முகப்பு
தினம் ஒரு தேவாரம்

67.மாயிரு ஞாலம் எல்லாம் பாடல் - 2

பசுவுக்கு முக்தி கொடுத்து

Updated On : 6 அக்டோபர், 2017 at 10:37 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 9:53 PM

பாடல் 2

மடந்தை பாகத்தர் போலும் மான்மறிக் கையர் போலும்
குடந்தையில் குழகர் போலும் கொல்புலித் தோலர் போலும்
கடைந்த நஞ்சு உண்பர் போலும் காலனைக் காய்வர் போலும்
அடைந்தவர்க்கு அன்பர் போலும் போலும்
                                              ஆவடுதுறையனாரே

விளக்கம்

Advertisement

மடந்தை=உமையம்மை: சேக்கிழார் பெரிய புராணப் பாடலில் குறிப்பிட்டது போன்று, சிவபெருமான் பசுவுக்கு இங்கே அருள் புரிந்தார். அதனால் ஆவடுதுறை என்ற பெயர் ஏற்பட்டது. ஒரு சமயம் கயிலையில் சொக்கட்டான் ஆட்டம் ஆடிய போது ஏற்பட்ட பிணக்கால். உமை அம்மை பசுவாக இந்த தலம் வந்து சேர்ந்ததாகவும் கூறுவர். ஈசன் அம்பிகைக்கு காட்சி கொடுத்து அணைத்து எழுந்த கோலத்தில் இருந்ததால் அணைத்து எழுந்த நாயகர் என்றும் பசுவுக்கு முக்தி கொடுத்து உமை அம்மை சுயரூபம் பெற்றமையால் கோமுக்தீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். அம்பிகை பசுவாக இந்தத் தலம் வந்து வழிபட்டமையால் கோகழி என்றும் இந்த தலம் அழைக்கப்படுகின்றது. இந்த தலத்தில் அணைத்து எழுந்த நாயகராக அருள் புரிந்தவர், கச்சி ஏகம்பத்தில் தழுவக் குழைந்த நாதராக வெளிப்பட்டவர், அண்ணாமலையில் உமையம்மையைத் தனது உடலில் ஒரு பாகத்தில் ஏற்று அருள் புரிகின்றார். உடலில் சரி பாதியை அளித்து, தனக்குச் சமமாக அம்மையை உயர்த்தியதைவிட பெரிய பேறு ஏதும் இல்லை என்பதால், அம்மைக்கு அருள் புரிந்த தலத்துப் பாடலில், மடந்தை பாகத்தர் என்று இறைவனின் பேரருளை அப்பர் பிரான் குறிப்பிட்டார் போலும். குழகர் = அழகர்.

பொழிப்புரை

உமை அம்மையை, தனது உடலின் ஒரு பாகமாக ஏற்றுக் கொண்டவர் சிவபெருமான்; அவர் தன்னை நோக்கி பாய்ந்து வந்த மான் கன்றினைத் தனது கையில் ஏந்தினார்; அவர்தான் குடந்தையில் அழகராக காட்சி தருகின்றார்: அவர் தன்னைக் கொல்ல வந்த புலியினைக் கொன்று அதன் தோலை ஆடையாக அணிந்து கொண்டவர்; தேவர்களும் அசுரர்களும் ஒன்று சேர்ந்து பாற்கடலைக் கடைந்தபோது எழுந்த நஞ்சினை உண்டு உலகத்தை காப்பாற்றியவர்; சிறுவன் மார்க்கண்டேயனுக்காக காலனைக் காய்ந்தவர்; ஆவடுதுறையில் அமர்ந்துள்ள அவர், தன்னைச் சரண் அடையும் அடியார்களுக்கு அருள்கள் வழங்கும் அன்பராக உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.