67.மாயிரு ஞாலம் எல்லாம் - பாடல் 7
விடையார் கொடியன்
விடைதரு கொடியர் போலும் வெண்புரி நூலர் போலும்
படைதரு மழுவர் போலும் பாய்புலித் தோலர் போலும்
உடைதரு கீளர் போலும் உலகமும் ஆவர் போலும்
அடைபவர் இடர்கள் தீர்க்கும் ஆவடுதுறையனாரே
விளக்கம்
சிவபெருமானின் கொடியில் நந்தி உருவம் இருக்கும். இந்த செய்தியும் பல தேவாரப் பாடல்களில் சொல்லப்படுகின்றது. கொடி மேல் ஏறு கொண்டவன் என்று சம்பந்தர் குறிப்பிடும் நெடுங்களப் பதிகத்தின் பாடல் (1.52.7) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. பெருமான் அணிந்த திருநீற்றினை, சந்தனத்தைவிட நறுமணம் வாய்ந்தது என்று கருதி அடியார்கள் விரும்பி பூசிக்கொள்வதாக சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார்.
Advertisement
கூறு கொண்டாய் மூன்றும் ஒன்றாக் கூட்டி ஓர்
வெங்கணையால்
மாறு கொண்டார் புரம் எரித்த மன்னவனே கொடிமேல்
ஏறு கொண்டாய் சாந்தம் ஈது என்று எம் பெருமான் அணிந்த
நீறு கொண்டார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே
திருவாரூர் மீது அருளிய போற்றித் தாண்டகத்தின் பாடல் ஒன்றினில் (6.32.9) சேவார்ந்த வெல்கொடியாய் என்று குறிப்பிடுவதை நாம் கீழ்க்கண்ட பாடலில் காணலாம். புத்தேளிர் என்றால் தேவர்கள் என்று பொருள்.
பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி புத்தேளிர்
போற்றும் பொருளே போற்றி
தேவார்ந்த தேவர்க்கும் தேவே போற்றி திருமாலுக்கு ஆழி
அளித்தாய் போற்றி
சாவாமே காத்து என்னை ஆண்டாய் போற்றி சங்கு ஒத்த
நீற்று எம் சதுரா போற்றி
சேவார்ந்த வெல்கொடியாய் போற்றி போற்றி
திருமூலட்டானனே போற்றி போற்றி
சுந்தரர் தனது திருவொற்றியூர் பதிகத்தின் பாடலில் (7.91.6) விடையார் கொடியன் என்று சிவபெருமானை குறிப்பிடுகின்றார். அப்பர் பிரான், இந்த பதிகத்துப் பாடலில் கூறுவது போன்று, தன்னைச் சரண் அடைபவருக்கு உதவி புரியும் பெருமான் என்று சுந்தரரும் இங்கே கூறுகின்றார்,
படையார் மழுவன் பால் வெண்ணீற்றன்
விடையார் கொடியன் வேத நாவன்
அடைவார் வினைகள் அறுப்பான் என்னை
உடையான் உறையும் ஒற்றியூரே
மணிவாசகர் பொற்சுண்ணம் பதிகத்தில், சிவபெருமானை சேவினை அகத்தில் ஏந்திய கொடி உடையவன் என்று கூறுகின்றார். சே = எருது. சேவகன் = வீரன்.
ஆவகை நாமும் வந்து அன்பர் தம்மோடு ஆட்செய்யும்
வண்ணங்கள் பாடி விண்மேல்
தேவர் கனாவிலும் கண்டறியாச் செம்மலர் பாதங்கள்
காட்டும் செல்வச்
சே அகம் ஏந்திய வெல்கொடியான் சிவபெருமான் புரம்
செற்ற கொற்றச்
சேவகன் நாமங்கள் பாடிப் பாடிச் செம்பொன் செய் சுண்ணம்
இடித்தும் நாமே
கீள் என்றால் கிழித்த துணிக் கயிறு என்று பொருள். கீளார் கோவணம் உடுத்தவன் என்று பல திருமுறைப் பாடல்களில் கூறப்படுகின்றது. எனவே கீள் என்று குறிப்பிட்டால், கோவணத்தையும் சேர்த்து குறிப்பிடுவதாக நாம் கொள்ளவேண்டும். கோவணத்தை கீளில் அணியப்பட்ட உடை என்று சம்பந்தர் கோலக்கா பதிகத்தின் (1.23) முதல் பாடலில் கூறுகின்றார்.
மடையில் வாளை பாய மாதரார்
குடையும் பொய்கை கோலக்கா உளான்
சடையும் பிறையும் சாம்பல் பூச்சும் கீள்
உடையும் கொண்ட உருவம் என்கொலோ
பொழிப்புரை
நந்தி வடிவம் எழுதப்பெற்ற கொடியை உடையவனாய், வெண்ணிற பூணூலை அணிந்தவனாய், மழுப்படையை கையில் ஏந்தியவராய், பாயும் இயல்பினைக் கொண்ட புலியின் தோலை உடுத்தவராய், கீளினையும் கோவணத்தையும் உடையாக அணிந்தவராய், எல்லா உலகங்களாக இருப்பவரும் ஆகிய சிவபெருமான், தன்னைச் சரண் அடையும் அடியார்களின் இடர்களைத் தீர்க்கின்றார். அவர்தான் ஆவடுதுறை தலத்தில் உறைகின்றார்.