முகப்பு
தினம் ஒரு தேவாரம்

69. நிறைக்க வாலியள் அல்லள் பாடல் - 3

அன்பின் ஆழத்தை

Updated On : 6 அக்டோபர், 2017 at 10:31 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 10:02 PM

பாடல் 3:    
    பாதி பெண் ஒரு பாகத்தன் பன்மறை
    ஓதி என் உளம் கொண்டவன் ஒண்பொருள்
    ஆதி ஆவடு தண்டுறை மேவிய
    சோதியே சுடரே என்று சொல்லுமே

விளக்கம்:
பதிகத்தின் முதல் இரண்டு பாடல்களில் தனது மகள் தேவையான பக்குவம் அடையாத நிலையில் இருப்பதையும், இறைவனின் முழுமையான அன்பின் ஆழத்தையும் உணராமல் இருப்பதாக குறிப்பிடும் தலைவியின் தாய், பதிகத்தின் எஞ்சியுள்ள பாடல்களில் தனது மகளின் செய்கைகளை உணர்த்துகின்றாள். ஒண்பொருள்=மேம்பட்ட பொருள்; தனது மகள் ஓயாமல் இறைவனின் திருநாமங்களைச் சொல்வதை உணர்த்தி அதன் மூலம் அவள் இறைவன் பால் கொண்டுள்ள ஆழ்ந்த அன்பினை தெரிவிக்கும் தாய், இறைவன் தனது மகளுக்கு அருள் புரிய வேண்டும் என்று வேண்டுகோளினை சொல்லாமலே உணர்த்தும் நயமான பாடல். 

பொழிப்புரை:
பெண்ணினைத் தனது உடலின் ஒரு பாகத்தில் கொண்டவனே என்றும், பல மறைகளை ஓதி எனது உள்ளம் கொள்ளை கொண்டவன் என்றும், மேம்பட்ட பொருளே என்றும், அனைத்துப் பொருட்களுக்கும் அனைத்து உயிர்களுக்கு ஆதியே என்றும், குளிர்ந்த ஆவடுதுறை தலத்தில் உறையும் சோதியே என்றும் ஒப்பற்ற சுடரே என்றும் இறைவனின் திருநாமங்களை இடைவிடாது சொல்பவளாக எனது மகள் இருக்கின்றாள். ஆவடுதுறை இறைவனே, அவளின் இந்த செய்கை அவள் உன்பால் கொண்டுள்ள தீவிர அன்பினை வெளிப்படுத்துகின்றது. எனவே இறைவா நீ அவளை ஆட்கொண்டு அருள வேண்டும்.  

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.