67.மாயிரு ஞாலம் எல்லாம் -பாடல் 6
முனிவர்களிடம் பெற்ற சாபத்தால்
வக்கரன் உயிரை வவ்வக் கண்மலர் கொண்டு போற்றச்
சக்கரம் கொடுப்பர் போலும் தானவர் தலைவர் போலும்
துக்கமா மூடர் தம்மைத் துயரிலே வீழ்ப்பர் போலும்
அக்கு அரை ஆர்ப்பர் போலும் ஆவடுதுறையனாரே
விளக்கம்
சிசுபாலனின் தோழன் தந்தவக்ரனை, வக்கரன் என்று ஆழ்வார்கள் திவ்ய பிரபந்தத்தில் குறிப்பிடுகின்றார்கள். சிசுபாலனை திருமணம் புரியவிருந்த ருக்மிணியை, கண்ணபிரான் கோயிலில் சந்தித்த பின்னர், அவளுடன் தேரில் சென்றபோது, கண்ணனைத் தடுக்க முயற்சி செய்தவர்களில் ஒருவனாக தந்தவக்ரன் கருதப்படுகின்றான். ருக்மணியின் தமையன் ருக்மியையும் அவனது தோழர்களையும் போரில் தோற்கடித்த கண்ணன், ருக்மிணியுடன் துவாரகை சென்று அங்கே அவளை திருமணம் செய்கின்றான். வைகுந்தத்தில் பணி புரிந்த காவலர்கள், முனிவர்களிடம் பெற்ற சாபத்தால், இரணியன் மற்றும் இரண்யாக்ஷனாகவும், அடுத்த பிறவியில் இராவணன் மற்றும் கும்பகர்ணனாகவும், மூன்றாவது பிறப்பில் சிசுபாலன், தந்தவக்ரனாக பிறக்கின்றார்கள். மூன்று பிறவிகளிலும் திருமாலால் கொல்லப்பட்டு, இறுதியில் வைகுந்தம் சென்று அடைகின்றார்கள். சிசுபாலனைக் கொன்ற சக்கரப்படை, வக்கரனைக் கொல்வதற்கும் பயன்பட்டது போலும். தன்னிடம் இருந்த சிறந்த படையாகிய சக்கராயுதத்தையே தானமாக அளித்ததால், தானம் அளிப்பவரின் தலைவர், என்று சிவபெருமானை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.
Advertisement
கற்றவர்கள் சிவபெருமானை தொழுது போற்றுவதாக பல தேவாரப் பாடல்களில் குறிப்பிடப் படுகின்றது. எனவே கற்றவர்களுக்கு எதிரான மூடர்களுக்கு நாம் எதிர்மறைச் செயலை இணைக்க வேண்டும். சிவபெருமானைத் தொழாத காரணத்தால், மூடர்கள் தங்கள் வாழ்க்கையில் உய்யும் வாய்ப்பினை இழந்து மறுபடியும் மறுபடியும் இறந்தும் பின்னர் பிறந்தும் துயரிலே வாழ்கின்றார்கள் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். பிறவிக் கடலில் ஆழ்ந்து இருப்பது தான் பெரிய துயரமாகவும், பிறவிப்பிணிதான் பெரிய நோயாகவும் அருளாளர்களால் கருதப்படுகின்றன.
கற்றவர்கள் சிவபெருமானை தொழுது ஏத்துகின்றார்கள் என்று குறிப்பிடும் சில தேவாரப் பதிகங்களை நாம் இங்கே காணலாம். நமச்சிவாயப் பதிகத்தின் முதல் பாடலில் (7.48.1) சுந்தரர் பாண்டிக்கொடுமுடிப் பெருமானை கற்றவர்கள் தொழுது ஏத்துவதாக கூறுகின்றார்.
மற்றுப் பற்று எனக்கின்றி நின் திருப்பாதமே மனம்
பாவித்தேன்
பெற்றலும் பிறந்தேன் இனிப் பிறவாத தன்மை வந்து
எய்தினேன்
கற்றவர் தொழுது ஏத்தும் சீர்க் கறையூரில் பாண்டிக்
கொடுமுடி
நற்றவா இனி நான் மறக்கினும் சொல்லும் நா
நமச்சிவாயவே
கழுமலத்து இறைவனை கற்றவர்கள் பணிந்து ஏத்துவதாக சம்பந்தர் கூறும் பாடல் (1.129.11) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. தேவாரப் பதிகங்கள், அவற்றினை ஓதுவாருக்கு துணையாக இருக்கும் என்பது சொற்றுணை என்ற தொடரால் இங்கே உணர்த்தப்பட்டுள்ளது. தூமலராள் = திருமகள். செல்வம் அளித்து திருமகள் துணையாக இருப்பாள் என்று சம்பந்தர் கூறுகின்றார்.
