67.மாயிரு ஞாலம் எல்லாம் பாடல் - 4
சிவபெருமானின் புகழினை
மழுவமர் கையர் போலும் மாது அவள் பாகர்
போலும்
எழுநுனை வேலர் போலும் என்பு கொண்டு
அணிவர் போலும்
தொழுது எழுந்தாடிப் பாடி தோத்திரம் பலவும்
சொல்லி
அழுமவர்க்கு அன்பர் போலும் ஆவடுதுறையனாரே
விளக்கம்
எழுநுனை = கூறிய நுனி. சிவபெருமானின் புகழினைக் கேட்கும்போதும், சொல்லும்போதும் வாய் விட்டு அழுதல் என்பது சிறந்த அடியார்களின் குணங்களில் ஒன்றாகும். நமச்சிவாயப் பதிகத்தின் முதல் பாடலில் காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி சிவபெருமானின் திருநாமத்தை ஓதும் அடியார்கள் நன்னெறியை அடைவார்கள் என்று சம்பந்தர் கூறுகின்றார். இறைவனை நாம் அதிகமாக தொழத்தொழ, நமக்கு இறைவனிடத்தில் அன்பு அதிகமாகின்றது. அந்த இறையன்பு வலுப்பெறும்போது அது அழுகையாக வெளிப்படுகின்றது. இந்த நிலையினை தான் அடையவில்லையே என்று மணிவாசகர் ஏங்குவதை நாம் அவரது திருச்சதகத்தின் முதல் பாடலில் உணரலாம். அரும்புதல் = புளகாங்கிதம் கொள்ளுதல். விரை = நறுமணம். ததும்பி = இமைகளால் அடக்க முடியாத அளவுக்கு கண்ணீர் ததும்பி பெருகுதல்.
மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து உன் விரை ஆர்
கழற்கு என்
கை தான் தலை வைத்து கண்ணீர் ததும்பி
வெதும்பி உள்ளம்
பொய் தான் தவிர்ந்து உன்னப் போற்றி சயசய
போற்றி என்னும்
கை தான் நெகிழவிடேன் உடையாய் என்னைக்
கண்டு கொள்ளே
Advertisement
இறை உணர்வு வலுப்பெற்று அழுகையாக மாறும்போது, அடியார்களின் புலன்களும் பொறிகளும் அந்தக்கரணங்களும் செயலிழந்துவிடுகின்றன. இந்த நிலையையும் தாண்டும் அடியார்கள் நான், எனது என்ற எண்ணங்களை மறந்து தற்போதம் நீங்கியவர்களாய் துவண்டு விடும் நிலையை அடைகின்றார்கள். இதைத் தான், தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள் என்று அப்பர் பிரான், முன்னம் அவனுடைய என்று தொடங்கும் பாடலில் கூறுகின்றார். இந்த மூன்று நிலைகளிலும் உள்ள அடியார்கள் (தொழுகையர், அழுகையர், துவள்கையர்), சிவபிரானின் அருள் வேண்டி வெளியே நிற்பதாக திருப்பள்ளியெழுச்சி பதிகத்தில் மணிவாசகர் கூறுகின்றார். இந்த மூன்று நிலைகளில் உள்ள அடியார்கள் தவிர, யாழ் வீணை ஆகிய இசைக்கருவிகள் வாசிக்கும் அடியார்கள், வேதங்கள் மற்றும் தோத்திரங்கள் சொல்லி இறைவனை வேண்டும் அடியார்கள், மலர் மாலைகளை கையில் ஏந்திய அடியார்கள், தலையின் மேல் கைகளை வைத்து கூப்பித் தொழும் அடியார்கள் என பலரும், விடியற்காலை நேரத்தில் இறைவனை தரிசிக்க காத்து நிற்கும் காட்சி இங்கே விவரிக்கப்படுகின்றது.
