63. மூவிலை நற்சூலம் வலன் - பாடல் 4
அருள் வழங்குவதில் பித்தனைப் போன்று
விண்ணவனை மேரு வில்லா உடையான் தன்னை
மெய்யாகிப் பொய்யாகி விதி ஆனானைப்
பெண் அவனை ஆண் அவனைப் பித்தன் தன்னைப் பிணம்
இடுகாடு உடையானைப் பெரும் தக்கோனை
எண்ணவனை எண்திசையும் கீழும் மேலும் இரு விசும்பும்
இருநிலமும் ஆகித் தோன்றும்
கண்ணவனைக் கஞ்சனூர் ஆண்ட கோவைக் கற்பகத்தைக்
கண்ணாரக் கண்டு உய்ந்தேனே
விளக்கம்
விண் என்பது இங்கே சிவலோகத்தை குறிக்கும். விதி = நெறிமுறை, அறநெறி மற்றும் அருள்நெறி ஆகிய இரண்டு நெறிகள். தக்கோன் = தகுதியை உடையவன். தனது அடியார்களுக்கு, அருள்வதில் எல்லையில்லா மகிழ்ச்சி கொண்டு வரைமுறையின்றி அருள் செய்யும் இறைவனை பித்தன் என்று அப்பர் பிரான் அழைக்கின்றார்.
Advertisement
பொழிப்புரை
அடியார்கள் விரும்பும் சிவலோகத்தை உடையவனாக இருப்பவனும், மேரு மலையினை வில்லாக வளைத்து திரிபுரத்தவர்களுடன் நடைபெற்ற போரினில் பயன்படுத்தியவனும், தனது அடியார்களுக்கு உண்மைப் பொருளாகவும், அல்லாதார்க்கு இல்பொருளாகவும் இருப்பவனும், அறநெறியாகவும் அருள்நெறியாகவும் இருப்பவனும், பெண்ணாகவும் ஆணாகவும் தோன்றுபவனும், அடியார்களுக்கு அருள் வழங்குவதில் பித்தனைப் போன்று செயல்படுபவனும், பிணத்தைப் புதைக்கும் இடுகாட்டினைத் தனது இருப்பிடமாகக் கொண்டவனும். பெருமைக்குரிய தகுதிகளை உடையவனும், எண்ணாக விளங்குபவனும், எட்டு திசைகள் மற்றும் கீழ் மேல் திசைகள் என்று பத்து திசைகளாக இருப்பவனும், ஆகாயமாகவும் பரந்த நிலமாகவும் இருப்பவனும், அனைவர்க்கும் கண் போன்று அரியவனும், கஞ்சனூர் தலத்தை ஆளும் இறைவனாக இருப்பவனும் ஆகிய கற்பகத்தை அடியேன் எனது கண்கள் குளிரக் கண்டு உய்வினை அடைந்தேன்.