கற்றவர்கள் பணிந்து ஏத்தும் கழுமலத்து ஈசன் தன்
தழல் மேல் நல்லோர்
நற்றுணையாம் பெருந்தன்மை ஞான சம்பந்தன் தான்
நயந்து சொன்ன
சொற்றுணை ஓர் ஐந்தினொடு ஐந்து இவை வல்லார்
தூமலராள் துணைவராகி
முற்றுலகம் அது ஆண்டு முக்கணான் அடி சேர
முயல்கின்றாரே
காட்டுப்பள்ளி பெருமானை கற்றவர்கள் கருதுவதாக அப்பர் பிரான் கூறும் பாடல் (5.84.5) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. உலக வாழ்க்கையும் சுற்றங்களும் நிலையற்றவை மற்றும் ஈசன் ஒன்றே நிலையானவன் என்பதையும் உணர்ந்த கற்றவர்கள் என்று கூறி, நாம் கற்க வேண்டியது என்ன என்பதையும் அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். துணை = மனைவி. அணைதல் = பொருந்துதல். நாம் இறக்கும் சமயத்தில் நம்முடன் பொருந்தி நமக்குத் துணையாக இருப்பவர் சிவபெருமான் ஒருவர் தான். அற்றபோது = இறக்கும் சமயத்தில்.
சுற்றமும் துணையும் மனை வாழ்க்கையும்
அற்ற போது அணையார் அவர் என்றென்றே
கற்றவர்கள் கருதும் காட்டுப்பள்ளிப்
பெற்றம் ஏறும் பிரான் அடி சேர்மினே
சிவநெறியைச் சாராதவர்கள் பிறப்பிறப்புச் சுழலில் அகப்பட்டு, அதிலிருந்து விடுதலை பெற முடியாமல் தவிப்பார்கள் என்று சொல்வது நமக்கு அப்பர் பிரானின் திருத்தாண்டகப் பாடல் ஒன்றினை (6.95.6) நினைவூட்டும். அளியற்றார் = சிவபெருமானது திருவருளை இழந்தவர்கள்.
திருநாமம் அஞ்செழுத்தும் செப்பாராகில் தீவண்ணர்
திறம் ஒருகால் பேசாராகில்
ஒருகாலும் திருக்கோயில் சூழாராகில் உண்பதன் முன்
மலர் பறித்திட்டு உண்ணாராகில்
அருநோய்கள் கெட வெண்ணீறு அணியாராகில்
அளியற்றார் பிறந்தவாறு ஏதோ என்னில்
பெருநோய்கள் மிக நலியப் பெயர்த்தும் செத்தும்
பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே
பொழிப்புரை
தனது கண்ணினை நோண்டி எடுத்து, ஆயிரம் என்ற எண்ணிக்கையில் குறைந்த மலருக்கு பதிலாக அர்ச்சனை செய்த திருமாலுக்கு, வக்கரன் என்ற அரக்கனைக் கொல்வதற்கு உதவியாக சிவபெருமான் சக்கரம் கொடுத்தார். இவ்வாறு கிடைத்தற்கு அரிய படையினை, அடுத்தவருக்கு கொடுத்த சிவபெருமான், வள்ளல்களில் தலையாய வள்ளல் ஆவார். அக்கு மணியினை தனது இடுப்பினில் அணியும் சிவபெருமான், கல்லாத மூடர்கள் என்றும் பிறவிப் பிணியால் பீடிக்கப்பட்டு துயரத்தில் அழுந்துமாறு செய்வார். எனவே நாம் கற்றவர்கள் வழியில் சென்று ஆவடுதுறையில் உள்ள பெருமானைத் தொழுது, நம்மை வருத்தும் பிறவிப் பிணியினைத் தீர்த்துக் கொள்வோம்.