முகப்பு
தினம் ஒரு தேவாரம்

69. நிறைக்க வாலியள் அல்லள் பாடல் -  6

உடல் மெலிந்து

Updated On : 6 அக்டோபர், 2017 at 10:33 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 10:02 PM

பாடல் 6:
    
    குழலும் கொன்றையும் கூவிள மத்தமும்
    தழலும் தையலோர் பாகமாத் தாங்கினான்
    அழகன் ஆவடு தண்டுறையா எனக்
    கழலும் கைவளை காரிகையாளுக்கே

விளக்கம்:
இறைவனுடன் சேராது ஏக்கத்தில் இருக்கும் தனது மகள், அந்த ஏக்கத்தினால் உடல் மெலிந்து தனது கை வளையல்கள் கழன்று வருந்தும் நிலை இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. குழல்=சுருண்ட முடியினை உடைய சடை தையல்=பெண், இங்கே பார்வதி தேவி; 

பொழிப்புரை:
தனது சுருண்ட சடைமுடியில் கொன்றை மலரையும், வில்வ இலைகளையும், ஊமத்தை  மலர்களையும் தாங்கியவனே, உள்ளங்கையினில் தீப்பிழம்பை ஏந்தியவாறு நடனம் ஆடுபவனே, உமை அம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் தாங்கியவனே, ஆவடுதுறை என்று அழைக்கப்படும் குளிர்ந்த தலத்தில் உறையும் அழகனே என்று, எந்நேரத்திலும் இறைவனை குறிப்பிட்டவாறு இருக்கும் எனது மகள், அவனுடன் இணையாத ஏக்கத்தினால் உடல் இளைத்து கைகள் மெலிந்து கை வளையல்கள் கழலும் நிலையில் இருக்கின்றாள். ஆவடுதுறை இறைவனே, நீர் தான் அவளது ஏக்கத்தினை போக்கி, அவள் உடல் நலத்துடன் இருக்குமாறு அருள் புரிய வேண்டும்.   

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.