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் இருக்கொடு
தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர் கையினர் ஒருபால் தொழுகையர்
அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந்துறை உறை சிவபெருமானே
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே
சிவபெருமானைத் தொழும் அiடியார்கள் நெஞ்சம் உருகி அழுவதால் அடையும் பயன் பல திருமுறைப் பாடல்களில் கூறப்படுகின்றது. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காணலாம். சில பாடல்களில் சிவபெருமானை நாம் அழுது தொழ வேண்டும் என்றும் உணர்த்தப்படுகின்றது. குரங்காடுதுறை பதிகத்தின் (5,63) பாடலில், அப்பர் பிரான், சிவபிரானின் அடியார்களை தனது சுற்றம் என்று அழைக்கின்றார். தொண்டர்களே, நீங்கள் அனைவரும், சிவபெருமான் இருக்கும் இடமாகிய குரங்காடுதுறையினை அடைந்து, ஆங்கே அனைவரும் ஒன்று சேர்ந்து சிவபெருமானின் புகழைப் பாடிக்கொண்டே ஆடுமின், அழுமின், அவனது திருப்பாதங்களைத் தொழுமின் என்று கூறுகின்றார். எதற்காக, அழுதால் அவனைப் பெறலாம் என்பதற்காக.
நாடி நம் தமர் ஆயின தொண்டர்கள்
ஆடுமின் அழுமின் தொழுமின் அடி
பாடுமின் பரமன் பயிலும் இடம்
கூடுமின் குரங்காடு துறையையே
மேற்கண்ட பாடலில் மண்ணுலகத்தவரை ஆடிப் பாடி, அழுது இறைவனின் திருவடிகளைத் தொழச் சொல்லும் அப்பர் பிரான், ஆரூர் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றில் (6.25.2) தேவர்கள் ஒன்று கூடி, தங்கள் தலைகளை சாய்த்து இறைவனை வணங்கி, அழுதவாறு சிவபெருமானின் திருவடிகளுக்கு பூஜை செய்கின்றார்கள் என்று கூறுகின்றார். தனது நெஞ்சத்தை நோக்கிச் சொல்லும் பாடலாக அமைந்திருந்தாலும், நமக்கு அறிவுரை கூறும் பாடலாக இதனை நாம் கருத வேண்டும். நெஞ்சமே, தேவர்களும் ஒன்று கூடி வணங்கும் ஆரூர் பெருமானை வணங்காமல் நான் கெடுகின்றேன். என் மீது உனக்கு பழைய பகை ஏதும் உள்ளதா, ஏன் இவ்வாறு பயன்படாது ஒழிந்து, இளைய மகளிர் என்னை இகழும் நிலைக்கு என்னைத் தள்ளுகின்றாய் என்று அப்பர் பிரான் நெஞ்சினை நோக்கி கேள்வி கேட்கின்றார்.
எழுது கொடியிடையார் ஏழை மென் தோள்
இளையார்கள் நம்மை இகழா முன்னம்
பழுது பட நினையேல் பாவி நெஞ்சே பண்டு தான்
என்னோடு பகை தான் உண்டோ
முழுதுலகில் வானவர்கள் முற்றும் கூடி முடியால்
உற வணங்கி முற்றம் பற்றி
அழுது திருவடிக்கே பூசை செய்ய இருக்கின்றான்
ஊர் போலும் ஆரூர் தானே
நான் பொய்யனாக இருந்தாலும், எனது நெஞ்சமும் நான் உன்மேல் வைத்துள்ள அன்பும் பொய்யாக இருந்தாலும், வினைகளால் பிணிக்கப்பட்டு வருந்தும் நான் உன்னை நினைத்து அழுகின்றேன், நீ எனக்கு அருளவேண்டும் என்று பாடி, நம்மையும் அந்த வழியில் அழைத்துச் செல்லும் மணிவாசகரின் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
யானே பொய் என் நெஞ்சும் பொய் என் அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே
தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன் உன்னை வந்து உறுமாறே
பொழிப்புரை
கையில் மழுப்படை ஏந்தியவராயும், பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகமாகக் கொண்டவரும் ஆகிய சிவபெருமான், கூரிய நுனியை உடைய சூலத்தைக் கையில் கொண்டுள்ளார். எலும்பு மாலையை அணிந்துள்ள அவர், தன்னை கீழே விழுந்து தொழுது எழுந்து, ஆடியும் பாடியும், அழுதும் தோத்திரம் சொல்லியும் வணங்கும் அடியார்களுக்கு அன்பராக இருக்கின்றார். அவர்தான் ஆவடுதுறை தலத்தில் உறைகின்றார்.