69. நிறைக்க வாலியள் அல்லள் பாடல் - 7
கொண்டுள்ள காதலால்
பாடல் 7:
பஞ்சின் மெல்லடிப் பாவையோர் பங்கனைத்
தஞ்சம் என்று இறுமாந்து இவள் ஆரையும்
அஞ்சுவாள் அல்லள் ஆவடு தண்டுறை
மஞ்சனோடு இவள் ஆடிய மையலே
விளக்கம்:
மையல்=மயக்கம், காமத்தினால் ஏற்படும் மயக்கம்; மஞ்சன்=மைந்தன் என்பதன் போலி, வல்லமை உள்ளவன் என்று பொருள். பெருமானை அடைக்கலமாக அடைந்த ஆன்மா, மற்ற சிறு தெய்வங்களை மதிக்காமல் செருக்குடன் நடந்து கொள்ளும் நிலை இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. இதன் மூலம். சிவபெருமானைத் தஞ்சம் என்று நாம் அடைந்தால், மற்ற சிறு தெய்வங்களைத் தொழ வேண்டிய அவசியம் இல்லை என்று அப்பர் பிரான் நமக்கு அறிவுரை கூறுகின்றார்.
பொழிப்புரை:
பஞ்சு போன்று மெல்லிய பாதங்களை உடைய பார்வதி தேவியைத் தனது உடலில் ஒரு பாகமாகக் கொண்ட பெருமானைத் தஞ்சம் என்று அடைக்கலம் புகுந்த எனது மகள் வேறு எவரையும் மதிக்காமல் செருக்குடன் நடந்து கொள்கின்றாள். இந்த நிலைக்கு காரணம், இவள் சிவபெருமானுடன் கொண்டுள்ள காதலால், அவனுடன் நெருங்கி பழகுவதாக கற்பனை செய்து கொண்டு, அந்த நினைவுகள் தரும் மயக்கத்தில் ஆழ்ந்திருக்கும் இவளது நிலையே ஆகும்.
Advertisement