு காகுத்தன் என்ற ஒரு பெயரும் உள்ளது. இராமச்சுரம் முதலான பல பாடல் பெற்ற தலங்களில் இராமன் வழிபாடு செய்ததாக, அந்தந்த தல புராணங்கள் கூறுகின்றன.
பொழிப்புரை
செம்மையான பொன், நல்ல பவளம், ஒளிவிட்டு திகழும் முத்து, செழுமையான மணி ஆகிய பொருட்களுக்கு ஒப்பாக கருதப் படுபவன் சிவபெருமான்; தன்னை வணங்கும்
அடியார்களின் சித்தத்தில் உறைபவன் சிவபெருமான்; நறுமணம் சிந்தும் புதிய மலர்களைத் தனது வில்லினில் தொடுத்து, தனக்கு எதிர்ப்படுவோர் மனதினில் காம
உணர்வினைத் தூண்டும் வல்லமை படைத்த மன்மதன் அழியுமாறு அவனை உற்று நோக்கியவர் சிவபெருமான்; மன்மதனை அழித்ததன் மூலம் ஐம்புலன்களையும் வென்ற
தனது தன்மையை உலகுக்கு உணர்த்திய பின்னர், உமையம்மையை திருமணம் செய்துகொண்டு மகிழ்ந்தவர் சிவபெருமான். மதில்கள் சூழ்ந்த காஞ்சி மாநகரத்தில்
ஏகம்பனாக நிலைபெற்று இருப்பவர் சிவபெருமான்; கயிலாய மலையில் வாழும் தலைவனாகிய சிவபெருமானை, தங்களுக்கு நன்மை அளிப்பவன் என்று கருதி ஜடாயு
சம்பாதி ஆகிய கழுகுகளும் காகுத்தன் வம்சத்தில் வந்த இரமாபிரானும் வழிபட்டார்கள்; இவ்வாறு அனைவராலும் விரும்பப் படுபவனும், எனது பெருமானும், தலைவனும்
ஆகியவன் சிவபெருமான். இத்தகைய பண்புகளை உடைய பெருமானை நாரையூர் நன்னகரத்தில் நான் கண்டேன்.