முகப்பு
தினம் ஒரு தேவாரம்

64. நெற்றி மேல் கண்ணினானே - பாடல் 1

நெற்றியில் கண் உடையவனே

Updated On : 1 ஜூலை, 2017 at 11:24 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 8:12 PM

(கோடிகா – நேரிசை)

முன்னுரை

திருச்செம்பொன்பள்ளி மற்றும் மயிலாடுதுறை தலங்களில் இறைவனை தரிசித்து, பதிகங்கள் பாடி துதித்த பின்னர், ஆவடுதுறை செல்லும் வழியில் அப்பர் பிரான் கோடிகா சென்றதாக பெரிய புராணம் கூறுகின்றது. இந்த பெரிய புராணப் பாடலில் உள்ள பரமர் பதி பலவும் என்ற சொற்றொடர் திருமணஞ்சேரி, பந்தணைநல்லூர், அன்னியூர், கடம்பூர், ஓமாம்புலியூர், திருமங்கலக்குடி, ஆப்பாடி, கஞ்சனூர், ஆகிய தலங்களை குறிப்பதாக உரை ஆசிரியர்கள் கருதுகின்றார்கள். கஞ்சனூர் தலம் கோடிகா தலத்திலிருந்து மூன்று கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய மூன்று
பதிகங்கள் நமக்கு கிடைத்துள்ளன. 

Advertisement

மேவு புனல் பொன்னி இரு கரையும் சார்ந்து விடை உயர்த்தார்                 
        திருச்செம்பொன்பள்ளி 
கா உயரும் மயிலாடுதுறை நீள் பொன்னிக் கரைத் துருத்தி
        வேள்விக்குடி எதிர்கொள்பாடி பாடி
பாவுறு செந்தமிழ் மாலை பாடிப் போற்றிப் பரமர் திருப்பதி
        பலவும் பணிந்து போந்தே
யாவுறும் அஞ்சாடுவார் கோடிகாவில் அணைந்து பணிந்து
                        ஆவடுதண்துறையைச் சார்ந்தார் 

பாடல் 1

நெற்றி மேல் கண்ணினானே நீறு மெய் பூசினானே 
கற்றைப் புன் சடையினானே கடல் விடம் பருகினானே
செற்றவர் புரங்கள் மூன்றும் செவ்வழல் செலுத்தினானே
குற்றமில் குணத்தினானே கோடிகா உடைய கோவே

விளக்கம்

செற்றவர் = பகைவர். புன்சடை = பொன் நிறத்தில் உள்ள சடை. பெருமானின் எட்டு குணங்கள் குற்றமில் குணங்கள் என்று இந்த பாடலில் உணர்த்தப்படுகின்றன. திருக்குறள், கடவுள் வாழ்த்தில் இடம் பெறும் எண்குணத்தான் என்ற தொடருக்கு பரிமேலழகர் தனது உரையில் கூறும் குணங்களை, பெருமானின் குணங்களாக சைவ சித்தாந்தம் கூறுகின்றது, அந்த எட்டு குணங்களாவன, தன் வயத்தனாதல், தூய உடம்பினனாக இருத்தல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல், பேரருள் உடைத்தல், முடிவில்லாத ஆற்றல்
உடைமை, மற்றும் வரம்பு இல்லாத இன்பம் உடைத்தல், பல பாடல்களில் இறைவனை எண்குணத்தான் என்று நால்வர் பெருமானர்கள் குறிப்பிடுகின்றார்கள். 

பொழிப்புரை

வேறு எவர்க்கும் இல்லாத வகையில் நெற்றியில் கண் உடையவனே, திருநீற்றினை உடலெங்கும் பூசியவனே, பொன் நிறத்தில் அடர்ந்து காணப்படும் சடையை உடையவனே, அனைவரையும் அஞ்சி ஓடுமாறு செய்த பாற்கடலிலிருந்து எழுந்த விடத்தை பருகியவனே, பகைவர்களாகிய முப்புரத்து அரக்கர்களின் கோட்டைகள் மூன்றினையும் தீயால் எரித்து அழித்தவனே, குற்றமில்லாத எட்டு குணங்களை உடையவனே, நீ கோடிகா தலத்தின் தலைவனாக விளங்குகின்றாய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.